26 ஜனவரி 2019

பொண்டாட்டி நாவல் - அராத்து

ஃபேஸ்புக்கில் சிலர் பதிவுகளை பின்தொடர்வதில் பல அனுகூலங்கள், எந்த புத்தகம் ஓசியில் கிடைக்கும், எதற்கு டிஸ்கவுண்ட், புதிய புத்தங்களைப் பற்றிய குறிப்புகள் போன்றவற்றைதெரிந்து கொள்ளலா. ஆன்லைனில் மட்டுமே புத்தகம் வாங்கும் போது இது போன்ற பதிவுகளே நமக்கு துணை. ஜெயமோகன், ஆர்.வி, பா.ரா, ஹரன்பிரசன்னா என்று பலரின் பரிந்துரைகளை நம்பி  புது / தெரியாத தலைப்புகளில் வரும் புத்தகங்களை   வாங்குவது வழக்கம். சாருநிவேதிதாவின் பரிந்துரைகளை ஓரளவிற்கு நம்பலாம் என்ற எண்ணம் இருந்தது. புயலிலே ஒரு தோணி, கரமுண்டார் வூடு அவரின் அறிமுகம். அவரது நண்பர் அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலுக்கு நோபல், ஆஸ்காரிலிருந்து கலைமாமணி வரை அனைத்து விருதுகளும் கிடைக்கும் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்படிப்பட்ட புத்தகத்தை படிக்காமல் விட்டால் வாசகனாக இருந்து என்ன பயன் என்று கிண்டில் அன்லிமிட்டடில் படித்தேன். 

இனி எவன் பரிந்துரையும் நம்பக்கூடாது என்ற எண்ணத்தை தந்துவிட்டது. இதற்கு முன்னால் ஒளிர்நிழல் என்ற ஒரு சூடு, இப்போது இது. முதல் பத்து பக்கங்களுக்குளே தூக்கம் சுழட்டியடித்தது. எப்புத்தகத்தையும் பாதி படித்துவிட்டு விடும் வழக்கமில்லை. எப்படியும் முழுவதையும் படித்துவிடுவது வழக்கம். எப்படிப்பட்ட மொக்கையாக இருந்தாலும் சரி. பேருந்தில் செல்லும் போது வழக்கமாக தூக்கம் வராது. படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, எழுத்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டது. பின் நவீனத்துவ நாவல் இல்லையா, எழுத்துக்கள் எல்லாம் சிறிது சிறிதாக உதிர்ந்து, மொபைலும் விழுந்து, பல நாள் கழித்து பேருந்தில் நல்ல தூக்கம். 

முயற்சியில் சற்றும் மனந்தளராத நான் அடுத்த நாள் இழுத்து பிடித்து படிக்க ஆரம்பித்தேன். 


நாவல் எங்காவது சுவரஸ்யமாக திரும்புமா என்ற ஆசையில் படித்தால், கடைசிவை திராபையாகவே போகின்றது. கிராமத்து அத்தியாயங்கள் படிக்கும் போது பின்னால் வயலின் சத்தம் ஒன்றுதான் பாக்கி. பொண்டாட்டிகள் பற்றிய கதை என்பதால் வரிசையாக வருகின்றார்கள், எவள் எவனை வைத்திருக்கின்றாள், எவனோடு எவள் ஓடிப்போனாள்,யார் யாருக்கு முன்னாள் காதலி அல்லது காதலன் என்பதை கவனமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,  இல்லை பின்னால் நாவல் புரியாமல் போகக்கூடும். நினைவில் வைத்துக் கொண்டாலும் சுவாரஸ்யத்துக்கு கியாரண்டி கிடையாது.

கதை நகரத்திற்கு வரும் போது குஷியாகிவிடுகின்றார் ஆசிரியர். சின்னய்யா, பெரியய்யா (டீவி சீரியல் நினைவில் வந்தால் தப்பில்லை, அப்படித்தான் இருக்கின்றது) என்பதிலிருந்து ஃப்ளிர்ட், சாட், வோட்கா என்று மாறுகின்றது. அதுமட்டும்தான்.  மற்றபடி இது கொஞ்சம் ரிச்சான சீரியல்.

நாவலின் உள்ளடக்கம் என்று எதுவும் கிடையாது, அவரே சொல்வது போல் ஃபேக் நாவல், இல்லை ஃபக் நாவல் என்றும் சொல்லலாம். அதுமட்டும்தான் விதவிதமாக வருகின்றது. எழுத்தாளரின் எழுத்து நடை, தாங்க முடியவில்லை. ஏற்கனவே அவரது சிறுகதை என்ற ஒன்றை விகடனில் படிக்க முயற்சி செய்து விட்டுவிட்டேன். விகடனின் இன்றைய தரத்திற்கு ஏற்றதுதான். அதீத சித்தரிப்புகள். ஒரு காட்சியை வாசகனின் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். அது சுத்தமாக இல்லை. கொட்டும் மழையில் நடந்து செல்லும் எருமையென போகின்றது எழுத்து நடை. நாம் சில விஷயங்களில்  முற்போக்காக்கும் என்று நம்பத்தலைப்படும் சாதரணர்களை ஆர்காஸம் அடையச்செய்யும் எழுத்துக்கள். நடுநடுவே வாசகனைப் பார்த்து பேசுவது வேறு. 

இறுதியில் அவரது எழுத்தை அவரே கொஞ்சம் நக்கல்டித்துக் கொள்கின்றார். நாவலின் இருக்கும் லாஜிக் பிழைகள் வேண்டுமென்றே வைத்துள்ளதாக; அதையெல்லாம் வாசகன் கண்டு பிடிக்க  நாவல் வரிக்குவரி படிக்க வைக்க வேண்டும், காட்சிகளை சித்தரிக்க வேண்டும், உரையாடல்கள் இயல்பாக இருக்க வேண்டும். கொட்டாவிக்கு நடுவில் படித்தால் என்ன லாஜிக் கண்ணில்படும். மற்ற எல்லாவற்றிலும் லாஜிக் இருப்பது போன்றும், டிவிஎஸ்50யின் வருடத்தில் லாஜிக் காணமல் போவது போல... 

நாவல் பிடிக்கவில்லை என்று கூறினால், திரைப்பட ரசிகர்களை விட பயங்கரமாக ரியாக்ட் செய்கின்றார்கள், ரசிக குஞ்சுகள். அவர்களுக்கு மட்டும் "சூப்பர். இதுமாதிரியே நிறைய படிங்க போதும்". ஏதோ இந்த ஒரு நாவல்தான் பெண்களைப் பற்றி பேசுவதாகவும், அது புரியாமல் பலர் இதை குற்றம் சொல்வதாகவும் எழுதியதை படிக்க நேர்ந்தது. பெண்களைப் பற்றி பேசுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமில்லை. ஆனால் என்ன பேசுகின்றது என்பது கேள்விக்குறி? பழைய வாரமலர் டைப் கதைகள். அதை மேட்டர் கதைகளின் மொழியில் எழுதினால் புரட்சிகர கதையாகிவிடுகின்றது. 

சாருநிவேதிதா பாணியில் எழுத நினைத்தாரோ என்ன எழவோ, குறை பிரசவமாகியிருக்கின்றது. சாருவின் எழுத்துக்கள் உங்களை சரளமாக படிக்க வைக்கும், அங்கங்கு துள்ளிவிழும் நக்கல்கள், கிண்டலகள் எல்லாம் இயல்பாக இருக்கும். இவர் அனைத்தையும் வலிய புகுத்துவதால் அந்நியமாக போகின்றது.  எஸ்.வி.சேகரின் நாடகத்தில் ஒருவர் வந்து அடிக்கடி ஏதாவது மெசேஜ் சொல்வார். அதுமாதிரி அங்கங்கு தத்துவவங்கள் வேறு. இயல்பாக வந்து விழுந்தால் பரவாயில்லை, எல்லாம் செயற்கை. உருப்படியாக ஏதுமில்லையா என்றால், ஊர் சுற்ற தேவையான சில விஷயங்கள் கிடைக்கும், தண்ணியடிப்பவர்களுக்கு சில ரெசிப்பிக்கள். 

ஒரு குப்பைக்கு இவ்வளவு பெரிதாக எழுதவேண்டுமா என்றால், தேவைதான். காரணம் சாருநிவேதிதா. பட்டுக்கோட்டை பிராபகரை நக்கலடிப்பது போன்று எழுதியிருந்தார். இது போன்ற புத்தகங்களை புகழும் அவர், பட்டுக்கோட்டை, ராஜேஷ்குமார் பற்றி பேசவே கூடாது. இந்த குப்பைக்கு அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. சுவாரஸ்யமாகவது எழுதுகின்றார்கள். அராத்துவை எல்லாம் எழுத்தாளராக நினைக்கும் அளவிற்கு என்னுடைய ரசனை கீழே வந்துவிடவில்லை. ஆனால் ஓரளவிற்கு நல்ல எழுத்தாளர் என்று நம்பப்படும் ஒருவர் , எழுத்தில் நான் சமரசம் செய்து கொள்ளாதவன் என்று அடிக்கடி தன்னைதான் சொல்லிக் கொள்ளும் ஒருவர் சிபாரிசு செய்யும் போது அதைப் பொருட்படுத்த வேண்டியிருக்கின்றது.  இனி இவர் சிபாரிசு செய்யும் புதியவ எழுத்தாளர்களை கண்டால் ஓடிவிடவேண்டியதுதான் என்று தோன்றும். அதோடு புத்தக ஆசிரியரும் இந்த நாவலைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார், ஏதோ நம்மால் ஆனது..

இந்த மார்க்கெட்டிங் உத்திகளில் விழுந்து காசு கொடுத்து வாங்கியிருந்தால் மனது மிக வருத்தப்பட்டிருக்கும், நல்ல வேளை. வாழ்க கிண்டில்.

வழக்கமாக இந்த புத்தகத்தை வாங்க என்று இணைப்பு கொடுப்பது வழக்கம், இதற்கு தேவைப்படாது. அந்தளவிற்கு மார்க்கெட்டிங். இன்னும் டீவி விளம்பரம் ஒன்றுதான் பாக்கி. தெருமுனையில் இருக்கும் டீக்கடையில் கேட்டுப்பாருங்கள் கிடைக்கலாம். இதை மற்ற எழுத்தாளர்களும் பின்பற்றலாம்.


2 கருத்துகள்:

  1. //அப்படிப்பட்ட புத்தகத்தை படிக்காமல் விட்டால் வாசகனாக இருந்து என்ன பயன் என்று கிண்டில் அன்லிமிட்டடில் படித்தேன். //

    கிண்டில் -- இதுல ஒரு 'இ'ய 'அ'வாக்கினா, உங்களுக்குள்ள உள்ள நையாண்டி தெரிக்கிறது ;)

    பதிலளிநீக்கு
  2. itharkarkuthaan naangal athai ellam padipathey illai...umma blogspot a padithaaley pothumaiya..oru naval paditha thriupthi!

    பதிலளிநீக்கு