27 டிசம்பர் 2019

ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்

காந்தியின் சர்ச்சைக்குரிய பரிசோதனைகளை வைத்து எழுதப்பட்ட புனைவு, ஆப்பிளுக்கு முன். தலைப்பை பைபிள் கதையிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நாவலை எழுதியுள்ளவர் சரவணகார்த்திகேயன். அவரது மற்ற புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது ஃபேஸ்புக் கருத்துக்களைப் பார்த்ததாலோ என்னவோ, அவரது எந்த எழுத்துக்களையும் படிக்க தோன்றவில்லை. ஒருவித எரிச்சலூட்டும் எழுத்துதான் இவருடையது. இருந்தும் படிக்க தோன்றியது கதையின் களம்தான். 

காந்தி மீது பலதரப்பட்ட பார்வை உண்டு. எந்தளவுக்கு அவர் புகழப்படுகின்றாரோ அதே அளவு விமர்சனமும் வைக்கப்படுகின்றது. பள்ளிப் பருவத்தில் அனைவருக்கும் அவர் ஒரு ஹீரோ. அதைத்தாண்டி பள்ளிகளில் ஏதும் கற்று தருவதில்லை. பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்கும் போது மெதுவாக அவர் மீது விமர்சனங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அவர் மீது அனைவருக்கும் ஏதாவது ஒரு விமர்சனம் இருக்கும். ஹிந்துத்துவர்களுக்கு அவர் பேசும் ஒரு பக்க மதச்சார்பின்மை, திராவிடக்கட்சியினர் காந்தியார் என்று ஒரு மார்க்கமாக அழைப்பார்கள், அப்படி அழைப்பதே கடுப்பாகத்தான் இருக்கும். அவர் மீது விமர்சனம் சற்றுமில்லாத அவரது பக்தர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு. அந்த பக்தர்களையே எரிச்சலடைய வைத்த விஷயம் அவரது பாலியல் சோதனைகள்.

வெறுமனே பாலியல் சோதனை என்றால் விபரீத அர்த்தம் வருகின்றது. அவர் செய்த சோதனைகள் எல்லாம் அவர் மீதுதான், ஆனால் அந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் உயிர் உள்ளவை. அவரது பேத்தி முறை கொண்ட மநு காந்தி அவருடன் இந்த சோதனைகளில் பங்கு பெற்றுள்ளார். அவரை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. 


காந்தி பிரம்மச்சர்யத்தை ஒரு முக்கிய விஷயமாக பார்க்கின்றார். பிரம்மச்சர்யம் என்பது ஒருவனது ஆத்ம பலத்தை கூட்டும் என்று முழுவதும் நம்புகின்றார். தன்னால் பிரம்மசர்யத்தை எந்தளவிற்கு கடைபிடிக்க முடிகின்றது என்பதை மநு காந்தி, ஆபா காந்தி, சுசீலா போன்ற அவரது சிஷ்யைகளுடன் பரிசோதித்து பார்க்கின்றார். பரிசோதனை என்பது அவர்களுடன் சேர்ந்து குளிப்பது, நிர்வாணமாக படுப்பது. ஒவ்வொருநாளும் அவர்கள் உணர்ந்ததை குறித்து வைக்க சொல்கின்றார். அவரும் செய்கின்றார். இவையனைத்தும் பலரால் பொதுவில் பகிரப்பட்டவை, காந்தியே அதை ரகசியமாக் செய்யவில்லை. அனைவரிடமும் தெரிவிக்கின்றார். 

இப்புனைவு அதன் அடிப்படையில்,  காந்தியை விட மநுவை மையமாக கொண்டே செல்கின்றது. தன் பரிசோதனையில் காந்திக்கு கூட சிறிது சந்தேகம் இருந்திருக்கலாம், ஆனால் மநுவிற்கு எவ்வித சந்தேகமும் இல்லை, காந்தியைப் இறுகப் பற்றிக் கொண்டு, எவ்வித சந்தேகமும் இன்றி  செல்கின்றார். காந்தி தன்னை அன்னையாக உணர்ந்தாரோ இல்லையோ, மநு காந்தியை ஒரு அன்னையாக கருதுகின்றார். 

காந்தியின் எளிமை மற்றவர்களுக்கு உண்டாக்கும் தொல்லை, அவரது பிடிவாதம். காந்தியின் ஆளுமை, அது மற்றவர்களின் வாழ்வில் உண்டாக்கும் பிரச்சினைகள், அவரது பக்தர்களுக்கு இடையிலான பூசல்கள். இவை அனைத்தும் அங்கங்கு பலரால் பல இடங்களில் பேசப்பட்டவை, அவற்றையும்  இதில் பயன்படுத்தியுள்ளார்.

இது ஒரு குறு நாவல், ஆனால் எடுத்து கொண்ட காலகட்டம் மிகப்பெரிது. காந்தி சிறைவைக்கப்பட காலகட்டம், நவகாளி, காந்தியின் இறுதி வரை செல்கின்றது. அதனாலேயே அனைத்தும் துண்டு துண்டாக இருக்கின்றது. பகுதிகளுக்கு மந்தியில் ஏதோ தொடர்பில்லாமல் தெரிகின்றது.  முக்கிய அம்சம், இறுதியில் வரும் தக்கர் பாபா காந்தி மற்றும் மநுவுடன் நடக்கும் உரையாடல்கள். 

எடுத்துக்கொண்ட களமே இந்நாவலை ஒரு முக்கிய நாவலாக்கின்றது. வித்தியாசமான கதைக்களம் என்று இதை ஒரு நல்ல முயற்சியாக கொள்ளலாம். ஆனால் ஒரு நாவலாக தோற்கின்றது. நமக்கு தெரிந்த பாத்திரங்களை புனைவில் நடமாட விடுவதில் இருக்கும் அபாயம், மிகுந்த ஆவணத்தன்மை வந்துவிடும். அதுவே இதில் நடந்துள்ளது. ஒரு நல்ல சினிமாவிற்கும், டாகுமெண்டரிக்கும் இருக்கும் வித்தியாசம். இது ஒரு டாக்குமெண்டரியாக மாறிவிட்டது. புலிநகக் கொன்றையில் பல வரலாற்று பாத்திரங்கள் வரும், பாரதி, வாவேசு அய்யர், சிவம், வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி. ஆனால் அனைவரும் உயிருள்ள பாத்திரங்களாக இருப்பார்கள். இப்புனைவில் காந்தியும், மநுவும் அப்படித் தோன்றவில்லை. மிகுந்த ஆவணத்தன்மை வந்தது போல தோன்றுகின்றது. பொங்கல் வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் படிக்கலாம் என்று நினைத்தால் கஷ்டம்தான்.

இந்த நாவலில் கூறப்பட்ட விவரங்களைப் பற்றி நான் அறிந்து கொண்டது ஜெயமோகனின் தளத்தில்.


மநுவின் புத்தகத்திலிருந்து பல பகுதிகளை இந்நாவலில் பயன் படுத்தியுள்ளார் போல.


2 கருத்துகள்:

  1. இப்படியொரு கதை இருப்பது பற்றித் தெரிந்து கொண்டேன்.  

    நலம்தானே?

    பதிலளிநீக்கு

  2. நலம்தான்.

    படித்த புத்தகங்களையே மீண்டும் படித்து கொண்டிருந்ததால் இந்தப் பக்கம் வர முடியவில்லை. இனி அடிக்கடி பார்க்கலாம். . . .

    பதிலளிநீக்கு