01 பிப்ரவரி 2024

தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

 தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாகத்தான் அறிமுகம். பலமுறை பார்த்த படம். சிற்சில இடங்கலை ஓட்டிவிட்டால் சலிக்காமல் பார்க்க முடியும். காரணம் எனக்கு பாலையா, நாகேஷ் & மகாதேவன். ஒரு நாவலை அல்லது தொடரை எப்படி கதையை மாற்றாமல், ஜீவனை கெடுக்காமல் எப்படி படமாக்க வேண்டும் என்பதை ஏ.பி. நாகராஜன் காட்டியுள்ளார். 

இந்த புத்தகம் பல ஆண்டுகள் அச்சில் கிடையாது. உறவினர் வீட்டில் ஒரிஜினல் பதிப்பு இருந்தது. பல வருடம் முன்பு வாங்கி படிக்கும் போது பிடித்திருந்தது. மீண்டும் படிக்க முடியவில்லை. கொடுத்த புத்தகத்தை திருப்பி கேட்கும் கெட்ட பழக்கம் எப்போது போகுமோ தெரியவில்லை. 

சமீபத்தில் விகடன் பதிப்பித்திருந்தது. விகடன் மாதிரியே அதே அளவு, அதே மாதிரி பேப்பர் எல்லாம். 

ஆர்வி அவர் தளத்தில் எழுதிய பதிவில் கூறியிருப்பதை முழுவதும் ஏற்று கொள்கின்றேன். வளவளதான் இருந்தாலும் ஜெயமோகன் கூறியிருப்பது போல இது சமூக ரொமான்ஸ் வகையில் சிறந்த நாவல் அ தொடர்கதைதான். 

நாவல் முழுவதும் ஒரே விஷயம்தான் தன் பிறப்பு அடையாளத்திலிருந்து வெளியே வரப் போராடும் ஒரு பெண், சந்தேகப்படும் ஆண். காலங்காலமான கதை. ஆனால் படிக்க வைப்பது அந்த தஞ்சாவூர் பின்புலம்தான். தாசிகுலம், அவர்கள் சந்தித்த அவமானங்கள், இசைகலைஞர்களுக்கு அன்று இருந்த மதிப்பு, மரியாதை, அன்றைய மிராசுகள், மைனர்கள், மகராஜாக்களின் போக்கு என்று அந்த காலகட்டத்தை பார்க்கத்தான் படிக்க வேண்டும். சினிமாத்தனமான காட்சிகள் பல உண்டு. 

இரண்டாவது பாத்திரங்களின் அமைப்பு, அனைத்து பாத்திரங்களையும் உயிருள்ள பாத்திரங்களாக உலவ விட்டுள்ளார். கதையின் நாயகன், நாயகி தவிர அனைத்து பாத்திரங்களையும் முழுமையாக படைத்திருக்கின்றார். நாவல் இரண்டுபாகங்களுடன் முடிந்திருக்க வேண்டும் சினிமா போல, கடைசி பகுதி எல்லாம் வளவள. கண்ணகி நாடகம், சிந்து, பண்டைய இலக்கியம் என்று எங்கெங்கோ போய் கொஞ்சம் கொட்டாவி வரவைக்கின்றது.

நாவலை படிக்கும் போது சிவாஜி, பத்மினி எல்லாம் நினைவிற்கு வருவதில்லை. சுப்பு காட்டும் சண்முகமும், மோகனாவும் வேறு. ஆனால் இரண்டு பாத்திரங்கள் மட்டும் படத்தில் உள்ளவர்கள்தான் கண்முன் வருகின்றார்கள். வைத்தி, வடிவு. ஜில்ஜில் ரமாமணி கூட படத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாக வரும். ஆனால் இந்த இரண்டையும் இவர்களை நினைவில் வைத்து அவர் எழுதினாரோ என்று தோன்றும் அளவிற்கு பின்னி எடுத்துள்ளனர்.  

புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். பழைய பதிப்பு வெறும் 250. அது கிடைத்தால் தவறாது படியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக