16 மார்ச் 2024

மிளகு - இரா. முருகன்

மிளகு என்றால் நமக்கு பொங்கலில் இருந்து பொறுப்பாக பொறுக்கி தூரப்போடும் ஒரு வஸ்து, இல்லை என்றால் ஜல்தோஷம் பிடித்தால் கஷாயம் வைக்க பயன்படும் ஒரு பொருள். பாரம்பர்யத்தை காப்போம் என்று குதிரைவாலி சோறு உண்பவர்கள், வெளியில் பனங்கல்கண்டு பால் குடிக்கும் போது அதில் கொஞ்சமே கொஞ்சம் போடப்படும் வஸ்து. ஆனால் மிளகு ஒரு காலத்தில் நாடுகளின் வர்த்தகத்தையே ஆட்டி வைத்துள்ளது. மிளகை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளார்கள், இன்றைய அரபு நாடுகள் பெட்ரோல் விற்று கொழிப்பது போல மிளகு விற்று கொழித்த குட்டி நாடுகள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு குட்டி நாட்டின் ராணி மிளகு ராணி.

இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது கொஞ்சம் அரிதான விஷயம், விதிவிலக்குகள் உண்டு. அப்படி வந்தாலும் மிக அதிக காலம் அவர்கள் ஆட்சி நீடித்தது இல்லை. பெரும்பாலான அரசிகள் கணவனை இழந்தபின் அடுத்த வாரிசு பட்டத்திற்கு வரும் வரை ஆட்சி பொறுப்பை பார்த்து கொண்ட கதைதான் அதிகம். சென்ன பைரவா தேவி, தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்து சுமார் 54 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

சாளுக்கிய வம்சத்த்தை சேர்ந்த இந்த அரசிக்கு அன்றைய போர்ட்ச்சுக்கல் அரசு மிளகு ராணி என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. இறுதியில் நெருங்கிய நட்பு நாடுகளால் விழுங்கப்பட்டு ஆட்சியையும், நாட்டையும் இழந்தார்.  அவர் கட்டிய மிர்ஜான் கோட்டையும், சதுர் முக பஸதியும்தான் இன்று மிச்சம்.

கமலஹாசனுடன் நடந்த ஒரு உரையாடலில் தோன்றிய கருவை விரித்து மிளகு என்ற ஒரு நாவலாக எழுதியுள்ளார் இரா. முருகன். கமல் எப்போதாவது செய்யும் சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று போல. 

மிளகு ராணி லிஸ்பன் நகருக்கு மிளகை ஹொன்னாவர் போன்ற துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்து வந்த கதையை பலவிதங்களில் எழுதலாம். இரா. முருகன் இதை அவரது வழக்கமான பாணியிலேயே எழுதியிருக்கின்றார். அரசூர் வம்சம் என்ற அவரது நாவலின் பாத்திரங்களை இதில் உலவவிட்டு, காலப்பயணம் என்ற ஒன்றை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான நாவலாக கொடுத்துள்ளார்.

நாவல் மிகப்பெரியது, 1100 பக்கங்களுக்கு மேலாக போகின்றது. அரசூர் வம்சத்தை சேர்ந்த ஒருவர் எப்படியோ ஒரு "போர்ட்டல்" வழியாக மிளகு ராணி காலத்திற்குள் போகின்றார், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வேறு ஒரு போர்ட்டல் வழி தற்காலத்திற்குள் வருகின்றார். நானூறு வருடங்களை இணைக்கும் கருவி அந்த பரமன்.

நாவல் ஒரு கதை சொல்லல் போல இல்லை. சம்பவங்களின் கோர்வை. ஒரு காட்சி அதை முழுவதும் நமக்கு நடத்தி காட்டிவிட்டு அடுத்த காட்சிக்கு போய்விடும். முதல்காட்சி மிளகு ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம், முன்கதை பின்கதை எல்லாம் கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டும், அடுத்த பகுதி தற்காலத்தில் ஒரு வீட்டில் நடைபெறும் திவசம்.

இப்படி துண்டுகளால் கோர்க்கப்பட்டாலும் இறுதியில் கிடைப்பது ஒரு தரமான நாவல். சரித்திரகதைகளை சாண்டில்யன், கல்கி வழியாக படிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவர்களின் பாணி அதீத கற்பனை, நாடகத்தன்மை கொண்டது. சாமான்யர்களுக்கு இடமில்லை. சரித்திரத்தில் ராணிகளும், இளவரசர்களும் மட்டுமா இருந்தார்கள், சாதரணர்களுக்கும் பங்கு உண்டே. 

இந்த நாவலில் வரும் அரசும் பெரிய அரசு அல்ல, தேய்ந்து கொண்டிருக்கும் விஜய நகருக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி அரசு. மிர்ஜான் கோட்டை, கெருஸொப்பா, ஹொன்னாவர் முக்கிய இடங்கள்.  அதற்கு குட்டி அரசிற்கு ஏற்ற வகையில்தான் அந்த அரண்மனை சதிகளும், யுத்தங்களும் இருக்கும். இந்த நாவல் அதைத்தான் காட்டுகின்றது. வரலாற்றை தரையில் அமர்ந்து  பார்க்க சொல்கின்றது. இப்படியும் இருந்திருக்கலாமோ என்று. நடைமுறை சிக்கல்கள் என்று சில உண்டு. நாம் ராஜாக்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்ற கற்பனையை வைத்துள்ளோம், அதையும் இந்த நாவல் கொஞ்சம் காட்டுகின்றது. ஆனால் அது கூட கொஞ்சம் கேலியாக கூறப்படுவது போலத்தான் உள்ளது. இதிலும் சதி, உளவு, ஒற்றர்கள் எல்லாம் உண்டு, பிரம்மாண்டமாக இல்லாமல், யதார்தத அளவில் உள்ளது.

இரா. முருகனின் பாத்திர படைப்புகள் சுவாரஸ்யமானவை, இந்த நாவலும் அது மாதிரி பல சுவாரஸ்ய பாத்திரங்களை கொண்டுள்ளது. வைத்தியர், போர்ச்சுக்கல் அரச பிரதிநிதி இம்மானுவேல் பெத்ரோ, பிஷராடி வைத்தியர்.  மிளகு ராணி பாத்திரம் அவரது நினைவுகள் மூலமே வயதின் முன், பின் சென்று முழுமையடைகின்றது. 

தற்கால பாத்திரங்கள் அரசூர் வம்ச வாரிசுகள். அவரது வழக்கமான மாயாஜாலங்களும் உண்டு. பேய்மிளகு, ஆலப்பாடு வயசன், காலப்பயணம், காலயந்திரம் எல்லாம். 

ஜெயமோகன் இந்நாவலை பற்றி எழுதும் போது /இன்று இரா.முருகனின் நடையில் ஆசிரியர் அடிக்கும் ‘ஜோக்கு’கள் இல்லை. அவை ஒருவகையான அப்பாவித்தனம் அல்லது கட்டற்றதனத்துடன் வெவ்வேறு கதைச்சூழல்கள் மற்றும் கதாபாத்திரங்களை சார்ந்தே உருவாகியிருக்கின்றன./ என்கின்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. பல இடங்களில் அவை புகுத்தப்பட்டவை என்றே தோன்றுகின்றது.

முருகனின் அடுத்த நாவலில் இந்த வாடை என்ற வார்த்தை வராமல் எழுத வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு போடலாம். புத்தகம் முழுக்க இந்த வார்த்தை வந்து படிக்கும் போதே மூச்சு திணற வைக்கின்றது. ஒரு சூழலை விவரிக்க அப்பகுதி எப்படி தோற்றமளிக்கின்றது, என்னென்ன சத்தம் வருகின்றது, எப்படிபட்ட வாசனைகள் அ நாற்றங்கள் சூழ்ந்துள்ளது என்று விவரிக்கலாம். ஆனால் அவருக்கு இந்த நாற்றங்களை விவரிப்பதில் அதீத ஆர்வம் வந்துவிட்டது போல. பக்கத்திற்கு பக்கம் அந்த வாடை, இந்த வாடை. நாவலின் தலைப்பை விட இந்த வார்த்தைதான் அதிகம்.  துர்நாற்றம், வாசனை, வாடை என்று வார்த்தைகளை மாற்றியாவது போட்டிருக்கலாம். பூக்களின் வாடை, மிளகு வாடை, கையிடுக்கு வாடை, நெய் வாடை, ஏலத்தின் வாடை, அதீதமாகி விட்டது. 

நாவலை யதார்த்தமாக எழுதுவது என்பது சில இடங்களில் அதீதமாகிவிட்டது. எல்லா பாத்திரமும் அபான வாயு பிரிவதைப் பற்றியும், கொல்லைக்கு போவதைப் பற்றி யோசனை செய்வதும், அதைப்பற்றி விளக்கமாக பேசுவதும், வாயு பிரிவதையும் விளக்கும் அளவிற்கு யதார்த்தம் தேவையா. அவசரத்தைப் பற்றி நினைக்கும் பாத்திரம் கூட "சுக்கைதின்று உடனே வாயு பிரிகின்றதா" என்று பார்க்கும் அவசரம் இல்லை என்கின்றது. யுத்த ஆலோசனை செய்யும் ஒரு அரசர் நடு கூடாரத்தில் சத்தமாக குண்டு போடுகின்றார், இன்னொருவர் இருப்பா என்று பாதியில் கொல்லைக்கு போகின்றார். ஒன்றிரண்டு இடங்களில் இருந்தால் சுவாரஸ்யம்,  ஏராளமான வாயு. படிக்கும் போது என்னடா எவனும் குண்டு போடலையா என்று யோசிக்கும் அளவிற்கு போய்விட்டது.

ஆனால் இது அவரது வழக்கமான பாணி என்று விடவேண்டியதுதான். இது எல்லாம் இருந்தாலும் இது தவறவிடக்கூடாத நாவல்.

ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ளது. சுமாரன பதிப்பு. இரண்டு முறை படித்ததற்கே அட்டை எல்லாம் கசங்கி தொங்கிவிட்டது. 1400 விலையுள்ள புத்தகம், கெட்டி அட்டை இல்லாவிட்டா மிக விரைவில் சேதமாகிவிடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக