29 ஏப்ரல் 2013

சொர்க்கத் தீவு - சுஜாதா

சுஜாதாவின் முதல் சைன்ஸ் ஃபிக்‌ஷன். ஒரு அய்ங்காரின் (கவனிக்க அய்யங்காரின் அல்ல) அனுபவம். எதில் தொடராக வந்தது என்று தெரியவில்லை. எப்படி சைன்ஸ்ஃபிக்‌ஷன் என்பதற்கு பதில் சுஜாதாவின் முன்னுரையிலேயே இருக்கின்றது. ஒரு எதிர்கால சமுதாயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. 

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி. பழைய கம்ப்யூட்டர். (கதை எழுதப்பட்டது ). மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை எப்படி செல்வு செய்வது என்பதை வேலைக்கு நடுவில் யோசிக்கும் ஒருவன். அலமேலு என்னும் ஒரு மசால்வடை மூலம் அய்ங்காரை பிடித்துக் கொண்டு சொர்க்கத்தீவிற்கு செல்கின்றனர் ஒரு கூட்டம். அவனை தூக்கிக் கொண்டு போகக் காரணம் அங்கிருக்கும் ஒரு கம்ப்யூட்டரை சரி செய்ய.

முதலில் முரண்டு பிடிக்கும் அவன் மெதுவாக ஒத்துழைக்க எண்ணும் அவனுக்கு அத்தீவின் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. //இன்று எத்தனை பேர் பிறக்க வேண்டும், எத்தனை பேர் இறக்க வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லை. அதனால் சிலர் கொல்லப்படவில்லை// தீவின் தலைவர் ஆத்மா. ஒரே ஒரு மூன்றெழுத்துக்காரர். மற்றவர்கள் எல்லாம் பெரி, பொரி, சரி என்று இரண்டெழுத்து ஆசாமிகள்.

எல்லருக்கும் ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உறைவிடம். ஒரிஜினல் கம்யூனிசம். சர்வமும் கம்ப்யூட்டர் கையில். யார் இருக்கலாம், யார் இறக்கலாம், யார் என்னெ செய்ய வேண்டும் எல்லாம் கம்ப்யூட்டர். மனிதனின் ஆதார உணர்ச்சிகளை மருந்துகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் மட்டுப் படுத்தி ஒரு பொம்மைகளை போல வைத்திருக்கும் தீவு. சொர்க்கத்தீவு.

" ஆடு கூட தழை தின்னாமல் இருக்க நினைத்தால் தின்னாமல் இருக்கலாம், இங்கு மக்களால் அது கூட முடியாது".

"எங்கள் தமிழில் மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கிடையாது"

"அம்மா என்று கூறும் போதெல்லாம் அக்குழந்தைகளுக்கு மெல்லிய மின் அதிர்ச்சி குடுப்போம்"

இதில் ஒருவனுக்கு மட்டும் எப்படியோ சுய உணர்ச்சி வருக்கின்றது. அவனால் உணர்ச்சி பெற்ற அவன் காதலியும் இணைந்து சொர்க்கத்தீவை மாற்ற முயன்று அய்ங்காரிடம் உதவி கேட்கின்றனர். அய்ங்காரின் உதவியும் தோல்வியில் முடிகின்றது.

ஊருக்கு கிளம்பும் முன் ஒரு சிறிய வேலையால் அய்ங்கார் அத்தீவை மாற்றத்தின் பாதையில் திருப்பி விட்டு வருகின்றான். மீண்டும் கடத்திக் கொண்டு போகப்பட்டால் புதிய தீவைக் காணலாம்.

சைன்ஸ்ஃபிக்‌ஷனுக்கு சைன்ஸ்தேவையில்லை என்கின்றார் சுஜாதா. அவரின் கருத்துப்படி பாரதியாரின் காக்கை பார்லிமெண்ட்டே ஒரு சைன்ஸ்ஃபிக்‌ஷன். எதிர்கால சமூகம் முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர்களால் நடத்தப்படும் என்னும் அவரது கற்பனை / யூகம் கொஞ்ச கொஞ்சமாக நடந்துவருகின்றது.

கதை வழக்கமான சுஜாதாத்தனமான விறுவிறுப்பு. கதாநாயகன் தேவையற்ற சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை. நமக்கு தெரியும் கதநாயகன் எப்படியும் அம்மக்களை காப்பாற்றி விடுவான் என்று, அதை எப்படி செய்வான் என்பதே முடிச்சு. அதை தெளிவாக, புத்திசாலித்தனமாக அவிழ்த்துள்ளார்.

கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட தகவல்கள் இன்றைக்கு பழையதாக தெரியலாம். ஒவ்வொரு பதிப்பின் போது மாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. அதை விட்டு பார்த்தால் ஒரு விறுவிறுப்பான கதை.

எழுதிவிட்டு தேடினால் பால்ஹனுமான் தளத்தில் ஒரு விமர்சனம் கிடைத்தது. தோத்தாத்ரி என்பவரின் விமர்சனத்தை படித்து அசந்துவிட்டேன். ஆய்வு கட்டுரையாம். ப்ரமாதம்.// ஒரு வகையான கம்யூனிச எதிர்ப்பை காணலாம்// இது உண்மையென்றால் அதற்காகவே அனைவரும் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக