22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 


கோவலன் நடந்த பாதையில் நடக்க ஆசைப்பட்டு அப்படியே காவிரியின் பாதையையும் கண்ட அனுபவம் தான் இப்புத்தகம். பயணக்கதைகள் பெரும்பாலும் சோற்றுக்கு காய்ந்த கதையாகத்தான் இருக்கும், மிக அபூர்வமாக உண்மையான பயண அனுபவத்தை படிப்பவனுக்கு கடத்தும் நூல்கள் படைக்கப்படும். அப்படிபட்ட ஒரு புத்தகம் இது. நடந்தாய் வாழி காவேரி, இது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு வரி. இந்த ஒரு வரியும் "தேரா மன்னா" இந்த இரண்டு வரிகள் மட்டும்தான் சிலப்பதிகாரத்திற்கும் எனக்குமான பரிச்சியம். காவிரியை பஸ்ஸில் செல்லும்போது பாலத்திற்கு அடியில் பார்த்ததோடு சரி. அக்குறையை போக்கிவிட்டது இப்புத்தகம்.


காவிரி கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் ஓடி கடலடைகின்றது. ஹொகனேக்கலில் அது தமிழகத்திற்குள் நுழைகின்றது. கர்நாடகத்தில் மலைகளில் விளையாடும் காவிரி தமிழகத்தில் சமவெளியில் பாய்கின்றாள். காவிரி என்பவள் தனியாக இல்லை, அவளுடன் பல இடங்களில் பல நதிகள் கலக்கின்றன. அனைத்து உபநதிகளின் பங்களிப்புடன் தமிழகம் வரும்  காவிரி திருவரங்கனை தொழுதபின் இரண்டாக பிரிகின்றாள். கடலை நெருங்க நெருங்க அவள் பல அவதாரம் எடுத்துக் கொள்கின்றாள். 

நடுநடுவே அவளை தடுக்கும் அணைகள், கிளைக் கால்வாய்கள் என அவள் தன்னை முழுவதும் மக்களுக்கு தந்து போகின்றாள்.

 நமது பிராயணிகள் காவிரியை இரண்டு பகுதிகளாக பிரித்து தரிசிக்கின்றார்கள். கர்நாடகத்தில் தலைக்காவேரி வரை ஒரு சுற்று, பின் காவிரிப்பட்டணத்திலிருந்து முக்கொம்பு வரை இரண்டாம் சுற்று.

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று காவிரியை முழுவதும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் தி.ஜா அவரின் நண்பர்களின் பயணக்கதை. காவிரிக்கரையொரமாகவே சென்று பார்ப்பது என்பது நடக்காத காரியம். அதற்கு கால்நடையாகத்தான் செல்ல வேண்டும், அதற்கு பல மாதம் ஆகும். அதனால் தி. ஜாவும் நண்பர்களும் காரில் சென்று தம் ஆசையை ஓரளவாவது நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். 

காவிரியின் பாதையைக் காண்பது என்றால், சும்மா காவிரியை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதல்ல, காவிரியின் அழகை மட்டும் காண்பதல்ல. காவிரி பாயும், பாய்ந்த பகுதிகளின் மக்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் முன்னேற்றம், பழம் பெருமைகள் என அனைத்தையும் காண்பது. ஜெ.மோகனின் கட்டுரைகளில் தெரிவது, இந்திய மக்களிடம் இருக்கும் விருந்தோம்பல், மனித நேயம். அதை அப்புத்தகமும் காட்டுகின்றது. பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றியும் பேசுகின்றது இப்புத்தகம்.

கர்நாடகத்திலிருக்கும் வரை வேஹவாகினியாக இருக்கும் காவிரி, தமிழகத்திற்கு வந்தவுடன் சாந்தமாகின்றாள். திருச்சியை தாண்டிய பின் அவள் உல்லாசமாக ஆடிக்கொண்டு போகின்றாள். போகுமிடமெல்லாம் இசை வளர்த்து போகின்றாள். காடு மலைகளில் வேறு காவேரியைக் கண்ட தி. ஜாவிற்கு, தஞ்சாவூர் காவேரியை கண்டதும் இசை பொங்கி வருகின்றது. இரண்டாவது பாதி முழுவதும் இசையாகி கிடக்கின்றது.

புத்தகம் முழுவதும் மெல்லிய நகைச்சுவை இழைந்தோடுகின்றது. பல இடங்களில் புன்னகையுடனே படிக்க வேண்டியிருக்கின்றது, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கின்றார். 

கர்நாடகத்தின் ஹொள்ளேகாலத்திற்கு முதலில் செல்கின்றார்கள். சிவசமுத்திரத்திரத்தில் உள்ள பார்சுகி, ககனசுகி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபின் அடுத்த இடம், ஸோமநாதபுரம். எங்கும் நிறைந்த மணற்குன்றுகளுடைய தலைக்காடு, ஸ்ரீரங்கப்பட்டினம், கிருஷ்ணராஜ சாகர், மெர்க்காரா என்று சென்று தலைக்காவிரியை அடைகின்றார்கள். வழி நெடுக காவிரியை மட்டும் காணாமல், அவ்விடத்தின் சரித்திர சம்பவங்கள், சரித்திர முக்கியத்துவம் வாயந்த இடங்கள், இயற்கை அழகு, பாசனப்பரப்பு, காவிரியால் விளையும் பயன்கள் என அனைத்தையும் வர்ணித்துள்ளார்கள்.

குடகு மக்களைக் கண்டு அவர்களின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். அங்கும் ஒரு ராமநாதபுரம், அங்கும் ராமன் தோஷ பரிகாரம் செய்துள்ளான் என்பது ஆச்சரியமான தகவல். ராமநாதபுரத்தின் அருகில் ஜங்கம சன்யாசிகளின் அணைக்கட்டும், அதை நம் மக்கள் உபயோகப்படுத்தும் விதமும், நமது பாரம்பர்யத்தை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்பதைக் காட்டுகின்றது.

ஆடுதாண்டும் காவேரி, தாண்டக்கூடிய ஆடு பிறப்பிலிருந்தே ஒலிம்பிக் செல்ல பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்கின்றார்கள். அங்கிருந்து ஹொகனேக்கல். மேலிருந்து குதித்து பணம் கேட்பவர்களை இவர்கள் எப்படி காணாமல் விட்டார்கள். நல்ல இடம், நான்கு வருடங்களுக்கு முன்பு சென்றோம், எங்கும் ஷாம்பு கவர்களும், சோப்பு கவர்களும். சுருளி அருவியிலும் இதுதான். வெள்ளமென பொழியும் நீரால் கழுவ முடியாத அளவிற்கு தங்களிடம் அழுக்கு இருக்கின்றது என்று ஒத்துக் கொள்ளும் மகாத்மாக்களின் திருப்பணி.

இதுவரை ஒரு சுற்று. அடுத்த சுற்று. காவிரிப்பட்டினத்தில் இருந்து அடுத்த சுற்று. இது வரை காவிரியை காட்டில் பார்த்தவர்கள், இப்போது சமவெளியில். எழுத்தும் மாறிவிட்டது. காவிரியின் வேகத்தைப் போன்ற எழுத்து, இப்போது இசையுடன் கொஞ்சுகின்றது.அடுத்த பகுதி முழுவது இசையுடன் இழைந்து போகின்றது.

காவிரிப்பட்டிணத்தின் இன்றைய நிலை எப்படியோ அன்று மின்சாரம் கூட இல்லாத நிலை. காவிரிப்பட்டிணத்துடன் பண்டைய வரலாற்றையும் சேர்த்து விவரித்துள்ளார். அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம். தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கண்ட பிரமிப்பு இன்னும் என்னை விட்டு போகவில்லை. மிகவும் வியந்து நான் ரசித்த கோவில்கள் ஸ்ரீரங்கம், பெரியகோவில். எப்போது சென்னை போகும் போதும் வரும் போதும் திருச்சி நெருங்கியவுடன்  முழிப்பு வந்துவிடும். கோவில் கோபுரம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன்.

சோழபுரம் பற்றி அருமையன வர்ணனை, அதன் பிண்ணனி. அழகு. எல்லாம் அதை பார்க்காமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் உண்டாகின்றது. கல்லணை. தஞ்சை மாவட்டத்தின் பெருமைகள், இசை வளர்த்த பெரியவர்கள், ஆன்மீக விவரங்கள், மக்களின் வாழ்கை முறை, சோழ மன்னர்களின் கொடை என அனைத்து விவரங்களும் அருமையாக விவரித்துள்ளார்.

திருச்சி, ரத்னகிரி, ஈரோடு, பவானி, மேட்டூர் அணை, முசிரி, திருஈங்கோய் (என்ன ஊர்), முக்கொம்பு, மீண்டும் வந்த வழியே.

வழியெங்கும் பல நதிகள் காவிரியில் பல உபநதிகள் கலக்கின்றன.

இரண்டாம் பகுதியில் அவரது நண்பரின் சலம்பலகள் சுவாரஸ்யம். முதல் பகுதி இயற்கை அழகு, இரண்டாம் பகுதி பல நூற்றாண்டு பண்பாட்டின் அழகு. அனைத்தையும் விட எங்கு போனாலும் அங்கு வாழும் மனிதர்களின் பண்பு, நமது பாரத நாட்டின் கலாச்சார ஒற்றுமை. இந்தியா ஒரு நாடே அல்ல, வெள்ளைக்கரன் கட்டி வைத்தது என்று பினாத்தும் அறிவுஜீவிகள் ஒரு முறை நாடு முழுவதும் சுற்றி பார்த்தால் தெரியும், பாரதத்தின் பெருமை. புவியியல் ரீதியான பிளவு இருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.

புத்தகம் எங்கும் நமது சங்க இலக்கியப் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள், பல இசை மேதைகளின் கீர்த்தனைகள் பற்றிய தகவல்கள் ஏராளம். எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்பதால அதை ஜம்ப் செய்துவிட்டேன். தி. ஜாவின் எழுத்து வன்மையைப் பற்றி கூற வேண்டாம். சிட்டியை பற்றி கேள்விபட்டதில்லை, படித்ததுமில்லை. முதல் பகுதி சிட்டியும், இரண்டாம் பகுதி தி. ஜாவும் எழுதியிருப்பார்கள் என்பது போல உள்ளது.

அருமையான ஓவியங்கள், புகைப்படங்களும் நிறைந்துள்ளது.

இது போன்ற பயணங்கள் மேற்கொள்வதே கடினம். அதைப் பற்றி எழுதுவது அதைவிட கஷ்டம். அதுவும் சுவாரஸ்யமாக, தரமாக எழுதுவது அதைவிட கடினம். அனைத்தையும் சாதித்திருக்கின்றது இப்புத்தகம்.

பயணங்களை விரும்புவர்களும், இயற்கை ரசிகர்களும், பண்பாட்டு பிரியர்களும், இசை ரசிகர்களும் தவற விடக்கூடாத ஒரு புத்தகம்.

ஒரு நாள் கண்டிப்பாக அவர்கள் போன பாதையில் போய் அனைத்தையும் காணவேண்டும். பார்த்த இடங்கள் ஸ்ரீரங்கப்பட்டினம், ஹொகனேகல் மட்டும், அதுவும் ஸ்ரீரங்கநாதரை மட்டும். கர்நாடகாவில் இவ்வளவு வருடம் இருந்துவிட்டு எதையும் காணாமல் இருப்பதற்கு காரணம், சரியான கூட்டணி அமையாததுதான். என்ன செய்ய, என்றாவது ஒரு கூட்டணி கிடைக்க ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 190. விலை என்னை பொறுத்தவரை மிகக்குறைவு இதற்கு.

4 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. எனக்கும் கூட காடு, மலை என்று சுற்றவேண்டும் என்ற ஆசைதான். அடுத்த ஜன்மத்திலாவது லபிக்குமோ என்னவோ? எப்போதோ வாங்கிய இப்புத்தகம் புத்தக அலமாரியில் தூங்குகிறது. நாளை நாளை என நாட்கள் பின்னகர்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஹோகே என்றால் கன்னடத்தில் "புகை" என்று பொருள். நீர் அருவியாய் விழுந்து தெறிக்கும் திவலைகள் புகை போல இருப்பதால் "புகை கல்" என்பது ஹொகெனக்கல் என்று ஆகியதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலதான், ஹொகேனேகல்லும் நம்தே என்று கர்நாடகக்காரர்கள் ஹேளுகின்றார்கள் / கேளுகின்றார்கள். தமிழ்நாட்ல சேர்த்தவுடனே பேரை மாத்தியிருக்கனும்.

      நீக்கு