14 செப்டம்பர் 2013

வேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி

கல்கியில் 1994ல் வந்த அங்கத நாவல் (அப்படின்னா என்னா?).  எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்தலாம், அரசியலில் அதை செய்ய முடியாது. நமது அரசியல்வாதிகள் அதை உண்மையாக்கி தொலைத்து விடுவார்கள். கற்பனை நாவலுக்கு பதிலாக எதிர்கால குறிப்பு கிடைக்கும். சோ அப்படித்தான் ஒரு தீர்க்கதரிசியாகிவிட்டார். அது போன்ற ஒரு நாவல்.

இது போன்ற நாவலுக்கு கதை எல்லாம் தேவைதானா? இருந்தும் அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது. வேதபுரம் என்பது ஒரு கற்பனை நகரம். நமது தமிழகத்தின் பிரதிபலிப்பு. வேதபுரத்து தலைவர் அரூபமாக ஆண்டு கொண்டிருக்கின்றார். அவரை கண்டு, வேதபுரத்தை வைத்து பேட்டி எடுக்க வரும் அபூர்வா, எப்படி வேதபுர ராணியாகின்றாள் என்பது கதை. 

முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்களை தான் வாரியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம் என்று பேசிவிட்டு இரண்டு மனைவி வைத்துக் கொள்வது, அடை மொழி வைத்துக் கொண்டு திரிவது, சுயமரியாதை என்று பேசிவிட்டு தலைவருக்கு ஜால்ரா அடித்துப் பிழைப்பது, கடவுள் சிலையை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது, புராணங்களை தூற்றி விட்டு தலைவர்கள் மீது புராணங்கள் எழுதிக் குவிப்பது, அரசியலுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு, என்று கடைத்த இடத்தில் எல்லாம் போட்டு தாக்கியுள்ளார். படிக்க சந்தோஷமாக இருந்தது.

அவர் எழுதிய சில நடந்தும் தொலைத்து விட்டன, இஷ்டப்படி மந்திரிகளை மாற்றுவது, 8450 நொடி உண்ணாவிரதம் இருப்பது, மிருகங்களுக்கு ஒன்று மனிதர்களுக்கு ஒன்று என்று கஞ்சி தொட்டி திறப்பது, கமிட்டி போடுவது, அதன் முடிவை ஆராய இன்னொரு கமிட்டி என்று. 

இன்னும் சில நடப்பதற்கு அதிக காலம் ஆகாது, அன்னிய முதலீடு அதிகமாகி, சி.பி.ஐயை ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்குவது, முடியாட்சி, கஜானாவை காணாமல் அடிப்பது எல்லாம் விரைவில் நடக்கு என எதிர்பார்க்கலாம். 

அங்கத நாவல் என்கின்றார்கள், என்ன அங்கதமோ. இ.பாவின் அங்கதம் எல்லாம் என்னை அவ்வளவாக கவரவில்லை.கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்த அளவிற்கு கூட இதில் இல்லை. சிறிய புன்னகை கூட வருவதில்லை. பேச்சும் மிகுந்த மிகை படுத்தப்பட்டதாகினறது.தனி மண்டை வேண்டும் போல இதை புரிந்து சிரிக்க. இதே போன்ற மிகைப்படுத்தலை சேர்ந்ததுதான் முகம்மது பின் துக்ளக் நாடகமும், ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்ல. 

படிக்கலாம் ஓசியில் கிடைத்தால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக