ஒரு சன்னியாசியின் கதை.
1961ல் கல்கியில் தொடராக வந்த கதை.
ஒரு சன்னியாசி அனந்தசாமி, சிறு வயதில் திருமண மண்டபத்திலிருந்து ஓடி போய் சன்னியாசியானவர். ஆனால் முழு சன்னியாசியல்ல. உலக கவலைகள் அனைத்தும் படும் ஒரு சன்னியாசி. மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் சன்னியாசி.
அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் ருக்மணி. அவள் அனந்தசாமியை தற்செயலாக காண்கின்றாள். திருமண முறிவின் கசப்பில் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றாள். அவளின் உறவினர் பெண் சந்திரா. அவள் ஒருவனுடன் பழகி அவன் அவளை விட்டு போன கசப்பில் வாழ்ந்து வருகின்றாள்.
சினிமா நடிகன் அருண் குமார். அனந்தசாமி அவனின் பையனுக்கு வைத்தியம் செய்ய வருகின்றார். அருண் குமாரால் சினிமா சான்ஸ் என்னும் கவர்ச்சியில் ஏமாறும் பெண் டொக்கி. அவளை காப்பாற்றுவதற்காக அவளை திருமணம் செய்ய முடிவு செய்யும் ரங்கன். ரங்கன் சந்திராவுடன் பழகிக் கொண்டிருந்தவன்.
இவர்களுக்கு நடுவில் அனந்தசாமி. கடைசியில் ருக்மணியின் வீட்டு மாடியில் குடியேறுகின்றார். கூடவே டொக்கி. அவள் படிக்க புறப்படுகின்றாள். அப்பாடா, ஒரு வழியாக கதை சுருக்கம் முடிந்தது
இக்கதையை படித்த என் நண்பன் சொன்னது, "இவர் எதுக்கு இந்த கதைய எழுதினாரு"
சரிதான். தி.ஜாவின் சிறுகதைகள், மோகமுள், அம்மா வந்தாள் போன்ற கதைகளுடன் ஒப்பிட்டு கூட பார்க்க முடியாத கதை. கதையில் அவ்வளவு அழுத்தம் இல்லை. எதற்காக இது, என்ன சொல்ல வருகின்றார் என்றுதான் தோன்றுகின்றது. முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவாக முழுமையாக இல்லை. மேலோட்டமாகவே கதை போகின்றது. தொடர்கதை என்பதை அங்கங்கு காட்டுகின்றார். ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.
தி. ஜாவின் ஒரு சுமார் கதைதான் இது. மற்ற கதைகள் போல் இல்லாது ஏகப்பட்ட கிளைக்கதைகள், முன் கதைகள், யாராவது சொல்லும் கதைகள் என ஏகப்பட்ட முடிச்சுகள்.
ஏன் படிக்க வேண்டும் என்றால், தி. ஜாவின் கதை சொல்லும் திறன். நான் எழுதியதை கண்டால் ஒரு மொக்கை கதை போல இருக்கும். ஆனால் தி. ஜா தன் எழுத்தாற்றலால் அதை படிக்க சுவாரஸ்யமானதாக்குகின்றார். கதைக் களன் சென்னை. சென்னையின் வெக்கையும் புழுக்கமும் கதையையும் அப்படி ஆக்கிவிட்டது. சில சின்ன சின்ன சுவார்ஸ்யமான பாத்திரங்கள் நன்றாக அமைந்துவிட்டது, பாகவதர், கீழ் வீட்டு பாட்டி, டொக்கியின் அப்பா. தி. ஜாவின் உரையாடல்கள் எப்போதும் இயல்பாக இருக்கும். தேவையில்லாமல் நம்மை கதை நடுவே நிறுத்திவிட்டு, நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். இதிலும் ரசித்தது அந்த உரையாடல்களும், வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் அமைப்பும்.
என்னை பொறுத்த வரை படிக்க ஒரு சுவாரஸ்யமான கதை, அதை தவிர வேறு சிறப்புகளில்லை. தி. ஜாவிற்காக படிக்கலாம்.
தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.
தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.
அன்பு தான் இங்கே காட்டப்பட்டிருக்கிறது. தன்னை மணக்க மறுத்துச் சென்றவனைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் ருக்குவின் மன முதிர்ச்சி! அவரை ஒரு நண்பனாய் ஏற்கத் தூண்டுகிறது. அதே போன்ற மனமுதிர்ச்சி சந்திராவிடம் இருக்காது! அவள் ரங்கனின் இழப்பால் நிலையின்றித் தவிக்கிறாள். ஆனால் அதே சமயம் கீழ் மத்தியதரத்து வர்க்கத்தைச் சேர்ந்த டொக்கியோ தான் இழந்ததை மீண்டும் பெற முடியாது என்ற நிலையிலும் அதைக் குறித்து யோசித்து வாழ்க்கையை வீணாக்காமல் மேலே படித்து உயர்நிலைக்கு வர முற்படுகிறாள். இந்த மூன்று பெண்களில் டொக்கியைத் தன் வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு அனந்தசாமி அவளைத் தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்க முற்படுவே கதையின் மையக்கருத்து. இது என்னளவில் நான் புரிந்து கொண்டது. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாண்டிக் கொண்டு வாழ்க்கையில் போராடி வெல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பதாக நான் புரிந்து கொண்டேன். :)
பதிலளிநீக்கு