07 செப்டம்பர் 2013

ராமாயணம் - சோ, ராஜாஜி

ராமாயணமும், பாரதமும் இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் நடந்தது என்று பொருள். இந்த இரண்டில் ராமாயணம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி அண்டை அயல் நாடுகளில் கூட ராமாயணம் பரவியுள்ளது.


ராமாயணத்தில் எத்தனையோ வகையான ராமாயணங்கள் வழக்கத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான ராமாயணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.  அது பாடப்படும் இடத்திற்கு தகுந்த மாதிரியும், பாடுபவர்களின் மனோ தர்மப்படியும் விதவிதமாக வழங்கப்படுகின்றது. சில காலப் போக்கில் மாறியும் இருக்கலாம். அனைத்திற்கும் மூலம் வால்மீகி ராமாயணம். தமிழ் ஹிந்துவில் படித்தது "சீதை ராமனிடம் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறுகின்றாள், ராமன் அதை மறுத்து பலவிதமாக சமாதானப்படுத்துகின்றான். கடைசியில் சீதை அது எப்படி இதற்கு முன்னால் இருந்த அத்தனை ராமாயணங்களிலும் சீதையை ராமன் அழைத்து செல்கின்றான், நீங்கள் மட்டும் எப்படி விட்டு விட்டு போக முடியும் என்று கேட்க, அவனும் அழைத்து செல்கின்றான்". படிக்க சுவாரஸ்யமாகவும், ராமாயணம் எந்த அளவிற்கு நமது கலாச்சாரத்தில் கலந்துள்ளது என்பதையும் காட்டுகின்றது. 

புத்த, ஜைன மதம் தோன்றி வளர்ந்த போது அவர்களும் ராமாயணத்தை தம் போக்கில் எழுதியுள்ளனர். 


தென்னிந்தியாவில் அதிகம் பேர் அறிந்தது, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசரின் ராம மானச சரிதம்.

ராமாயணத்தை அனைவரும் படிக்கும் படி எளிதாக ஆக்கி தந்தவர்களில் முதன்மையானவர், ராஜாஜி. கல்கியில் சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் ராமாயணம் என்ற பெயரில் வானதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகு எளிமையான நடையில், சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர்களுக்கு தேவையானதை தந்திருக்கின்றார். முக்கியமான விஷயம் இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு எளிமையாக இருக்கின்றது.




எளிமை என்று மிகவும் குறுக்கி குழந்தைக் கதை போல எழுதவில்லை, அங்கங்கு விட்டு விட்டு போகவில்லை. ராமாயணத்தின் சாரம் கொஞ்சம் கூட குறையாமல் எழுதியுள்ளார். வர்ணனைகளை விட்டு தேவையானதை மட்டும் தந்துள்ளார். ராமாயணத்தை ஒரு வரியிலும் சொல்லலாம் என்பார்கள். ராமாயணத்தை புதிதாக படிப்பவர்கள், அதிலும் சிறுவர்களுக்கு இது சரியான ஆரம்பம். பாரம்பர்ய வழக்கப்படி ராமர் பிறப்பில் ஆரம்பித்து பட்டாபிஷேகத்தில் முடிக்கின்றார். தேவையான இடங்களில் கம்பராமாயணப் பாடல்களை தந்துள்ளார். டி.கே.சி கம்பராமாயண ரசிகர், ஆராய்ச்சியாளர் என்று தெரிந்திருக்கும், அவரது குறிப்புகளையும், அவர் தேர்ந்தெடுத்த பாடல்களை தனியாக குறித்திருக்கின்றார்.


சோவும் ராமாயணத்தை கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளார். சோவும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார். அதே சமயம் கம்பராமாயணத்தையும், துளசிதாசரின் ராமாயணத்தையும் விவரித்துள்ளார்.


ராஜாஜியின் வழி ஒட்டியே இதுவும் அமைந்துள்ளது,ஆனால் அதைவிட கொஞ்சம் விரிவு. பல விவாதங்கள், வர்ணனைகளை சேர்த்துள்ளார். சோ, கம்பராமாயணத்துடன், துளசிதாசரின் ராமாயாணத்தையும் சேர்த்துள்ளார். மூன்றும் எங்கு வித்தியாசப்படுகின்றது, அதற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதையும் விளக்கமாக எழுதியுள்ளார். நிறைய கம்பராமாயணப் பாடல்களை குறிப்பாக தந்துள்ளனர்.


துக்ளக் இதழில் தொடராக வந்தது, அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக ராமாயணக் கதைகள் பட்டாபிஷேகத்துடன் முடியும். ஆனால் அதன் பின்னாலும் பல கதைகள் உள்ளன. சீதை மீண்டும் காட்டிற்கு செல்வது, லவ குசர்களின் பிறப்பு, ராவணனின் கதை, ஹனுமானின் கதை என் பல உள்ளது. பட்டாபிஷேகத்துடன் முடிப்பது மரபு என்பதால், அக்கதைகளை சரியான இடங்களில் தந்துள்ளார்.

ராஜாஜிகும் சோவிற்கும் சில ஒற்றுமைகள், இருவரும் சட்டம் படித்தவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள். அவர்களின் வக்கீல் அறிவு புத்தகத்தில் தெளிவாக தெரிகின்றது.



இது போன்ற இதிகாச புராணங்களில் உள்ள முக்கிய விஷயம் இடைச்சொருகல்கள். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்கிவரும் ஒரு காப்பியத்தில் இடைச்சொருகல்கள் இல்லாமல் போகாது. ஆனால் எது இடைச்சொருகல், எது மூலம் என்பதை யார் நிர்ணயம் செய்வது? அது பெரும்பாலும் அவரவர் அரசியலுக்கு ஏற்றபடியே அமைந்துவிடும்.(டோழர்கள் சொல்லும் சம்புகன் கதை, எங்குள்ளது என்றுதான் தெரியவில்லை) ராஜாஜி ஒரு சில இடங்களில் சிலவற்றை இவை இடைச்சொருகலாக இருக்கும் என்று நிராகரிக்கின்றார். சோ காப்பியத்தின் பொதுவான கருத்துக்களுக்கோ அல்லது அதன் தன்மைக்கு விரோதமாக இருந்தால் அதை இடைச்சொருகல் என்று விலக்கலாம் என்கின்றார். எதையும் இடைச்சொருகல் என்று சோ விலக்கவில்லை.

வாலி வதம். வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றான் என்பது வால்மீகி காட்டுவது. அதன் பின்னால் ராமன் தன் செய்கையை நியாயப்படுத்துவது போன்று சில பகுதிகள் உள்ளன. ராஜாஜி அவை இடைச் சொருகலாக இருக்கலாம் என்கின்றார். ராமனுக்கு வேறு வழி கிடையாது, சுக்ரீவனை காக்க அவன் வாலியை கொன்றே ஆக வேண்டும், கொன்றான். அவ்வளவுதான். ராமனை முழுக்க முழுக்க அவதாரமாக காட்ட யாரோ இதை செய்திருக்கலாம் என்கின்றார். சோ ராமனுடைய வக்கீலாக மாறி வாதாடுகின்றார்.


வால்மீகி ராமாயணம் ராமனை ஒரு அவதாரமாக காட்டவில்லை. அனைத்து இடங்களிலும் ராமன் ஒரு மனிதனாக, ஒரு அரச குமாரனாகத்தான் இருக்கின்றான். சீதையை பிரிந்த ராமனின் புலம்பல்கள் சாதரண மனிதனிடம் கூட காண முடியாது. ராமனின் பிறப்பின் போது, விஷ்ணு தன் அம்சத்தை நான்காக பிரித்து அளித்தார் என்கின்றார், அவ்வளவுதான். பின் எங்கும் ராமன் விஷ்ணுவாக குறிப்பிடபடவில்லை. போர்க்களத்தில் வந்து காக்கும் கருடனிடம் கூட, கருடன் யார், எதற்காக உதவி செய்கின்றன் என்றுதான் கேட்கின்றான்.


ராஜாஜி கருத்துப்படி, வால்மீகிக்கு முன்னரே ராமாயணம் மக்களிடம் இருந்து வந்திருக்க வேண்டும். அதைத்தான் வால்மீகி காவியமாக பாடியிருக்கின்றார். தன் ஞான திருஷ்டியால் ராமன் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்ந்து அங்கங்கு அதை குறிப்பிட்டுள்ளார்


சோ, வால்மீகி தன் ஞானதிருஷ்டியால் கண்டு அப்படியே எழுதியுள்ளார் என்கின்றார்.


நமது பகுத்தறிவாளர்கள் அடிக்கடி ராமாயணத்தை சீண்டுவது வழக்கம். அவர்களின் கருத்துப்படி ராமன் ஒரு கெட்டவன், ராவணன் அவர்களின் உறவினன். அதே சமயம், ராமாயணம் ஒரு பொய். இல்லாத ஒன்றில் இருப்பவன் எப்படி உறவினன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ராஜாஜி நமது முன்னோர்களை இதைவிட அவமானபடுத்த முடியாது என்று கூறுகின்றார். 

இது எல்லாம் பொய், மக்களை ஏமாற்றுவதறாக எழுதப்பட்டது என்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை பொருத்தவரை நமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள். நடக்காத ஒன்று எப்படி இத்தனை ஆயிரம் வருடங்கள் நிலைத்து நிற்கும். அதுவும் ஓரிடத்தில் மட்டுமல்ல, பாரத தேசம் முழுவதும், இந்தோனேஷியா வரை பரவியிருக்கும் ஒன்று நடக்கவே இல்லை, முழுக்க முழுக்க கற்பனை என்றால் அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம். மிகைப்படுத்தல், அங்கங்கு இடைச்சொருகல்கள் இருக்கலாம் ஆனால் ராமாயணமே பொய் என்பது மாதிரியான மடத்தனம் ஏதுமிருக்காது.

இது உண்மையில் நடந்திருக்க கூடியதற்கான சாத்தியங்களே அதிகம் என்பதை இருவருமே சரியாக நிறுவுகின்றார்கள். ராமாயணத்திலும் சரி பாரதத்திலும் சரி, அனைத்து பாத்திரங்களும் முழுக்க நல்லவர்களும் இல்லை முழுக்க கெட்டவர்களும் இல்லை. ராமனின் தவறுகளும் கூறப்படுகின்றது, ராவணனின் பெருமையும் கூறப்படுகின்றது. ராவணனின் பெருமையை பற்றி நினைப்பவன் ஹனுமான், ராவணனின் அடிப்பொடிகள் அல்ல.

மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவதென்றால், பாரதமோ ராமாயணமோ நமது பள்ளி புத்தகத்தில் தலைவர்களை பற்றி கூறப்படுவது போல வெறும் பெருமைகளும், புகழ்ச்சிகளும் நிறைந்து அவர்கள் நல்லவர்களாகவே காட்டப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் குறைகளை கூற வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் இரண்டு இதிகாசங்களிலும் அனைவரின் நிறைகளும் அவர்களின் குறைகளும் கூறப்படுகின்றது. பாரதத்தில் துரியோதனன் கிருஷ்ணனை கடுமையாக பேசியதும் அவன் மேல் பூமாரி பொழிவதாக வருகின்றது. துரியோதனனின் ஆட்சி வெகுவாக புகழப்படுகின்றது. ராமாயணத்திலும் ராவணனின் பக்தியும், இசையறிவும் புகழப்படுகின்றது. முழுக்க முழுக்க அவனை கெட்டவனாக காட்டவில்லை.


ராமன் சீதையை அக்னியில் இறங்க செய்வதை இருவருமே சரி என்றுதான் கூறுகின்றனர். ஒரு கணவனாக பார்த்தால் அவன் செய்தது சரியல்ல ஆனால் ஒரு அரசனாக அவனது செயலில் தவறில்லை என்கின்றனர். ஏமாற்றுபவர்கள் எதற்கு ஒரு சர்ச்சையை விட்டு வைக்க வேண்டும். 


ராஜாஜி ஒரு ஆன்மீகவாதியாக, ஒரு ஆராய்ச்சியாளராக ராமாயணத்தை எழுதியுள்ளார். சோ, ஆன்மீகவாதி என்பதுடன், ஒரு வக்கீலாகவும் எழுதியுள்ளார். பிரச்சார தொனி கொஞ்சம் அதிகம். ராஜாஜி ராமாயணத்தை ஏற்க முடியாதவர்களுக்காக அதை எழுதவில்லை. சோ, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் எழுதுவது போல எழுதியுள்ளார். ஒரு சில இடங்களில் மட்டும் சோவின் வழக்கமான குசும்பு, சீண்டல் எட்டி பார்க்கின்றது.

ராமாயணம் ராமரின் கதை என்பதை விட சீதையின் கதை என்பதே பொருத்தமாக இருக்கும். ராமாயணம் ஒரு சோக நாடகம். சீதையின் துயரமே கதையின் அடித்தளம். சீதையின் துயரம் சித்ரகூடத்தில் ஆரம்பித்து அவள் பூமியில் மறைவதில் முடிகின்றது. சீதையின் மறைவிற்கு பிறகு ராமாயனத்தில் ஒரு வெறுமை தோன்றுகின்றது. ராமனின் மறைவுகூட அவ்வளவு தாக்கத்தை தருவதில்லை. இரண்டு புத்தகங்களின் பார்வை இதுவே.

 வால்மீகி ராமாயணத்தை முழு மொழி பெயர்ப்பை அனைவராலும் முழுவதும் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.(என்னால் முடியாது என்றுதான் நினைக்கின்றேன். பாரதம் படிக்க முடியும் ஆனால் இது சந்தேகம்) அப்படிபட்டவர்களுக்கு இப்புத்தகங்கள் சரியாக இருக்கும். ராஜாஜியின் புத்தகம் சிறுவர்களுக்கும், புதிதாக எழுத்து கூட்டி தமிழ் படிப்பவர்களுக்கும் நல்ல ஆரம்பம்.

ராமாயணத்தை பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் ஏகப்பட்ட கட்டுரைகள் கிடைக்கின்றன.

ஒரு முக்கிய கட்டுரை


2 கருத்துகள்:

  1. சோவின் மகாபாரதமும் ராமாயணமும் பாதியில் நிற்கிறது. மகாபாரத்தில் வரும் கிளைக்கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறேன். அவற்றிலிருந்து புதிதாக எழுத பல கதைகள் கிடைக்கும்.கிருபானந்தவாரியாரின் மகாபாரதம் வித்தியாசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோ எழுதியுள்ளது ராமாயணம், பாரதத்தின் ஆதார கதையைதான், முழுவதுமல்ல. பாரதத்தின் கிளைக் கதைகளை எழுத ஆரம்பித்தால் எங்கோ போய்விடும். வியாசர் எழுதியதுடன், கண்டிப்பாக வேறு பல வெர்ஷன்களும் கிடைக்கும். சோவை ஒரு ஆரம்பமாக கொள்ளலாம். ராமாயணத்தையும், பாரதத்தையும் தப்பும் தவறுமாக யாரவது சொன்னதைக் கேட்டு கண்டபடி உளறுவதற்கு, இதைப் படிக்கலாம்.

      நீக்கு