23 மே 2017

அசுரன் - ஆனந்த் நீலகண்டன்

புராண இதிகாசங்களை வரலாற்று பார்வையுடன் மீண்டும் எழுதுவதை பல மொழிகளில் பலர் செய்து இருக்கின்றனர். உதாரணமாக ஜெயமோகனின் வெண்முரசு, பைரப்பாவின் பர்வா, எம்.டி வாசுதேவ நாயரின் இனி நான் உறங்கலாமா. இவை அனைத்தும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டவை. ராமாயணத்தை அப்படி யாரும் மாற்றி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் அமிஷ் திரிபாதி ஒரு நாவல் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார், முதல் பகுதி வெளிவந்து விட்டது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவருகின்றது.

அசுரன் - அந்த வகையில் ராமாயணத்தை அடிப்படையக கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட நூல்களில் வேறு ஒரு அம்சம் உண்டு, இதிகாசங்களை ஒரு வரலாற்று பார்வையுடன் பார்ப்பது. இதிகாசங்களில் விடுபட்ட இடங்களை நிரப்புவது, சில இடங்களை விரித்து எழுதுவது என்று. அமிஷ், இதிகாச கதையை கொஞ்சம் வரலாறு, விஞ்ஞானம் என்று கலந்துகட்டி ஒரு மசாலா நாவலாக எழுதுகின்றார். அசுரன் இதில் எந்த வகையிலும் சேராமல், தனக்கு தோன்றியதுதான் வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட ஒரு பெரிய குப்பை.

ராமாயணங்களில் பல வித ராமாயணங்கள் உண்டு, வெளிநாடுகளில் கூட ராமாயணங்கள் உண்டு. ஜைன, புத்த மதங்கள் கூட தங்கள் மதத்தை பரப்ப தங்களுக்கென்று ராமாயணங்களை எழுதிக் கொண்டார்கள் என்று கூறுவார்கள். அதில் ஏதோ ஒரு ராமாயணத்தில் வரும் கதை, சீதை ராவணனின் மகள் என்பது. அதை அடிப்படையாக கொண்டு, அசுரர்களின் கதையை எழுதுகின்றே பேர்வழி என்று ராவணன் முதற்கொண்டு அனைவரையும் கேவலமாக சித்தரித்து ஒரு தண்டத்தை எழுதியிருக்கின்றார் ஆனந்த் நீலகண்டன்.


ஆதி கவியான வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணமே மூலம். அதிலிருந்து விரித்து எழுதலாம், இடைவெளிகளை கற்பனையாக இட்டு நிரப்பலாம். ஆனால் அதில் இல்லாத ஒன்றை வரலாறு என்ற பெயரில் எழுதும் போது, ஆதாரம் தேவையாகின்றது. சீதை ராவணின் மகள் என்ற கதையெல்லம் வால்மீகி ராமாயணத்தில் கிடையாது. ஒழிந்து போகின்றது என்று அதைக்கூட விட்டு விடலாம், ஆனால் ராவணன் புகழைப் பாடுகின்றேன் என்று மற்ற அனைவரையும் வில்லனாக்குவது என்பது இடதுசாரிகளிடம் இருக்கும் கருப்பு வெள்ளை புத்தி. 

நமது இதிகாசங்களுக்கு கருப்பு வெள்ளை கண்ணாடி கிடையாது, வால்மீகி காட்டும் ராவணன், மிகப்பெரிய மாவீரன், சிவ பக்தன், இசையும் வேதமும் கற்றவன். அவனின் ஒரே குற்றமாக சொல்லப்படுவது பிறன் மனை விளைந்தது மட்டுமே. ராவணனனை முதன் முதலில் காணும் அனுமனே ராவணனை கண்டு வியக்கின்றான். எப்படிப்பட்ட வீரன் இவன் என்று.  அந்த நேர்மையை எல்லாம் இன்று இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான். ராவணனை கதாநாயகனாக வைத்து எழுதுவதில் தவறில்லை. அவர்களுக்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் அதை எப்படி சொல்கின்றோம் என்பதில்தான் எழுதுபவனின் நோக்கம் இருக்கின்றது. இது ராவணனனை கதநாயகனாக காட்டுவதை விட ராமனை ஒரு வில்லனாக காட்டுவதில்தான் முன்னிற்கின்றது. 

அசுரன் கதை செய்முறை

ஒரு கிலோ ராமாயணத்தை எடுத்து கொள்ளவும், அதனுடன் யார் எழுதியது என்றே தெரியாத பல ராமாயணங்களை பத்து கிலோ கலக்கவும். அனைத்து பாத்திரங்களையும் கருப்பு வெள்ளையாக மாற்றவும். கருப்பை மேலும் கருப்பாக்காவும், இப்போது கருப்பை வெள்ளையாகவும், வெள்ளையை கருப்பாகவும் மாற்றவும். பாத்திரங்கள் தயார். நிகழ்ச்சிகளையும் அதே மாதிரி மாற்றி எழுதிக் கொள்ளவும் கதை தயார்.

உருப்படியான விஷயம் கதை சொல்லும் முறை வித்தியாசமானது. ராவணன் அவனின் வேலைக்காரன் பத்ரன், இருவரின் வாய்மொழியாக மாறி மாறி வருகின்றது. பத்ரன் சாதரண அசுரனின் குரலாக வருகின்றான். 

ராமாயணத்தை இன்றைய முற்போக்கு வியாதி கண்ணாடி போட்டு பார்த்ததன் அஜீரண விளைவே இப்புத்தகம். ராமாயண காலத்தில் ஜாதி வேறுபாடுகள் இருந்தன என்ற நினைப்பிலும், காலாவதியான ஆரியப்படைடுப்பு நினைப்பிலும் எழுதப்பட்டிருக்கின்றது. தேவர்கள், அசுரர்கள் என்பவர்கள் இனக்குழுக்கள் என்பது ஏற்று கொள்ள கூடியதாக இருந்தாலும், மிதமிஞ்சிய வெறுப்பில் எழுதப்பட்டதால், படிக்க படிக்க எரிச்சலாக வருகின்றது. ராவணன் ஜாதி பேதம்ற்ற சமுதாயத்தை அமைக்க முயற்சித்தான் என்ற சித்திரத்தை அளிக்க நினைத்து அதிலும் தோல்வியடைகின்றார் ஆசிரியர்.

தர்க்கப்பிழைகளுக்கு பஞ்சமேயில்லை. பத்ரன் ஒரு கரப்பான் பூச்சி போல அனைத்திலும் உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். விபீஷணன்தான் ராவண ராஜ்ஜியத்தில் பிராமணர்களை நுழைத்து ஆட்சியை கெடுத்தான் என்ற கோணம், அப்படி இருந்தால் ராவணன் எப்படி ஒரு சிறந்த அரசனாக இருக்க முடியும் வால்மீகி காட்டும ராவணன் ஒரு மாவீரன். இங்கு வரும் ராவணன் கிட்டத்திட்ட ஒரு கோழை, குபேரனை வெல்வதிலிருந்து, வருணனை வெல்வதுவது வரை குறுக்கு வழிதான். வால்மீகி காட்டிய ராவணனை கூட இவரால் காட்ட முடியவில்லை. பரசுராமரின் காலம், ராமனுக்கு முற்பட்டது. மகாபலியின் காலம் அதற்கும் முற்பட்டது. அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து ஒரே காலத்தில் அடக்கிவிட்டார். ராவணனும் மகாபலியும் சந்தித்ததாக எங்கும் படித்த நினைவில்லை.

ராமன் அனைவரையும் பின்னால் இருந்து அம்பு விட்டு கொல்வதாக எழுதியிருப்பதை படிக்குபோது ஏதோ பஸ்ஸில் பிட் நோட்டிஸ் கொடுக்கும் சில பக்கிகள் நினைவுதான் வந்தது. ராமன், லக்ஷ்மணன், அங்கதன், அனுமன் என்று அனைவரும் ராவணனை வஞ்சகமாக வென்றாதாக எழுதியிருப்பது போன்ற அபத்தத்தை எங்கும் படிக்க முடியாது. 

மொழி பெயர்ப்பு திராபை. மீட்டர், கமிஷன், போன்ற வார்த்தைகளை பார்க்கும் போது வந்த எரிச்சலுக்கு அளவில்லை. இதையெல்லாம் கூட சரி பார்க்காமலா ஒருவர் மொழிபெயர்ப்பார். நூல் முழுக்க முழுக்க இந்தியா, இந்தியத்துணைக்கண்டம் போன்ற வார்த்தைகள்வேறு. 

இது வரலாறும் அல்ல இதிகாச மீள் உருவாக்கமும் அல்ல. வெறுப்பு முகமூடியோடு, இடதுசாரி, போலி முற்போக்கும் கண்ணாடி அணிந்ததால் எழுந்த ஒரு அஜீரண வாயுக் கோளாறு. அந்த சத்தத்தை கேட்டு இதிகாசங்களின் மீது எறியபட்ட வெடிகுண்டு என்று எண்ணிக் கொண்டு உற்சாகமடைந்து ஸ்கலிதம் அடைவோருக்கு மட்டுமேயானது. மற்றபடி ஒரு புதிய முயற்சி என்று மதிப்பதற்கு கூட லாயக்கற்ற குப்பை. 

சுஜாதா சொன்ன ஒரு உவமைதான், மழைநீரில் மிதந்து செல்லும் பழுப்பான வஸ்து.

பிற்சேர்க்கை:

இந்த இரண்டு உரைகளையும் கேட்டால் ராவணனை பற்றியும், இலங்கையை பற்றியும் கம்பர் என்ன கூறுகின்றார் தெரியும். "எப்பேற் பட்ட கீர்த்தி, எப்பேற்ப்பட்ட கம்பீரம்."



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக