15 அக்டோபர் 2013

கனவு தொழிற்சாலை - சுஜாதா

சமீபத்தில் சாரு நிவேதிதா அவரது தளத்தில் அசோகமித்திரனை போட்டு சாத்தியிருந்தார். காரணம் அ.மி ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று கூறிவிட்டார். அந்த பாட்டை மட்டும் பாடி விட்டிருந்தால் பரவாயில்லை, அதோடு மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று அனுபல்லவியையும் பாடிவிட்டார். சாரு நிவேதிதாவின் தாக்குதலில் அவர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும் ஒப்பிட்டிருந்தார், இரண்டும் ஒரே மாதிரி என்று, இது கனவு தொழிற்சாலையை மீண்டும் எடுத்துப் படிக்க தூண்டியது.

கரைந்த நிழல்களையும், கனவு தொழிற்சாலையையும் ஒப்பிடவே முடியாது. இரண்டும் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றாலும், கரைந்த நிழல்களின் உலகம் தனி, கனவு தொழிற்சாலையின் இடம் தனி. கரைந்த நிழல்கள் சில படிகள் மேலேதான் அமர்ந்திருக்கின்றது.

கனவுதொழிற்சாலை, சினிமாவின் பெரும்பாலான தளங்களை தொட்டு செல்கின்றது. அருண், அருமைராசன், மனோன்மனி என்று மூன்று ட்ராக். அருண் வெற்றி பெற்ற சினிமா நடிகன், வெற்றியை தக்கவைக்க போராடும் நடிகன். அருமைராசன் சினிமாவில் நுழைய போராடி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து ஜெயிப்பவன், மனோன்மணி போராடி கடையில் பொசுங்கி போகின்றாள்.

இந்த மூன்று இழைகளில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் தொட்டு செல்கின்றார் (தொட்டுதான்). தொடர்கதை என்பதால் அதற்கேற்றவாறு அங்கங்கு சின்ன சின்ன ட்விஸ்டுகளை வைத்து எழுதியுள்ளார். 

இதில் அருமைராசன் கதையும், மனோன்மணி கதையும் கொஞ்சம் நிஜவாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. மைய இழையான அருணின் கதை டிபிக்கல் தொடர்கதை, தேவையில்லாத சம்பவங்கள். குறிப்பாக அருண் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணின் கதை, சோக கீதம். 

சினிமாவின் பளபளப்பிற்கு பின்னால் இருக்கும் மற்றுமொரு முகத்தை, தொடர்கதை நிர்பந்தத்தையும் மீறி சொன்னதில்தான் சுஜாதாவின் வெற்றி. 

புத்தகத்தின் முன்னுரையில் வரும் கலந்துரையாடலில், கதையின் கதாநாயகியை பற்றி ஆகா ஓகோ என்று பேசுகின்றார், அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று. விகடனார் மாற்றிவிட்டார் போல. 

கரைந்த நிழல்களுடன் ஒப்பிட்டால் இது சாதரண தொடர்கதைதான். ஆனால் படிக்க விறுவிறுப்பான ஒரு கதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக