28 அக்டோபர் 2013

செம்பருத்தி - தி. ஜானகிராமன்

செம்பருத்தி மோகமுள்ளிற்கு கீழே அன்பே ஆரமுதா வகையறாவிற்கு மேலே.சட்டநாதன் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான். பழைய சினிமா பாணியில் அவள் அவனது இரண்டாவது அண்ணனுக்கு மணமுடிக்கப் படுகின்றாள். சட்டநாதன் சின்ன அண்ணனுடன் கடையில் இருக்கின்றான். பெரிய அண்ணன் வெளியூரில் வசதியாக இருக்க, சின்ன அண்ணன் இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு சின்ன அண்ணன் பார்த்து வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான். தன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம் என இரண்டு குடும்பங்களையும், பின்னர் பெரிய அண்ணன் குடும்பம் என மூன்று குடும்பங்களையும் சட்ட நாதன் பல பக்கங்களுக்கு காப்பாற்றுகின்றான். ஹாவ்வ்வ்

வழக்கமான தி. ஜா ப்ராண்ட் பெண்கள். காதலும் காமமும் கலந்த பெண்கள். ஜெயமோகன் எழுதியிருந்தது, "அம்மா வந்தாளின் இந்து தான் குஞ்சம்மாள், அலங்காரத்தம்மாள்தான் பெரிய அண்ணி, ஒரு சிறிய காட்சியில் தோன்றி மறையும் பெண் (அப்புவிற்கு அவனது அப்பா பார்த்து வைத்திருக்கும் பெண்) புவனா". சரிதான். குஞ்சம்மாள் கணவனை இழந்த பின்னும், சட்டநாதனின் காதலை மறவாமல் அவனை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் போதும் என்று அங்கேயே இருக்கின்றாள். புவனாதான் செம்பருத்தி, தலைப்பின் நாயகி.


புவனாவின் தந்தை ஒரு பெரிய பக்திமான், தத்துவங்கள் பல பேசுபுவர். அவர் மகள் அவருக்கேற்ப பக்குவமாக இருக்கின்றாள். சட்டநாதனுக்கு அறிவுரை சொல்வது, பெரிய அண்ணியை அனுசரித்துப் போவது என்று. சின்ன அண்ணி பாத்திரமும் வினோந்தமானது. கணவன் இறந்த பின் ஒரு விடுதலை. தான் முன்பு காதலித்தவனை ஒரே ஒரு முறை கட்டி தழுவியதில் தன் காலத்தை தள்ளுகின்றாள். ஆனால் அவளும், அவளின் மகள் திருமணமானது, அவளுடன் சென்று விடுகின்றாள். பெரிய அண்ணி கணவன் இருக்கும் போதே வேறு பக்கம் போகின்றாள், கணவனின் ஆசை நாயகியை காரணமாக்கி. இதற்குள் சட்டநாதன் சுற்றி வருகின்றான்.


நன்றாக போகும் கதை பின்னால் ஏப்படியோ போகின்றது. புவனாவை நாற்பதுகளின் பிரச்சினையில் தள்ளி, அப்பாத்திரத்தின் தன்மையையே மாற்றுகின்றார். என்னதான் அக்காலகட்டத்தில் பெண்களின் மனது மாறுமென்றாலும் இப்படி மாறுமா? அடிப்படை குணமே மாறுமா என்ன?சட்டநாதனின் அகங்காரம் உடைபடுவது, குஞ்சம்மாள் தன் மகளுடன் இருக்க கிளம்பி செல்வது. அதுவரை ஒரு பெருமிதத்துடன் இருந்தவனின் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு போகின்றாள்.

கடைசி சில பகுதிகளில் கம்யூனிசம் பேசும் சட்டநாதனின நண்பர், பெரிய அண்ணன், புவனாவின் தகப்பனார் என பாத்திரங்களை அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.  பெரிய அண்ணின் கதை தனி ட்ராக். இன்றைய மெகா தொடர் வில்லிகளுக்கு அடிப்படை..

குஞ்சம்மாவுடனான காதலில் ஆரம்பிக்கும் கதை, படிபடிக்க விறுவிறுப்பாக போகின்றது. பெரிய அண்ணி இறந்ததும் கதை தரை தட்டுகின்றது.

பெண்களின் உலகத்தில் சிக்கிய ஒரு ஆணின் கதையை எழுத ஆரம்பித்தவர், கடைசியில் எப்படி முடிப்பது என்று குழம்பி விட்டது போல தெரிகின்றது. தானும் குழம்பி, பாத்திரங்களையும் குழப்பி எடுத்துவிட்டார். விறுவிறுப்பாக போகும் நாவல் அனைவருக்கும் வயதான் பின் தள்ளாடி, தூக்கத்தை வரவழைக்கின்றது. நல்ல வேளை முழுவதும் தூங்குவதற்கு முன் முடிந்துவிட்டது. ஒரு நல்ல மெகா சீரியலுக்கான கதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக