09 நவம்பர் 2013

கலங்கிய நதி - பி. ஏ. கிருஷ்ணன்

கலங்கிய நதி. பி. ஏ கிருஷ்ணனின் இரண்டாவது 'தமிழ்' நாவல். ஆங்கிலத்தில் மட்டி ரிவர் என்ற பெயரில் எழுதப்பட்டு, அவரே மீண்டும் தமிழில் எழுதிய கதை. அஸ்ஸாம் மாநிலத்தில் கடத்தப்பட்ட ஒருவனை மீட்க செல்லும் ஒருவனின் கதை . சினிமா மாதிரி காட்டிற்குள் தலையில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு சென்று அல்ல. இங்கு கடத்தல் என்பது ஒரு சின்ன முடிச்சு. அதை சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகள். அனைத்திற்கும் மேலே இப்புத்தகம் பேசுவது அதிகாரத்தை பற்றி, நமது அரசியலை பற்றி, அரசாங்கத்தை பற்றி, அதிகாரிகளை பற்றி.

முதலில் கவர்ந்தது கதை சொல்லும் முறை. கதையின் நாயகனான ரமேஷ் சந்திரன் ஒரு நாவல் எழுதுகின்றான், அதை அவன் நண்பர்களுக்கு படிக்க அனுப்புகின்றான். அவர்களின் பதில், அவன் மனைவியின் பதில். இப்புத்தகமே ஏதோ ஒரு உண்மை சம்பவத்தி அடிப்படையில் எழுதப்பட்டதோ என்னவோ? ரமேஷ் சந்திரன் கடத்தலை பற்றி எழுதுகின்றான். உண்மை சம்வத்தை கொஞ்சம் மாற்றி அவன் எழுதுகின்றான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அவன் மனைவி, நாவலை பற்றி பேசும் போது கூறுகின்றாள். சந்திரன் உண்மை என்று நம்பியதை அப்படியே எழுத, அதன் பின்னால் இருந்த உண்மையான உண்மையை மனைவி கூறுகின்றாள். குழப்பமாக இருப்பது போல தோன்றினாலும், படிக்கும் போது ஒன்றும் தோன்றவில்லை.

கடத்தல்தான் மைய இழை போல தோன்றினாலும், அதைச் சுற்றி பல கதைகள். அஸ்ஸாமில் நடக்கும் தீவிரவாதம், கம்யூனிசம், அஸ்ஸாம் பூர்வீக குடிகளுக்கும் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்குமான பிரச்சினை, காந்தி, சந்திரனின் சொந்த வாழ்க்கை, அரசாங்க திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் என பல விஷயங்களை தொட்டு செல்கின்றது. சந்திரன் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு மெதுவாக காந்தியை வந்தடைகின்றான். அதுதான் கதையின் உச்சம்.


இப்புத்தகம் ஒரு புதிய உலகை காட்டியுள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாம் பெரும்பாலும் மறந்துதான் போகின்றோம். அதுதான் அங்குள்ளவர்களின் பிரச்சினையும் கூட. அஸ்ஸாமை பிரிக்க போராடும் போர் குழுக்கள், ஃபோடோ, அஸ்ஸாம் மக்களுக்கு பிரச்சினைதரும் பங்களாதேஷ் இஸ்லாமியர்களின் சட்ட விரோத குடியேற்றம், அவர்களுக்கு ஓட்டுக்காக ஜால்ரா அடிக்கும் கட்சிகள், இவையெல்லாம் அறைகுறையாக தெரிந்து கொண்டிருந்தாலும் இதில் கொஞ்சம் விவரங்கள் அதிகம்.

பாரதி மணி அவர்களின் கட்டுரைகளில் அரசாங்க அதிகாரிகள், அவர்களின் அதிகார விவகாரங்களைப் பற்றி படித்துள்ளேன். சில கட்டுரைகளின் மூலம், அதிகாரிகள் நினைத்தால் என்ன செய்யலாம், எங்கு ஓட்டைகளை கண்டு பிடிக்கலாம் என்பதை பற்றி படித்து வியந்ததுண்டு. இதில் வரும் ஊழலும் அதைக் கண்டுபிடித்த பின்னும் அதை தீர்க்க முடியாமல் திணறுவதும் உண்மையில் நடந்திருந்தால் வெட்கக்கேடுதான். சட்டம் என்று ஒன்று இருந்தாலும் நடைமுறைச் சட்டம் என்று வேறு ஒன்றும் இருக்கின்றது. சில விஷயங்கள் நடைமுறையில் சாத்தியமில்லாமல்தான் போகின்றது. கடத்தல்காரர்களுக்கு பணம் தருவது, அப்பணத்தை எப்படி அரசு கணக்கில் சேர்ப்பது என்பது எல்லாம் தலையை சுற்ற வைக்கின்றது. 

அங்கங்கு இவையனைத்தையும் பகடி செய்து கொண்டு போகின்றார். மேலதிகாரியின் "டீ" பிரச்சினையும் அதற்கு எழுதப்பட்ட கோப்பும், அதிகாரிகளின் பாதாம், முந்திரி, கடலை பிரிவினை.அரசாங்கம் என்பது எவ்வளவு பெரிய இயந்திரம் என்பதும் நாம் உண்மை என்று காண்பது எந்தளவிற்கு உண்மை? நாம் எந்தளவிற்கு ஊடகங்களாலும், அரசாலும் ஏமாற்றப்படுகின்றோம்.ஒரு அரசுக்கும் சாமான்யர்களுக்கும் இடையில் எப்போது ஒரு ட்ரான்ஸ்பரன்சி இருக்க முடியாது என்பது தெளிவு. 

அடிநாதமாக அமைவது சந்திரனின் காந்தியை நோக்கி நகர்த்தும் நிகழ்வுகள்.  சந்திரனின் போராட்ட குணம் கடைசி வரை சென்று போராடும் சந்திரன் கடைசியில் கடத்தப்பட்டவனை விடுவிகின்றான். அதிலும் அவனுக்கே தெரியாமல் அவனை ஒரு முகமூடியாக நிறுத்தி பின்னால் பல வேலைகள்  நடைபெறுகின்றது. அஸ்ஸாமில் நடக்கும் வன்முறையும், அதிலும் அமைதியாக தன் வேலையை செய்யும் காந்திய வாதி ராஜவன்ஷியுன் பேச்சு மெதுவாக அவனை மாற்றுகின்றது. இறுதியில் காந்திய வழியில் போராடி படுத்துக் கொண்டே நாவல் எழுதிக் கொண்டிருக்கின்றான்.

ஏகப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள். பறவைகளின் தற்கொலை, பலி தரப்படும் காளைகள், மலையை போர்த்தி நிற்கும் பட்டாம்பூச்சிகள். பிரம்மபுத்ரா. பயங்கரவாதிகளுக்கும் மீடியாவிற்குமான தொடர்பு. கடத்தலின் பின்னால் நடக்கும் சமரசமுயற்சிகள், கடத்தலின் போது நடக்கும் விஷயங்கள், தனி மனித பலவீனங்கள்.

இதில் மற்றுமொடு சரடு, ரமேஷ் சந்திரனின் குடும்ப வாழ்க்கை. அனுபமா என்று ஒரு கிளைக்கதை. அதுவும் சுவாரஸ்யமாகா உள்ளது.

படித்து வைத்த பின், ஒரு வேறு உலகிலிருந்து மீண்டு வந்தது போல தெரிகின்றது. அதோடு இந்த அரசியல் வலைப்பின்னல்களின் நடுவில் நாமெல்லாம் ஒரு சாமனியன் என்ற எண்ணமும் வந்து போகின்றது. காந்திதான் இதற்கெல்லாம் ஒரு முடிவு என்பது போல தோன்றினாலும் அதை ஏற்க முடியவில்லை.

3 கருத்துகள்:

  1. //அரசாங்கம் என்பது எவ்வளவு பெரிய இயந்திரம் என்பதும் நாம் உண்மை என்று காண்பது எந்தளவிற்கு உண்மை? நாம் எந்தளவிற்கு ஊடகங்களாலும், அரசாலும் ஏமாற்றப்படுகின்றோம்.ஒரு அரசுக்கும் சாமான்யர்களுக்கும் இடையில் எப்போது ஒரு ட்ரான்ஸ்பரன்சி இருக்க முடியாது என்பது தெளிவு. //

    இதேபோல் பலமுறை யோசித்ததுண்டு. படிக்கவேண்டிய புத்தகம். எந்த பதிப்பகம் என்று பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு