14 ஜனவரி 2014

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்

ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை. 

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும். 


இதற்கு இணையான நகைச்சுவையை அளிப்பவர்கள், இவர்களுடன் மல்லுகட்டும் கம்யூனிச எதிர்ப்பு வீரர்கள். கைய பிடிச்சு இழுத்தியா கதையாக, இருவரும் மாறி மாறி சம்பந்தமில்லாமல் பேசிக்கொள்வதைப் படிப்பதுதான் ஒரு காலத்தில் எனக்குப் பெரிய பொழுது போக்காய் இருந்தது. இருவருக்கும் தெரியும் அடுத்தவரை மாற்ற முடியாது என்று இருந்தும் விடாமல் பேசுவது, சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பது என்பது, படித்தால் தெரியும் அதன் சுவாரஸ்யம். கடைசியில் ஒருவரி ஒருவர் கிண்டலாகவும், கேலியாகவும் வசைபாடுவதில் முடியும். கேள்வி கேட்டவனை பர்சனலாக திட்டுவதே வாதத்திறமை, வெற்றி என்பதே இவர்களின் முடிவு.

இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு விஷயம் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மறுபக்கம், அவர்களின் படுகொலைகள். ஒருவர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர் என்றால், மற்றொருவர் வந்து அவரின் மறுபக்கம் என்று பட்டியலிடுவார். அவர் மீண்டும் வந்து அது புளுகு என்று நம்மைத் தெளியவைப்பார். இப்படி மாறி மாறி உண்மைகளைக் கூறி நம்மைக் குழப்புவார்கள், கடைசி வரை உண்மை தெரியாது. முழுவதும் எனக்குத் தெரியவைத்தது இப்புத்தகம். படித்து முடித்த பின் தோன்றியது நல்ல வேளை இவர்கள் நமது நாட்டு ஏழைகளை ரட்சிக்கப் புறப்படவில்லை என்பதுதான். ஹிட்லரின் படுகொலைகளைக் கூட சாதரணமாக்கிய படுகொலைகளைத் தந்தது கம்யூனிசம் என்பதே இப்புத்தகம் காட்டும் பிம்பம். 

அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்களை பல ஆண்டுகளாக படித்து வருகின்றேன். திண்ணையில் அவர் எழுதியது, இப்போது தமிழ் ஹிந்துவில். மதச்சார்பின்மை என்ற பெயரில் போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு தர்ம அடி தந்துவிட்டும் போகும் இடத்தில், இவரை போன்ற ஒருவர் தேவை. சரியான ஆதாரங்களுடன், தர்க்க ரீதியாக ஒரு கருத்தை தெரிவிக்கும் இவரது படிப்பின் விசாலம் எப்போது என்னை வியக்க வைப்பது. இப்புத்தகத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள லிஸ்டை பார்த்தாலே தெரியும்.

அரவிந்தன் நீலகண்டன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இப்புத்தகம் அவரின் புளுகு மூட்டை என்று ஒற்றை அடியில் இதை தாண்டி சென்றுவிடுவார்கள். ஆச்சர்யம் இணையத்தில் எவனோ எதோ சொன்னான் என்று வரிந்து கட்டி கொண்டு பாயும் பலர், இப்புத்தகத்தை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. தேடி தேடி பார்த்தேன், இதை ஆதாரப்பூர்வமாக மறுத்து ஒரு வரி கூட இல்லை. காரணம் அ. நீ காட்டும் அனைத்து வரிகளும் அதிகாரபூர்வ, கம்யூனிச தலைவர்களின் வரிகள், கம்யூனிச அரசின் அறிக்கைகள், கடிதங்கள். எப்படி மறுக்க முடியும் என்று விட்டு விட்டார்களோ என்னவோ. இது உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கம்யூனிசத்தின் பிதாமகர்களில் ஆரம்பித்து இந்திய கம்யூனிச தலைவர்கள் வரை செல்கின்றது. மார்க்ஸின் மூல கம்யூனிச தத்துவமான முரணியக்கத்தின் மூல தத்துவம், அதன் வளர்ச்சி. மார்க்ஸ் / ஏங்கல்ஸ் அவர்களின் ஊருக்கு உபதேசத்திற்கும், சொந்த சோகக்கதைக்குமான முரணியக்கம்!. தத்துவத்தை வளைப்பது அங்கே ஆரம்பித்துவிட்டது.

ரஷ்யாவின் ஜார் மன்னர்களுக்கெதிரான விவசாயிகளின் புரட்சி, லெனின் அப்புரட்சியை அறுவடை செய்தது, பின்னர் அப்புரட்சியில் கம்யூனிசத்தை நுழைத்தது. லெனின் நடத்திய படுகொலைகள். ஜார் மன்னரின் குழந்தைகளைக் கூட கொன்றது. ஸ்டாலின் - லெனின் போர், ஸ்டாலினின் ஆதிக்கம், அவரின் படுகொலைகள். பஞ்சம். பஞ்சத்திற்கு அமெரிக்கவிடம் பிச்சை. ஹிட்லருடன் போர் ஒப்பந்தம். ஹிட்லரின் ஒப்பந்த மீறல். செம்படைகள் செய்த படுகொலைகள், மறைக்கப்பட்ட இடுகுழிகள். விவசாயிகளின் படுகொலைகள், வலுக்கட்டாயமாக அவர்களை இடப்பெயர்ச்சி செய்தது. மனித உழைப்பை சுரண்டி வளர்ச்சியை காட்டியது. அதன் பின்னால் இறந்த லட்சக்கணக்கான மக்கள். மாவோவின் ரத்த வெறியாட்டம். கலாச்சார புரட்சி என்று சாதுக்களை கொல்வது. விவசாயிகளை தொழிலாளர்களாக மாற்றியது. மீண்டும் பஞ்சம். காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்டா? சேவின் மறுபக்கம், இந்திய புரட்சியாளர்கள் அந்நிய விசுவாசம், துரோகம்.

அங்கங்கு நகைச்சுவையும் உள்ளது. சீனாவில் குருவிகளை கொன்றது பின்னர் 2000 குருவிகளை இறக்குமதி செய்தது.

இதையும் அவர்கள் ஒருவரியில் கடந்து சென்று விடுவார்கள், இவர்கள் எல்லாம் உண்மையான கம்யூனிஸ்டுகளல்ல, போலிகள். அந்த குழுவிற்கு அவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகள், மற்றவர்கள் போலிகள். அவர்கள் கையில் ஆட்சி வந்தால் தேனும் பாலும் ஓடும். ஆனால் உண்மை எங்கெல்லாம் கம்யூனிசத்தின் கையில் அதிகாரம் சென்றதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடி, பிணங்கள்தான் சேர்ந்துள்ளன என்று முடிக்கின்றார்.

கேட்கலாம், எப்படி அ.நீ கூறுவதை அப்படியே ஏற்று கொள்ள முடியும் என்று. ஒன்றும் தவறில்லை. இன்று நம் கலாசாரத்தையும், நமது புராணங்களையும், இதிகாசங்களையும், வரலாற்றையும் யாரோ எப்போதோ சொன்ன ஒன்றை வைத்துக் கொண்டு இத்தோழர்கள் தூற்றும் போது, நாமும் இதை அப்படியே நம்புவதில் தவறில்லை. மேலும் அ.நீ ஒரு பெரிய புத்தக லிஸ்டையே தந்துள்ளார். வேண்டுமானால் படித்துக் கொள்ளலாம். பிற்சேர்க்கையாக ஏகப்பட்ட தரவுகள். அதனால்தான் யாரும் மறுக்கவில்லை போல. 

கிழக்கு பதிப்பகம் - இங்கே சென்று வாங்கலாம்.

2 கருத்துகள்:

  1. //முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும்//

    :))))))))))

    //அரவிந்தன் நீலகண்டன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இப்புத்தகம் அவரின் புளுகு மூட்டை என்று ஒற்றை அடியில் இதை தாண்டி சென்றுவிடுவார்கள்.//

    அதானே!

    சுவாரஸ்யம் இல்லாத சப்ஜெக்ட். எனவே வாங்கும் எண்ணம் இல்லை! புத்தகத்தில் என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதற்காக உங்கள் கட்டுரையை முழுதுமாகப் படித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. சும்மா தகவலுக்கு : புயலிலே ஒரு தோணி வாங்கி விட்டேன்! :)))

    பதிலளிநீக்கு