30 ஆகஸ்ட் 2013

யயாதி - காண்டேகர்

அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும் பயம் முதுமையை பற்றியது. முதுமையின் பயம் நம் இளமையின் அழிவைக் கண்டு. பாரதம் படித்தவர்களுக்கு இளமை என்றவுடன் நினைவில் வருவது யயாதி. மகாபாரதத்தில் வரும் ஒரு சிறிய நிகழ்ச்சி யயாதியின் வாழ்க்கை. அது பாரதத்தின் ஒரு முக்கிய பகுதி. யயாதியின் மகன் புரு வழியாகத்தான் பாண்டவர்கள் / கெளரவர்களின் வம்சம் வளர்கின்றது.

அச்சிறிய பகுதியை இரண்டு பாகங்களாக விரியக் கூடிய பெரிய நாவலாக எழுத முடியும் என்பதே ஆச்சர்யம்தான். அதற்கு கண்டிப்பாக அசாத்ய கற்பனை வளம் வேண்டும். வி. எஸ். காண்டேகர் அதை சாதித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோ எழுத்தாளர். படிப்பவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இப்புத்தகத்தில் அது போன்று ஏதுமில்லை.

தேவயானி அசுர குரு சுக்ராச்சாரியாரின் புதல்வி. தேவர்களின் குரு பிரகஸ்பதியின் மகன் கசன், சுக்ராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவீனி வித்தையை கற்றுக்கொள்ள வருகின்றான். சுக்ராச்சாரியார் அம்மந்திரத்தை கொண்டுதான் தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களை உயிர்ப்பித்து வருகின்றார். தேவயானி கசன் மீது அன்பு கொள்கின்றாள், கசனின் நோக்கத்தை அறிந்து அசுரர்கள் அவனை இரண்டு முறை கொல்ல, சுக்ராச்சாரியார் தன் மகளுக்காக அவனை உயிர்ப்பிக்கின்றார். கடைசியில் அவனை எரித்து சாம்பலை சுக்ராச்சாரியாருக்கு கள்ளில் கலந்து தருகின்றனர். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்த படி சஞ்சீவீனி வித்தையை கற்றுக் கொண்ட கசன், சுக்ராச்சாரியாரின் வயிற்றை கிளித்து வெளியே வந்து, சுக்ராச்சாரியாரை உயிர்ப்பிக்கின்றான். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் வாசம் செய்ததால் தேவயானி சகோதரி முறையாகின்றாள் என்று அவளின் அன்பை மறுத்து செல்கின்றான் கசன். இது ஒரு கதை

சர்மிஷ்டை அசுர குல அரசன் விருஷபர்வாவின் மகள். அவள் ஒரு சண்டையில் தேவயானியை கிணற்றில் தள்ளிவிட்டு செல்கின்றாள். வேட்டையாட வந்த யயாதியால் காப்பாற்றப்படும் தேவயானி அவனையே மணந்து கொள்கின்றாள். தன் தந்தையை அவமதித்த சர்மிஷ்டையை தன் பணிப்பெண்ணாக்கி கொண்டு அஸ்தினாபுரம் செல்கின்றாள்.

அஸ்தினாபுரத்தில் தேவயானியுடன் இருக்கும் யயாதி, சர்மிஷ்டையுடன் கூடி குழந்தகைளை பெற்றுக் கொள்கின்றான். அதையறிந்த சுக்ராச்சாரியார் அவனை முதுமை வந்தடைய சபிக்கின்றார். பின்னர் அவரே அதிலிருந்து பிழைக்கவும் வழி காட்டுகின்றார். யயாதியின் மகன்கள் யாரும் முதுமையை ஏற்க மறுக்க, சர்மிஷ்டைக்கு பிறந்த புரு அதை ஏற்றுக் கொண்டு, தன் இளமையை யயாதிக்கு தருகின்றான். 

இதை சாதரணமாக படிக்கும் போதே நமக்கு அக்கதாபாத்திரங்களைப் பற்றி ஒரு சித்திர்ம உண்டாகின்றது. தேவயானி - தந்தையின் தவவலிமை மீது கர்வம் கொண்ட ஒரு பெண், சர்மிஷ்டை - தந்தையின் செல்வத்தின் மீது கர்வம் கொண்டவள், தன் தவற்றை உணர்ந்து தன் இனத்திற்காக தியாகம் செய்யும் ஒரு பெண். அதே சமயம், யயாதியீடம் பிள்ளைபேறை யாசித்து பெற்றவள். யயாதி - தேவயானியின் அழகால் மயங்கினாலும், அவளின் தந்தையின் தவ வலிமையை நினைத்து ஒரு பயத்துடனே இருப்பவன்.

இக்குணாதிசியங்களை விரித்து, கொஞ்சம் மாறுதல்களை செய்து உலவ விட்டுள்ளார். கொஞ்சம் மிகைப் படுத்தலும் உண்டு என்றே எனக்கு படுகின்றது. 

மனைவியின் தகுதி தன்னை விட உயர்ந்ததாக ஒருவன் நினைக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? சாராசரி மனிதனுக்கே அது கொஞ்சம் கடினம். ஒரு மன்னனுக்கு? மன்னன் என்னும் இயல்பான கர்வம்? தேவயானியின் அப்பாவின் தவ வலிமைக்கு குறையாதது மன்னனின் கடமை, வீரம் ஆனால் அவனால் அதை முழுவதும் நம்ப முடியவில்லை. தன்னால் ஆள முடியாத மனைவியை விட்டு வேறு பாதையில் போகின்றான்.

கதை ஓவ்வொருவரின் பார்வையிலும் விரிகின்றது. மூவரும் மாறி மாறி தம் கதையை, அவர்களின் மனவோட்டத்தை கூறுவதாக அமைத்துள்ளார். யயாதி காமத்திற்கும், அரச பதவிக்கும் அதன் பொறுப்பிற்கும் நடுவில் சிக்கி தவிக்கின்றான். 

பல பல கேள்விகளை எழுப்புகின்றார்.யயாதியின் மனவோட்டங்களை, அவனது குழப்பங்களை நமக்கு நெருக்கமாக காட்டுகின்றார். அவனை ஒரு காமுகனாகவே காட்டியிருக்கின்றார். ஒரு காமுகனான யயாதியின் மனதில் என்ன வித உணர்ச்சிகள் ஏற்பட்டிருக்க முடியும், காமத்தை தவிர. யோசித்துபார்த்தால் குற்ற உணர்வு. அதற்கு காரணமாக இதில் காட்டப்படுவது கசன். கசன் யயாதி, தேவயானி, சர்மிஷ்டை மூவரிடமும் தன் ஆளுமையை விதைத்து விட்டு போகின்றான். அது தேவயானியிடம் பலனளிக்க வில்லை. சர்மிஷ்டை அசுர குல பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு தியாக மனப்பான்மை உள்ளதற்கு கசனை காரணமாக்குகின்றார். யயாதிக்கு கசனின் தத்துவங்களால் உண்டாவது குற்ற உணர்ச்சியும், குழப்பமும். கசனின் வழிகளை ஏற்றுக் கொள்ளும் அவனால் அதை  பின்பற்ற முடிவதில்லை.

தேவயானி கசனையும், சர்மிஷ்டையையும் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கவே, யயாதியை மணக்க விரும்புகின்றாள். "எந்த முனிகுமாரனும் உன்னை மணக்கமாட்டான்" என்ற கசனின் சாபத்தையும், "என் தந்தையிடம் பிச்சை எடுத்து வாழுபவனின் மகள்" என்ற சர்மிஷ்டையின் வசையையும் அஸ்தினாபுர மகாராணி என்ற அந்தஸ்தால் வெல்ல நினைக்கின்றாள். அரசனையும் ஆட்டி வைக்கும் அவளால் கசனிடம் ஒரு துளி (ஏ)மாற்றத்தையும் உண்டாக்க முடிவதில்லை. அதே சமயம் சர்மிஷ்டையிடமும் தோற்று போகின்றாள். தேவயானி பாத்திரம் அந்தளவு முழுமையாக இல்லை என்பது போல தோன்றுகின்றது. படையப்பா நீலாம்பரி போல ஆகிவிட்டது.

சர்மிஷ்டை ஒரு தியாகியாக காட்டப்பட்டாலும், அவள் தேவயானியை சிறப்பான முறையில் வஞ்சம் தீர்த்து கொள்கின்றாள். அவளுக்கு தேவயானியை பழிதீர்க்கும் எண்ணம் இருப்பதாக காட்டப்படவில்லை. ஆனால் அவளுக்கு அரசனிடம் உண்டாகும் காதல், காமம் மறைக்கப்படவில்லை. அது தவறு என்ற எண்ணமும் அவளுக்கு வரவில்லை. அவள் காட்டில் சென்று வாழும் பகுதி எல்லாம் கொஞ்சம் நாடகத்தன்மையான சோக ரசம்.

பாரதத்தில், யயாதி அனைத்தையும் அனுபவித்து பின்னர் இளமை ஆசைக்கு முடிவேயில்லை, ஆசை அடங்காது, இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இளமையை மீண்டும் புருவிற்கு தருகின்றான். இக்கதையில் கொஞ்சம் நாடகத்தன்மையை கலந்துவிட்டார்.  யயாதியின் இயல்புக்கு அது பொருத்தமாக இல்லை.

ஆசிரியர் தன் கற்பனையை நன்றாகவே கலந்துவிட்டுள்ளார். பல கற்பனை பாத்திரங்கள். சர்மிஷ்டையை தியாகியாக்கிவிட்டார். பாரதத்தில் சஞ்சீவினி வித்தையுடன் மறையும் கசன் இதில் அடிக்கடி வருகின்றான். யயாதிக்கு பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் மாறுகின்றது. ஒன்று போதும் என்று குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டார். யயாதியின் மற்ற குழந்தைகள் மறுப்பதற்கு காரணமாக கூறப்படுவதேல்லாம் இதில் இல்லை. இதை பாரதத்தின் ஒரு பகுதி என்று நினைத்து படித்தால் ஒரு மாதிரியாக தோன்றலாம். இது பாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு முழு கற்பனை கதை என்று படித்தால், இது ஒரு அற்புதமான நாவல்.

கதையில் உறுத்துவது, தற்கால சொற்கள். கதை முழுவதும் இந்தியா என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது. யயாதி காலத்தில் இந்தியா ஏது. அதே போல் காலம் எல்லாம் மணி கணக்கில் குறிப்பிடப்படுகின்றது. அப்போதெல்லாம் நாழிகை கணக்குதானே. ஒரு வேளை யயாதி இந்த காலத்தில் வந்து கதை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். கிருஷ்ணா கிருஷ்ணாவில் நாரதர் பேசுவது போல்.

பாரதம் முழுக்க விரவி கிடப்பது தர்மம், அதர்மம் பற்றிய விவாதங்கள். எது தர்மம், எது தர்மம் இல்லை. எங்கு எது தர்மம், யாருக்கு எது தர்மம் என்ற விவாதங்கள் தான். இதுவும் ஒரு வகையான தர்ம அதர்ம விவாதம். ஒரு சிறிய பகுதியாக இருப்பதை, ஒரு பெரிய நூலாக அமைத்துள்ளார். 

மராட்டிய எழுத்தாளர், தமிழ் நாட்டில் இவ்வளவு புகழ் பெற்றவராக இருக்கின்றார் என்றால் அதன் முழுப் பெருமையும் மொழிபெயர்ப்பாளரையே சேரும். கா.கா.ஶ்ரீ எங்கும் மொழிபெயர்ப்பு என்று தோன்றாமல் இருக்கும் படி அருமையாக தன் பணியை செய்துள்ளார் (என் ஒரே ஒரு மொழிபெயர்ப்பு புத்தக அனுபவம் அவ்வளவு சுகமானதில்லை).

மகாபாரதப் பிரியர்களுக்கு பிடித்தமான ஒரு புத்தகம்,

4 கருத்துகள்:

 1. கதையின் உள்ளடக்கம் :- அசுர மன்னர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்கு யது,துர்வசு என்ற குழந்தைகள் பிறக்கிறது. அசுர மன்னன் விருபசேனன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் ஆன சர்மித்ததையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மித்தைக்கு யயாதி மூலமாக துருயு,அனு மற்றும் புரு எனும் மூன்று குழந்தைகள் பிறந்த செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் த்ன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தன் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார். பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார். பின்னர் மற்ற மகன்களான துர்வாசு,துருயு,அனு ஆகியோர் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். தனது இரண்டாம் மனைவி சர்மித்தைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டும் தனது தந்தையான யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி சாபம் நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான். ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவிகளுடன் கானகம் ஏகி நற்றவம் செய்து வீடுபேறு அடைந்தான்.  என்னுடைய தனிப்பட்ட கருத்து யயாதி தன்னுடைய சந்தோஷத்தை எண்ணுபவன் ஆனால் மனிதநேயம் மிக்க நன்றி மறவாதவன் .....

  பதிலளிநீக்கு
 2. யயாதியை என் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். படிக்க ஆரம்பிக்கும் போது சுவராஸ்யமாகவே இருக்கும். ஆனால் போகப்போக இழுவைதான். எப்போது முடிப்பார் என்று அலுப்பாகிவிடும். என்னிடமிருந்த இந்நூலை யாரோ அபகரித்துச் சென்றுவிட்டார்கள். என்னிடமிருந்து காணாமல் போன பல புத்தகங்களை மீண்டும் திரும்ப வாங்கியிருக்கிறேன். ஏனோ இதை வாங்கத் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த இழுவைக்கு காரணம், பின்னால் வரும் மிகுந்த நாடகத்தன்மை, பாரதத்தின் மூலத்திலிருந்து விலகியது.

   நீக்கு
  2. புத்தகத்தை அப்படியெல்லாம் விடக்கூடாது.அறுவை புத்தகமாக இருந்தாலும் திரும்ப பிடுங்கி விட வேண்டும்.

   நீக்கு