பருவா, ஆவரணா நூல்களின் ஆசிரியர் பைரப்பாவின் மற்றொரு நாவல் சார்த்தா. பைரப்பாவின் ஒவ்வொரு நாவலுக்கு பின்னாலும் அவரின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. பருவா நாவலுக்காக மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பார்த்திருக்கின்றார், ஆவரணாவிற்காக அவர் படித்த நூல்களின் வரிசை மிகப் பெரியது. ஒவ்வொரு நூலையும் ஆராயந்து எழுதும் பைரப்பா, இந்த முறை பருவா - ஆவரணா காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஒரு காலத்தை நாவலுக்கான காலமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
வடபகுதிகளில் யார் யார் ஆண்டார்கள், அவர்களின் வம்ச வரிசை எல்லாம் நமக்கு சரித்திரப் பாடத்தில் பரிட்சைக்கு மட்டும் படிப்பதால் மறந்து போகின்றது. அசோகர், சந்திரகுப்தர், சாளுக்கியர்கள், பாடலிபுத்திரம், ஹர்ஷர், பிம்பிசாரர், கன்யாகுப்தம் என்று சில பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அந்த காலகட்டத்தை பற்றிய புத்தகம். இப்புத்தகம் அசோகரின் காலத்திற்கு பின்னால், புத்தமத எழுச்சி காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் நடக்கின்றது.
ஆதி சங்கரரின் காலம் ஒரு சிக்கலான காலகட்டம். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொண்டு நிம்மதியாக இருந்த காலம். விந்திய மலைக்கு வடக்கே, நிலையற்ற அரசுகள். புத்த, சமண மதங்களின் எழுச்சி. அவர்களின் சில தத்துவங்கள் மக்களிடையே உண்டாக்கிய செயலற்றதன்மை. புத்த, சமண மதத்தவர்கள் தங்கள் மதத்தை வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த காலம், அவர்களுக்கு வணிகர்களின் ஆதரவும் இருந்தது, வடமேற்கில் எழுந்த அரேபியர்களின் மதமாற்ற தீவிரம். இதற்கு நடுவே சிக்கி சுழலும் ஒருவனின் கதைதான் இது.
சார்த்தா. சார்த்தா என்றால் வணிக குழு. அன்றைய வணிகம் என்பது ஒரு படை கிளம்பல் போல. பல நாடுகளை தாண்ட வேண்டும். நாட்டை தாண்டும் போது சுங்கம் தர வேண்டும், கள்வர்களை சமாளிக்க வேண்டும், உணவு வேண்டும். அப்படி என்றால் அந்த குழு என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டியிருக்கும்? அவர்கள் விற்க வேண்டிய பொருட்கள், அதை ஏற்றி இறக்க ஆட்கள், சுங்கம் போன்ற வழி செலவுக்கான பணம், அங்கு கிடைக்கும் பொருட்களை வாங்க பணம், அனைவருக்கான உணவு தானியங்கள், மாமிச தேவைக்கான பிராணிகள், இவற்றை எல்லாம் கொண்டு செல்ல வண்டிகள், வண்டிகளுக்கு ஏதாவது ஆனால் சரி செய்ய அதற்கான ஆட்கள், வழிகாட்டிகள், இவையனைத்தையும் பாதுகாக்க படை வீரர்கள், ஆய்தங்களை சரி செய்ய ஆட்கள்.
ஒரு காலத்தில் இந்த சார்த்தாக்கள் பாரதம் முழுக்க சென்று கொண்டிருந்தன. வடமேற்கு காந்தாரம் தாண்டியும் சென்று கொண்டிருந்தன. அரேபியர்களின் எழுச்சிக்கு பின்னால் தடைபட்டன. எப்படி ஒரு சார்த்தா செயல்படுகின்றது என்பது ரகசியம். அதன் உள்வட்ட நுணுக்கங்கள் வெளியே தெரிவதில்லை. வியாபார ரகசியம். அந்த ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டி ஒரு சார்த்தாவுடன் இணையும் நாகபட்டன் என்னும் பிராமணனின் பயணம்தான் இந்த நாவல்.
தலைப்பிற்கேற்ப சார்த்தாவுடன் ஆரம்பிக்கும் நாவல், மிக விரைவில் சார்த்தாவை விட்டு வேறு பக்கம் நகர்கின்றது. சார்த்தா என்பது படிப்பவனை நாவலின் உள்ளே இழுக்க வைக்கப்பட்ட கொக்கி அவ்வளவே. இது முழுக்க சார்த்தாக்களை பற்றிய நாவல் இல்லை. இது நம் பாரத தேசத்தின் பல தத்துவங்களை பற்றிய நாவல்.
நாகபட்டனை சார்த்தாவுடன் சேர்ந்து அதன் ரகசியங்களை அறிய அனுப்பும் அரசனின் துரோகத்தால் நாகபட்டனின் மனம் தடுமாறுகின்றது. மதுராவிற்கு வரும் நாகபட்டனின் வழி விதவிதமாக போகின்றது. நாடக நடிகனாகும் அவன், யோகமார்க்கத்தின் வழி சென்று, தாந்திரீகனாகி, புத்தமதத்தின் தத்துவங்களால் கொஞ்சம் குழம்பி, நாளந்தா சென்று சேர்கின்றான். இதுவரை வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் கற்பனை, இதன் பின்னால் குமரில பட்டர், மண்டனமிஸ்ரர், ஆதி சங்கரர் ஆகிய பெரியவர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். அவர்களின் கதைகள் வழி, பல தத்துவங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதை ஒருவகை சரித்திர நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
வேறு எந்த நாட்டானுக்கும் இல்லாத ஒரு பிரச்சினை இந்தியனுக்கு உண்டு. தத்துவக் குழப்பம். பாரதத்தின் பாரம்பர்ய தத்துவங்களே ஏராளம். அனைத்திற்கும் மூலமாக இருப்பன வேதங்கள், வேதங்களை விளக்கும் வேதாந்தங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள். வேதங்கள் சொல்வது என்ன என்பதை பலவகையில் பலர் புரிந்து கொண்டு விளக்குகின்றனர். வேதங்களில் கூறப்பட்ட கர்மங்களே முக்கியம் என்பவர்கள் ஒரு பக்கம், வேதங்கள் கூறுவது யோகத்தைப் பற்றியும் முடிவில் கிடைக்கும் ஞானத்தை பற்றியும் என்று ஒரு பக்கம், எல்லாத்தையும் விட்டு அவனை சரணடையுங்கள் என்று ஒரு பக்கம், த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம். ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் உபாசனை செய்பவர்கள், சக்தியை மட்டுமே வழிபடுபவர்கள், தாந்த்ரீகர்கள். இது போதாது என்று இதிலிருந்து கிளைத்து வேறு பக்கம் சென்ற புத்தம், சமணம். நாத்திகம். இதன் நடுவே நாகபட்டன் சிக்கி அலைகின்றான். எது அவனுக்கான வழி என்பது அவனுக்கே தெரிவதில்லை. அனைத்தையும் தொட்டு பார்த்து இறுதியில் ஒரு தெளிவை அடைகின்றான்.
நாவல் வழி அவர் பல தத்துவங்களைப் அறிமுகம் செய்கின்றார். தியானம். தியானம் செய்வது என்பது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது. மெடிடேஷன் பண்றேன். சொல்லும் போதே ஒரு யோகி களை தோன்றுகின்றது அல்லவா. உணரவேண்டிய பல விஷயங்களை, புரிந்து கொண்டதாக நினைத்து ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றனர். சிலர் அதில் வெற்றியடைந்திருக்கலாம், ஆனால் வெற்றி அடைந்தவர்கள் அதிகமாக வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்பதால், பெருமை பாடும் பலரை நம்புவதில்லை. தியானம் பற்றிய அறிமுகம். அதோபோன்று யோகசாதகம். யோகம் என்பது எளிதான் விஷயமல்ல, அதற்கும் சில பின் விளைவுகள் உண்டு, அனைவருக்கும் அது கூடி வருமா? யோகத்தில் இலக்கு என்ன, அதை அடையும் செல்லும் போது வழியில்கிடைக்கும் சக்திகளையே ஒரு சாதனை என்று எண்ண தொடங்கும் போது பெரிய சக்திகள் கிடைக்காமல் போகலாம். தாந்த்ரீகம், எதுவும் தவறில்லை, எதுவும் விலக்கமில்லை, என்று பல சக்திகளை எளிதாக பெற வைக்கின்றது. பெளத்தம். அனைவரையும் துறவிகளாக்க விரும்பும் பெளத்த மத துறவிகள். இறுதியாக வருவது, பாரதத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய சங்கரரின் தத்துவம்.
பைரப்பா தத்துவங்களை அதிகம் திணிக்கவில்லை, பெரிய விவாதங்களுக்குள்ளும் செல்லவில்லை. வாசகனுக்கு ஒரு சிறிய ஆசை காட்டுகின்றார். இது எல்லாம் இருக்கு பாரேன் என்று. உண்மையில் பல தத்துவ விளக்கங்கள் எல்லாம் எனக்கு முழுவதும் புரியவில்லை. இந்த ஒரு நாவல் அனைத்தையும் புரிய வைக்கவும் நினைக்கவில்லை. நம்முடைய தேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது, முன்னோர்கள் எப்படி எல்லாம் சிந்தித்தனர் என்று ஒரு சிறிய அறிமுகத்தை செய்கின்றார். என்ன இது என்று யோசிப்பவர்கள் மேற்கொண்டு போகலாம்.
மதமாற்றத்தை பற்றி வரும் பகுதிகள் பல இன்றைய மதமாற்ற ஏஜண்டுகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. பெளத்தமும், சமணமும் நமது புராணங்களிலிருந்து எடுத்துக் கொண்ட கதைகளைப் போல, இன்று ஹிந்து மதத்திலிருந்து பல விஷயங்கள் திருடப்படுகின்றன. கிரிவலம், பூஜை, ஜெபம், வேதம், ஆராதனை என்று ஆரம்பித்து அமாவாசை தர்பணம் வரை செல்கின்றது.
இறுதிப்பகுதிகள், அரேபியர்கள் அன்றைய மூலஸ்தானை, இன்றைய முல்தான் நகரை கைப்பற்றும் நிகழ்ச்சியுடன் முடிகின்றது. பாரதத்தின் அடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் கையில் போவதை பார்ப்பதுடன் நாகபட்டன் ஒரு வழியாக தன் தேடல்களை விட்டு அமர்கின்றான்.
குறைவான பாத்திரங்கள் நாகபட்டன், சந்திரிகை, ஜெயசிம்மர்,சிற்பி போன்ற பாத்திரங்களுடன் சங்கரர், மண்டனமிஸ்ரர் அவரது மனைவி, அவரின் குரு குமரில பட்டர். குமரில பட்டர் தன் தவறுக்கு பிராயச்சித்தமாக நெருப்பில் இறங்கியது, ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்றது, ஆதிசங்கரர் பரகாயப் பிரவேசம் செய்தது, முலஸ்தானத்தை அரேபியர்கள் கைப்பற்றியது, அங்கிருந்த ஹிந்துக்களை மதம்மற்றியது போன்ற உண்மை சம்பவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
சரித்திரமும், தத்துவமும் கலந்த ஒரு நல்ல நாவல். படியுங்கள்.
புதிய நாவலா? நல்லதொரு அறிமுகம். திரை என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆவாரண மட்டும் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதிரை நாவலுக்கு முன்னாலே எழுதப்பட்டது. 1998 இல் வந்த பழைய நாவல்.
நீக்கு