05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.

கன்யாகுமாரி பகுதிகளில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவர்கள், சிறுபான்மையினர் இந்துக்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அமைக்க பட்ட பாட்டை இங்கு  படிக்கலாம். பா. ராகவனின் மற்றுமொரு அனுபவமும் இங்கு.

என் நண்பன் நாகர்கோவிலில் வேலை செய்த போது அங்கு அக்கம்பக்கத்தினரால் அவனது மனைவிக்கு ஒரே தொந்தரவு. ஒரே ஒரு முறை ஜபத்திற்கு வாருங்கள், வந்து பாருங்கள் என்று விடாமல் குடைச்சல். கடுப்பாகி இனி "இனி யாராவது கூப்டா இந்த அருவாவ எடுத்து வை" என்று அவன் கூறுமளவிற்கு சென்றது. (அவன் அமைதியான ஆள், மத விஷயங்களில் அந்தளவிற்கு ஈடுபாடு கிடையாது, அவனையே கோபப்பட வைத்துவிட்டனர்) 

நாகர்கோவிலை நாதர்கோவில் என்று பெயர் மாற்றவும், கன்னியா குமரியை கன்னி மேரி என்று பெயர்மாற்றவும் ஆசைப்படும் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வளர்ந்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை. இந்துக்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்பையே அவர்களை இந்த பக்கத்தில் சாய்த்திருக்கும்.


இவர்களின் இது போன்ற மதமாற்ற கலாட்டாக்கள் சேர்ந்து சேர்ந்து வெடித்தது மண்டைக்காடு கலவரம். அக்கலவரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாவல் விடிவதற்குள் வா. கல்கியில் தொடர்கதையாக வந்த ஒரு நாவல். (கலவரமே ஆர்.எஸ்.எஸ்ன் திட்டம், அவர்கள்தான் அங்கு பதட்டத்தை தூண்டினார்கள் போனற புருடாக்களை எல்லாம் நம்புவதற்கில்லை, நம்பவிரும்புவர்கள் நம்பலாம் என்ன நஷ்டம்). ஆனால் தவறு இருவரிடமும் இருக்கவே சாத்தியம் அதிகம். இருபுறமும் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையில் எங்கிருந்தோ விழுந்த தீக்குச்சி பலரை பலி கொண்டது.

மண்டைக்காடு மணற்காடாகிவிட்டது. புதிதாக ஊரில் கட்டப்பட்ட சர்ச்சின் மதமாற்றத்தாலும், திருவிழா குழப்பத்தாலும் புகைந்து கொண்டிருக்கும் ஊருக்கு துபாயிலிருந்து வரும் கனகசபை. அவனின் மனைவியை காணவில்லை. கலவரத்திற்கு தேடிக் கொண்டிருந்த காரணம் கிடைத்து விட்டது. சர்ச் வளாகத்தில் கிடக்கும் அவளது வளையலும், புடவையும் கலவரத்தை ஊதிவிட,கலவரம். பாதிரியாருடன் தர்க்கம், கிறிஸ்துவர்களின் கோபம், இந்துக்களின் கோபம், நடுவில் எறியப்பட்ட ஒரே ஒரு கல். கலாட்டா, அடிதடி, மரணம், பழிக்கு பழிக்கு பழி. கலவரம் எல்லா இடத்திலும் பரவி சமாதனமடையும் நேரத்தில், கனகசபையின் மனைவி கிடைக்கின்றாள்.

சுஜாதாவின் சுமாரான கதைதான் இது. அழுத்தமான சம்பவங்கள் ஏதுமில்லை. சிக்கலான விஷயம் என்பதால் மிக அதிக கவனத்துடன் எந்த தரப்பையும் கோபப்படுத்திவிடக் கூடாது என்ற பலத்த யோசனையுடன் எழுதப்பட்டுள்ளது. தவறு இரண்டு பக்கமும் இருப்பது போன்றே எழுதப்பட்டுள்ளது. 

கலவரங்களில் இறப்பு என்பது நடக்கக்கூடியது, ஆனால் பெரும்பாலும் இறப்பது சம்பந்தமில்லாதவர்கள் என்பதை மட்டும் அழுத்தமாக சொல்கின்றது. அதிகாரிகளின் அலட்சியம், பத்திரிக்கைகளின் குஷி, அரசியல்வாதிகளின் ஓட்டு போக்கு, சம்பந்தமில்லாமல் ஆஜாராகும் வெளிநாட்டவரின் நோக்கம் என அனைத்தையும் மேலாக தொட்டு தொட்டு செல்கின்றார். அரசியல்வாதிகளுக்கு சிறுபான்மை ஓட்டு புத்தி, இந்துக்களை ஜாதி ஓட்டு மூலம் அடையலாம். வெளிநாட்டவரின் ஆர்வம், மறுபடியும் மதமாற்றத்தின் மூலமான பணம். மாட்டிக்கொள்வது பாவம் அப்பாவிகள்.

சுஜாதாவின் டச், கதை சொல்லும் உத்தி, வெட்டி செல்லும் நடை, அங்கங்கு வரும் சின்ன சின்ன நகைச்சுவை. ஒரு முறை படிக்கலாம்.

கிழக்கு வெளியீடு - 95 ரூபாய், இங்கே கிடைக்கும்.

இதை பற்றி எழுதப்பட்ட மற்றுமொரு நாவல்

மண்டைக்காடு கலவரங்கள் பற்றி அரவிந்தன் நீலகண்டன் அவர் தளத்தில் வெகு விரிவாக எழுதியுள்ளார். மலர் மன்னனும் எழுதியுள்ளார். அவர் அக்காலகட்டத்தில் நேரடியாக களத்தில் இருந்தவர். இதற்கு எதிர்வினைகளை படித்தால், அவை வெற்று கூச்சலாகத்தான் இருக்கின்றது. இவர்கள் ஆதாரத்துடன் எடுத்து வைக்கும் குற்றசாட்டுகளை வெகு சுலபமான தர்க்கத்தில் (இவர்கள் இந்துத்துவர்கள் அதனால் இது பொய்) மறுத்து செல்கின்றனர். ஆதரப்பூர்வமான மறுப்பு எங்குமில்லை. வெற்று வசைகளின்றி, ஆதாரங்களுடன் பேசும் கட்டுரை யார் கண்ணிலாவது பட்டால் கூறவும்.

3 கருத்துகள்:

 1. //சுஜாதாவின் சுமாரான கதைதான் இது//

  எனக்கு அவரின் 'மண்மகன்' கதை பற்றியும் இதே அபிப்ராயம்!

  நிறைய சுட்டிகள் தந்திருக்கிறீர்கள். அவசரத்துக்கு பா ரா பக்கம் மட்டும் படித்தேன். சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மண்மகன் எனக்கும் பிடிக்கவில்லை ஸ்ரீராம் சார் :-)

   நீக்கு
 2. மண்டைகாடு கலவரம் மற்றும் அது தொடர்பான தகவல்களை செவி வழியாக கேட்டிருந்தாலும் அநீ போன்றோரின் கட்டுரையை கொடுத்து வழிகாட்டியதற்கு முதலில் நன்றிகள் சார்..

  விடிவதற்குள் வா.. நீங்கள் கூறியதைப் பார்த்தால் சுமாராகத்தான் இருக்கும் போலையே.. வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம்... நேரம் கிடைத்தால் சுஜாதாவிற்காக படிக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு