01 மே 2014

இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

சென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.

இரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. "இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது" என்று சுஜாதாவால் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
    
எ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.


இரவுக்கு முன் வருவது மாலை

இரவுக்கு முன்பு வருவது மாலைஎனக்கு ஒரு கெட்ட பழக்கம். அலுவலகம் விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன், எனது பேருந்து வந்துவிட்டால் உடனே ஓடிப் போய் ஏறமாட்டேன். நின்று அதை வேடிக்கை பார்த்து விட்டு, இன்னமுன் இரண்டு பஸ்ஸை விட்டு விட்டு, பிறகு செல்வது வழக்கம். சில சமயம் அதுவுமின்றி தண்டமாக ஆட்டோவுக்கு அழுததும் உண்டு. காரணம் வேறென்ன, திமிர்தான். இந்த பஸ்ஸிற்கு நான் காத்து கொண்டிருக்கவில்லையாக்கும் என்ற எண்ணம். இந்த பஸ்க்காரன் வந்தா உடனே ஓடிப்போய் தொத்திக்கனுமா என்ற எண்ணம். அதை யாருக்கு நிரூபிப்பதற்கு , எனக்கே நிரூபிப்பதற்காக கூட இருக்கலாம். இது மாதிரி பல கிறுக்கு குணங்கள், பலருக்கு இருக்கலாம், வேறு வகையில். அது பெரும்பாலும் தன்னை திருப்தி செய்து கொள்ளவேதான் இருக்கும்.

இக்கதையும் அது மாதிரி இரண்டு பேர்களை பற்றியது. ஒரு ஆண், பெண். சிக்னலில் நின்று கொண்டு மற்றவர்கள் பாதையை கடப்பதை அலட்சியமாக பார்த்து கொள்ளும் இருவர். இருவரும் சேர்ந்து கடக்கும் மாலை அவ்வளவுதான். கதை முழுவது இருவரும் ஒருவருக்காக போட்டு கொள்ளும் வேடமும், பிம்பத்தை கலைய விடாமல் பார்த்துகொள்ளும் திறமையும்தான் கதை. அதைவிட பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆதவனின் கதைகளுக்குரித்தான புத்திசாலித்தனமான வசனங்களும், அடுத்தவரின் மனதை ஆராய்ச்சி செய்வதே வேலையாக கொண்ட பாத்திரங்களும், அந்த நொடியில் தோன்றுவதை செய்து கொண்டு, அதை கொண்டாடும் கதை.

சிறகுகள்

பெரும்பாலான ஆண்களுக்கு கல்லூரி முடித்தது அடுத்து என்ன செய்வது என்ற கவலை இருப்பதில்லை. வேலை தேட வேண்டும், இல்லை கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டும். இன்றும் பெண்களுக்கு குழப்பம் உண்டு. வேலைக்கு செல்வதா இல்லை அப்பா அம்மா தொந்தரவிற்காக திருமணம் செய்து கொள்வதா? இன்று பலர் வேலைக்கு சென்றாலும், இன்னும் அக்காலத்தில் இருக்கும் ஆசாமிகள் உள்ளனர். என் உறவினர் பெண், படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பெண்ணை, சுற்றி நின்று வேப்பிலையடித்து ஸ்கைப்பில் பெண் பார்த்து, இன்று ஸ்கைப் மூலம் தினமும் பேசிக் கொண்டிருக்கின்றாள்.

மாதவனின் ஒரு படம். மாதவனின் தங்கை திருமணம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில், மாதவனிடம் வந்து "அண்ணா எங்காத்துல உன்ன கூப்ட்றா" என்பாள், மாதாவன் "எங்காத்துலயா, இது எப்பலருந்து" என்று முழித்து கொண்டு செல்வார். நிஜத்திலும் பெரும்பாலும் அக்கதைதான். திருமணத்திற்கு கடுமையாக மறுப்பு தெரிவிக்கும் பெண்ணும், திருமணம் ஆன பின் மாறுவதை பார்க்கலாம். சொந்த சிறகுகள்

கல்லூரி முடிக்கும் பெண், மெதுவாக எப்படி திருமணத்திற்கு தயாராகின்றாள், இல்லை தயாராக்கப்படுகின்றாள் என்பதுதான் கதை. கல்லூரியில் ஆட்டம் பாட்டமாக தோழிகளுடன் சந்தோஷமாக இருக்கும் பெண், கல்லூரி முடிந்ததும், வேலை தேட ஆரம்பிக்கின்றாள். வீட்டில் மெதுவாக அவளை திருமணத்திற்கு தயார் செய்கின்றனர். பாட்டு கற்று கொள்வது, சமையல் செய்வது, பணத்தை கையாள்வது என்று நீள்கின்றது. மறுபுறம் அவளது கூட படித்த பெண்களின் காதல்கள், திருமணங்கள், கள்ள காதல்கள், விவாகரத்துகள் என அனைத்தும் நடக்கின்றது. பெண்ணின் திருமண நாளின் முதல்நாள் அழுவதுடன் முடிகின்றது (கதாநாயகிக்கு ஏன் அப்படி ஒரு பெயரை வைத்தார்?)

மீட்சியை தேடி

வேலை தேடவும், எனது எம்.சி.ஏ படிப்பை தொடரவும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து சேர்ந்தேன். வந்த புதிதில் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். வெயில், வெக்கை, அவரசம், ஜன நெருக்கடி எல்லாம் செர்ந்து கிறுக்காக்கிய நேரம். அதே சமயம் சென்னை கற்று தந்ததும் ஏராளம். சென்னையை விட்டு பெங்களூர் வந்த பின் இன்னும் மோசமானது. சென்னையிலாவது பெரியப்பா வீட்டிலிருந்தததால் அவ்வளவு தெரியவில்லை, பெங்களூரில் தனியாக இருந்த போது அதிக எரிச்சல். ஒரு முறை அதிக அழுத்தமாகி, ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டேன். தர மறுத்த மேனேஜரிடம் சண்டை போட்டு சென்றேன். 

இதே போல பலருண்டு. அனைவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும் அவரவர் ஊர் மீது. அது தவறில்லை. ஆனால் அந்த ஏக்கம் இப்போது இருக்கும் இடத்தை ஏளனமாக பார்க்க செய்தால்? சில சமயம் அது ஒரு ஃபேஷனாக கூட தோன்றும். சென்னையில் இருப்பவன் ஊர்க்கு சென்று சென்னையை கேவலமாக பேசுவது, பெங்களூரில் இருப்பவன் சென்னைக்கு சென்று பெங்களூரை கேவலமாக பேசுவது. பேசாமல் அங்கேயே இருக்கலாமே? நமக்கு நம் இடத்தை பிடிக்கும் என்று நம்மையே நம்ப செய்யவே அந்த வேடம். இருக்குமிடத்தில் ஒரு சின்ன நல்லவிஷயம் கூட இருக்காதா என்ன? பெரும்பாலனவர்கள் பேசுவது வெறும் கழிவிரக்கத்தால், ஒரு வித தாழ்வு மனப்பான்மையால், தங்களது இயலாமையால். இல்லை அடேங்கப்பா என்று மற்றவர் பெருமை பேசத்தான்.

தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்தை சேர்ந்த சங்கரின் அப்பா, கிராமத்தை விட்டு நகரத்தில் சென்று வாழ்கின்றார். கிராமத்திற்கு வரும் சங்கருக்கு ஒவ்வொன்றும் புதிதாக அர்த்தமுள்ளதாக தோன்றுகின்றது. அவனது வாழ்க்கை சக்கையாகவும், இவ்வாழ்க்கை சத்தாகவும் தோன்றுகின்றது. உள்ளே உண்டாகும் எரிச்சல், கடைசியில் தூக்கி போட்ட ஒரு சிகரெட் துண்டால் அணைகின்றது. கிராமத்திலிருக்கும் அவனது சித்தப்பா பையனுக்கு அவ்வாழ்க்கை போரடிக்கின்றது. 

கணபதி ஒரு கீழ் மட்டத்து ஊழியன்

டெல்லி வாழ் எழுத்தாளர்கள் எல்லாம் அரசாங்க ஆட்கள் போல, நிறைய கதைகள் அதை வைத்து எழுதியுள்ளார்கள். 

கணபது ஒரு அரசாங்க ஊழியன். ஒரு சாதரணன். ஊரிலிருக்கும் பூர்விக வீட்டை அப்பா விற்பதை பற்றி கவலை கொள்பவன், அதிலிருக்கும் பல அபூர்வ புத்தகங்களின் கதியை பற்றி யோசிப்பவன். மேலதிகாரி விடுமுறையில் செல்வதால் அவரது இடத்தில் ஒரு நாள் அமர்ந்து கொண்டு முழிப்பவன். அவனின் ஒரு நாள் தான் கதை (முதல்வன் படம் அப்பொதே வந்திருந்தால் ஒரு நாளில் அலுவலகத்தையே சீர் திருத்தியிருக்கலாம்) அரசாங்கம் ஆமைத்தேரில் வலம் அழகை இதில் காணலாம். அரசாங்க ஊழியர்களுக்கென்றே ஒரு தனி தோற்றம் வந்துவிடுமோ என்று பல நாள் நான் யோசித்ததுண்டு. கணபதி அப்படிப்பட்ட ஒரு முகத்தில் விடும் குத்து (உவமேயம் எல்லாம் இல்லை, உண்மையான குத்து, வலிக்கும்) கதை முடிவில்.

நதியும் மலையும்

ஒரு நடுத்தரவயது காதல் கதை. 

இசக்கியா பிள்ளை மனைவியை இழந்து வாழ்பவர். அவரது முன்னாள் காதலி காந்திமதி. அவளது கணவன் அவளை விட்டு போக, ஆட்டொகிராப் என்னவாச்சு என்று புத்தகத்தில் படித்து அறிந்து கொள்க. கொஞ்சம் ஷார்ப்பான எழுத்து மட்டும் இல்லாது போயிருந்தால் வாரமலர் வகையறா கதையாக மாறியிருக்கும்

பெண் தோழி தலைவி

ஒரு சுமாரான கதை.

ஒரு அலுவலகத்தில் புதிதாக சேரும் பெண். அவளுக்கு அருகில் தொழிற்சங்க தலைவன். இருவரையும் சேர்த்து கதை பரவ, அதை ஒரு ஓரத்தில் ரசித்து கொண்டிருக்கும் அவள், அதனால் விலகும் அவன். கடைசியில் நெருங்கி வரும் போது அவன் அலுவலகத்தை விட்டு வெளியே போக, இவள் தலைவியாகின்றாள். என்ன கதையோ, தூக்கம் வந்துவிட்டது கொஞ்சம்.

இக்கதைகள் அனைத்தும் திரும்ப திரும்ப காட்சிப்படுத்தி காட்டுவது உள்மனதில் ஓடும் எண்ண வண்ணங்களின் நிறத்தையும் , அதன் மோதல்களையும், அவை ஒன்றோடு ஒன்று பிணைந்து, மறைந்து, உறைந்து, கலந்து அடையும் நிறத்தையும், அந்நிறங்களில் உண்டாகும் புறவயமான வடிவத்தையும் அதன் எதிரொளி காட்டும் வண்ணக் கோலங்களையும்,அக்கோலங்களில் விளையும் மன எழுச்சியின் தரிசனத்தின் ஒளியை நம் மன திரையில் வடிக்கின்றார். 

முந்தைய பாராவிற்கு என்ன அர்த்தம் என்று அதிகம் யோசிக்க வேண்டாம். சும்மா இது பொன்ற சீரியஸ் கதைகளுக்கு இது போன்று ஒரு பத்தி அவசியம் என்பதால் எழுதியது. இதற்காகவே பல சீரியஸ் சினிமா விமர்சனங்களையும், கட்டுரைகளையும் படித்து கொண்டிருக்கின்றேன், இது போன்று பத்திகளை அடிக்கடி எழுதவேண்டும் என்ற எண்ண வண்ணத்தின் வெளிப்பாடு இது. (இன்னும் பயிற்சி வேண்டும். வரட்டும் மெதுவாக)

கிழக்கு பதிப்பகம் வெளியிடு - விலை மிகவும் குறைவு என்பது என் எண்ணம் 120.

1 கருத்து:

  1. என் பெயர் ராமசேஷன் படித்திருக்கிறேன். அதுவும் பல வருடங்களுக்கு முன்பு.

    விலை பற்றிச் சொல்லியிருப்பது படித்தால் வாங்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு