17 நவம்பர் 2012

அப்பம் வடை தயிர்சாதம் - பாலகுமாரன்

பாலகுமாரனின் எழுத்துக்களை முதலில் பார்த்தது கல்லூரியில், என்னுடன் படித்த ஒருவன் கையில். இரும்பு குதிரைகள். அவனுடன் கல்லூரியில் ஒரு கோஷ்டி கையில் பாட புத்தகங்களை விட பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களை வைத்துக் கொண்டு திரியும். இதோடு ஓஷோ புத்தக்ங்கள் வேறு. அவர்களைப் படிப்பதாலே அவர்களின் இடத்தில் தான் இருப்பதாக நினைத்து கொண்டு, கொஞ்சம் ஓவராக பேசித்திரியும் அந்தக் கூட்டம்.

பாலகுமாரன் பலரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருந்தாலும் இது போன்ற அறைகுறைகளையும் உண்டாக்கியிருக்கின்றார். கதையின் நடுவே அவர் பேசுவது போலவே பேசுவது, தேவையில்லாத நாடகத்தனம். மொத்தத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர பெருங்காய டப்பாக்களை உண்டாக்கி இருந்தார் என்ற எண்ணம் எனக்கு வலுவானது.இது ஜெயகாந்தனுக்கும் பொருந்தும் அதனாலேயே எனக்கு கொஞ்சம் ஜெயகாந்தனை, பாலகுமாரனை படிக்க தயக்கமாக இருந்தது.

அதே சமயம் விகடனில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்தனர் "அப்பம் வடை தயிர்சாதம்"  என்னடா பாலகுமாரன் சமையல் குறிப்பு ஆரம்பித்து விட்டாரா என்று எண்ணிக் கொண்டுதான் படித்தேன். பின்னர் புத்தகமாக வாங்கினேன்.


ஒரு வரியில் சொன்னால் இது பிராமணர்களின் வாழ்க்கை மாற்றத்தை ஒரு குடும்பத்தை வைத்து கூறியுள்ளார்.


வைதீகத்தில் இருந்த பிராமணர்கள், ஆங்கிலேயர்களின் வருகைக்கு சற்று முன்பிருந்தே வாழ்க்கை முறையான வைதீகம் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களுக்கு அவர்களின் வேத அறிவு தேவைப் படவில்லை, அவர்களின் ஆங்கில அறிவும் கணித அறிவும் தேவைப் பட்டது. 

//ஏதாவது ஒரு பிரபு லோகத்துக்காக பிரார்த்தன பண்ணு உன்னை நான் பார்த்து கொள்கின்றேன் என்று கூற மாட்டானா//

பிராமணர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை விட்டு தேவைக்காக ஆங்கிலேயர்களிடம் சேர்ந்தனர், சிலர் ஹோட்டல் வைத்தனர். படிப்படியாக அவர்களின் வாழ்க்கை முறை மாற ஆரம்பித்து, வக்கீல், வியாபரம், அயல்நாடு என்று போய் இன்று கணிணியில் நிற்கின்றனர். வைதீக பிராமணர் சாம்பசிவ சாஸ்திரிகள்,  வருமானம் போதாமல் அடுத்து என்ன என்ற நிலையில் இருக்கும் போது, அவரின் மருமகன் திருவிழாவில் ஒரு தண்ணீர் பந்தல் வைக்கின்றார். அங்கு வரும் பெரியவரின்  (காஞ்சி சங்கராச்சாரியார்?) வாக்குப்படி பொங்கல், சுண்டல், தோசை என விற்க ஆரம்பித்து அது ஒரு சிறிய உணவகமாகின்றது. அங்கு அவர்களின் வாழ்க்கை திரும்புகின்றது.


திருவிழா முடிந்ததும் யோசித்து மாயவரம் வரும் அக்குடும்பம் அங்கு ரயில் நிலையத்தில் அப்பம் வடை தயிர்சாதம் விற்க ஆரம்பிக்கின்றனர். அங்கு ஆரம்பித்து ஊரில் ஒரு ஹோட்டல் வைக்கின்றனர். சாஸ்திரிகளின் மகன் சதாசிவன் சென்னை வந்து அங்கு ஹோட்டல் ஆரம்பிக்கின்றான்.

சதாசிவனின் மகன் வைத்தீஸ்வரன் ஆங்கிலேயர்களிடம் குமாஸ்தாவகா இருக்கின்றார், அவரது மகன் நீலகண்டன் ஒரு கப்பல் நிறுவனத்தில் சேர்ந்து வியாபாரத்தில் முன்னேறுகின்றார். நீலகண்டனின் மகன் மகாதேவன் அயல்நாடு சென்று சம்பாதித்து திரும்புகின்றார். அவரது மகன் சங்கர் அமெரிக்கா செல்கின்றான். சங்கருக்கு வேலை கிடைப்பதில் ஆரம்பித்து கதை பின்னோக்கி செல்கின்றது.

ஹோட்டலில் ஆரம்பித்த அவர்களின் மாற்றம் கம்யூட்டரில் வந்து நிற்கின்றது. அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த இடத்தில் வந்து அப்பம் வடை விற்பதை ஒரு கடமையாக செய்கின்றனர். பழைய வாழ்க்கையை நினைக்கும் வண்ணம் அது ஒரு சடங்காக உள்ளது. எங்கு சென்றாலும் இதுதான் வேர் என்று. 

கதை முழுவது யாரவது யாருக்காவது உபதேசம் செய்த வண்ணம் இருக்கின்றார்கள். "யாருக்கும் எந்த ஊரும் சொந்த ஊர் அல்ல, ஊரின் மேல் பற்று கொண்டவனால் முன்னேற முடியாது. நேர்மையான உழைப்பு உயர்த்தும் என்பது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும், பழையதை நினைத்துக் கொண்டு இருக்க முடியாது, உலகம் மாற மாற நாமும் மாற வேண்டும்". 

அக்குடும்பமும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றது.
  
// இனிமே, நான் வந்துட்டேன் நாலணா குடு, மந்திரம் சொல்றேன் காலணா குடுன்னு கேட்க முடியாது//

பெண்களும் ஆண்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஆண்கள் தைரியமாக செயல்பட அவர்களின் ஊக்கமும் முக்கியம். முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடமும் வேண்டும்.

சுதந்திரப் போராட்டம், ஜஸ்டிஸ் கட்சியினரின் போராட்டம் என்று அங்கங்கு வருகின்றது. காந்தியை பற்றி பேசுகின்றார்கள். மயிலாப்பூரில் கலை வளர்த்த கதை, யுந்த காலத்து அரிசிப் பஞ்சம், எம்டன் குண்டு என்று சுவாரஸ்யமான தகவல்கள். குடுகுடுப்பைக்காரன் மாதிரி அங்கங்கு எதிர்காலத்தைப் பற்றி கூறுவது மிகச் செயற்க்கையாக உள்ளது. கடைசியில் காயத்ரி மந்திரத்தை சேர்த்ததும் அதே கதைதான். தடைகள் வேறு வேறு வகையில் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வேறு புதிய பாதைகளை கண்டு முன்னேறும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. குடும்பம் சமூகத்தையும் குறிப்பதாக கொள்ளலாம்.

பாலகுமாரன் நடுநடுவே வந்து உபதேசம் பண்ணுவதை சகித்துக் கொண்டால் ஒரு நல்ல கதை படித்த திருப்தி கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக