07 செப்டம்பர் 2016

ஸ்க்ரூ

சும்மா ஒரு மாறுதலுக்கு - பழைய குப்பைகளை கிளறியபோது கிடைத்த கதை(???)

ஒரு சின்ன ஸ்க்ரூ அவன் வாழ்க்கையை மாற்றும் அளவிற் பிரச்சினை தரும் என்று அவனுக்கு தெரிந்திருந்தால் அவன் அந்த பழைய இத்துப் போன ட்ரான்ஸ்ஸிஸ்டரை கழற்றியிருக்க மாட்டான். டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட்டாக (தமிழில் என்ன?) பணி புரியும் அவன், அவ்வப்போது தான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதை தனக்கும்,  மனைவிக்கும் நினைவுபடுத்த செய்யும் வேலை. அது கொஞ்சம் பழைய ட்ரான்ஸிஸ்டர், மொட்டைமாடியில் வைத்துக் கொண்டு இளையராஜா பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை.

"ஏங்க காபி வேணுமா" என்று கேட்டபடி அவன் மனைவி குழந்தையுடன் வந்தாள்.

"கொண்டு வா" என்றான்.

"இந்தாங்க இவன கொஞ்சம் பாத்துக்கங்க" என்று குழந்தையை விட்டு விட்டு உள்ளே சென்றாள்.

"வேலையா இருக்கேன் இல்ல இவன இங்க விட்டுட்டு போற. டேய் ஒன்னையும் தொடக்கூடாது , தொட்ட அடி"

பையன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, ஒன்றொன்றாக கலைத்து விளையாட ஆரம்பித்தான்.

"இனி இவன வச்சிட்டு ஒரு வேலையும் செய்ய முடியாது" என்று முனங்கி விட்டு, அனைத்தையும் திரும்ப அசெம்பிள் செய்ய ஆரம்பித்தான்.

தொலைபேசி மணி அடித்தது.

"என்னடா சொல்லு" "வரலியா?" "இதுக்கு எல்லாமா பொண்டாட்டிகிட்ட கேக்கனும். அவங்களுக்கு என்னடா தெரியும்" "என்ன எழவோ பண்ணு, கன்ஃபார்ம் பண்ணிட்டு கூப்டு"

பேசிவிட்டு திரும்பி பார்த்தான். குழந்தை அருகில் இல்லை, டீவியை அருகில் ஜாலியாக தரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தான்.

டிரான்ஸிஸ்டர் கவரை மாட்டிவிட்டு, ஒவ்வொரு ஸ்க்ரூவாக மாட்ட ஆரம்பித்தான்.  ஒரு ஸ்க்ரூவை காணவில்லை. தரை, சோபா, என அனைத்து இடத்தையும் தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை.

"என்னத்த தேடிட்டு இருக்கீங்க" என்றபடி அவன் மனைவி வந்தாள்

"ஒரு ஸ்க்ரூவ காணோம், அத மாட்டிட்டா வேலை முடிஞ்சிடும், எங்கயோ விழுந்துடிச்சி போல, விளக்குமாற எடுத்துட்டு வா?"

"பையன் பக்கத்துல இருந்தானா?"

"ஆமா"

பையன் மெதுவாக நகர்ந்து பால்கனி பக்கம் போயிருந்தான். அங்கிருந்த க்ரில் நடுவில் இரண்டு காலையும் வெளியில் தொங்கப்போட்டுக் கொண்டு யாரையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

"கண்ணு, அப்பாகிட்டருந்து ஏதாவது எடுத்துட்டு வந்தியா"

மெதுவாக கையை விரித்து காட்ட ஒரு குட்டி ஸ்க்ரூ.

"இவன் கிட்ட இருக்கு, டேய் கொண்டா அது அப்பாவுக்கு வேணும்"

டக்கென்று கையை பின்னால் வைத்துக் கொண்டு, "ம் ஹூம்" என தலையை ஆட்டிவிட்டு ஓட ஆரம்பித்தான். விரட்டி சென்று பிடித்தவுடன், ஸ்க்ருவை டபக்கென்று வாயில் போட்டுவிட்டான்.

"டேய், டேய் துப்பு துப்பு" என்று வாயில் விரலை விட்டு துழாவினாள், இல்லை.

கண்கள் மாறியது, வாந்தி வருவது போல குமட்டினான். ம்ஹூம். வாயை திறந்து திறந்து மூடி, கண்கள் சொருகியது. மயங்கி விழுந்தான்.

அவள் பையனை மடியில் குப்புற போட்டு முதுகில் தட்டினாள், லேசாக இருமினானே ஒழிய, ஸ்க்ரு வரவில்லை.

பிரமை பிடித்தது போல பார்த்துக் கொண்டிருந்த அவன் ஓ வென்று அழுக ஆரம்பித்தான்.

"ஏங்க, போய் ஆட்டோ கூட்டிட்டு வாங்க. ஆஸ்பத்திரிக்கு போலாம்"

அவள் கூறியது எதுவும் அவன் காதில் விழவில்லை. பையனை மடியில் போட்டுக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனை உலுக்கி உலுக்கி பார்த்துவிட்டு, ஒன்றும் செய்வதற்கில்லை என்று ஆட்டோ பிடிக்க வெளியே ஓடினாள்.

அவன் பிரமை பிடித்தவன் போல குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு, அவனையும் ஒரு கையால் இழுத்துக் கொண்டு ஓடினாள். இருவரையும் டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

ஆட்டோ ஓடிய வேகத்திற்கும், குலுக்கலுக்கும் கூட ஸ்க்ரூ வெளியே வரவில்லை.

குழந்தை மூச்சு விடுவதே தெரியவில்லை. உடலின் நிறமும் மாற தொடங்கியது. நீலமாக போவது போல அவளுக்கு தெரிந்தது.

விடாமல் அவனை தட்டி தட்டி எழுப்பிக் கொண்டே வந்தாள். அவன் தன் புலம்பலை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான். "யோவ் சும்மா இருய்யா, அந்தம்மாவே தைரியமா வருது, ஞை ஞை ன்னுட்டு"

மருத்துவமனையில், மருத்துவர்

"ஆணி உள்ளே போகவில்லை, மூச்சுக் குழலுக்கும், உணவு குழலுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டது போல உள்ளது. ரொம்ப நேரம் இருந்தால் உயிருக்கு ஆபத்து. உடனே ஸ்கேனும் எக்ஸ்ரேயும் எடுக்க வேண்டும். அதன் பின் எப்படி எடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.

ஸ்கேன் எடுக்கும் இடத்தில் பயங்கர கூட்டம்.

பையனை மடியில் வைத்துக் கொண்டு தளர்ந்து ஒரு சேரில் விழுந்தான். இந்த உலகத்தில் இருப்பவன் போலவே இல்லை. பிரமை முற்றிய பைத்தியக்காரன் போல இருந்தான். "முதல்ல அவன என்கிட்ட கொடுங்க, போய் எமெர்ஜென்சின்னு சொல்லி சீக்கிரம் ஸ்கேன் எடுக்க சொல்லுங்க" என்று கூறியப குழந்தையை இழுத்தாள். அவன் தராமல் இன்னும் இறுக்கிக்  கொண்டு ஏதோ புலம்ப ஆரம்பித்தா. இவள் இழுக்க, இழுக்க அவன் குழந்தையின் வயிற்றை பலமாக அழுத்தி பிடித்து தன்னிடம் வைத்துக் கொண்டான். அழுத்திய வேகத்தில் குழந்தை பலமாக இருமியது. டொ

ஸ்க்ரு வெளிய வந்து விழுந்தது.

அடுத்த வாரம் முதல் அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக