26 செப்டம்பர் 2016

டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு

பல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம்  " இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது.  அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.

சரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான்.  பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன்  கோட்டை.

டணாயக்கன்  கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

டணாயக்கன்  கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது. 

ஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன்  கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன்  கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.

திப்புசுல்தானின் தந்தை  ஹைதர் அலி. மைசூரை ஆண்ட மன்னன் என்றே நான் படித்த நினைவு. ஆனால் உண்மை சரித்திரம் கொஞ்சம் வேறு படுகின்றது. ஹைதர் அலி, மைசூர் அரசரால் நியமிக்கப்பட்ட சர்வாதிகாரி. இரண்டும் ஒன்றுதான் என்றாலும், மன்னர் என்ற பெயரில் ஒருவர் இருந்திருக்கின்றார். ஆனால் திப்புசுல்தான், மைசூர் அரசு முழுவதையும் தன் கையில் வைத்திருந்திருக்கின்றான். மைசூர் அரச பரம்பரையை ஓரங்கட்டிவிட்டு தானே அரசனாக இருந்த அவனை பிரிட்டீஷார் வீழ்த்தி மீண்டும் உடையார் வம்சத்தை ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர். ஒரு லட்சம் துருப்புகளுக்கு ஒரு ஆண்டிற்கான உணவு, கோட்டையை சுற்றியும் பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள் என்று முழு பலத்துடன் இருந்த அவன் வீழ என்ன காரணம் என்பதை கற்பனையுடன் கலந்து ஆராய்கின்றது.

நாவலுக்கும் முன்னுரைக்கும் ஒரு சம்பந்தமும் இருக்க தேவையில்லை என்பதை மறுபடியும் உறுதி செய்யும் முன்னுரை. முன்னுரையை படித்தால், திப்பு சுல்தான் பற்றிய ஒரு பெரிய நாவல் என்றே தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியல்ல.

திப்புசுல்த்தான் வளர்க்கும் ஒரு புலி தப்பி ஓடுகின்றது. அதை வீரம்மா என்னும் பெண் ஒரு கட்டிடத்தில் வைத்து அடைக்கின்றாள். அவளைப் பாராட்ட அழைக்கும் சுல்த்தான் அவளை, தன் ஜனானாவில் சேர்க்க உத்தரவிடுகின்றான். அவள் மறுக்க, சுல்தானின் தளபதி யாசின்கா மூலம் அதை நிறைவேற்ற உத்தரவிடுகின்றான். அதே பெண் மீது சுல்தானின் தம்பிக்கும் ஒரு கண், திவான் மீர் சடக்கிற்கும் ஒரு கண். இது ஒரு திரி. திப்பு சுல்த்தானால் சிறை வைக்கப்பட்ட மைசூர் ராணியின் போராட்டம் ஒரு திரி. இதற்கு நடுவில் டணாயக்கன்  கோட்டை. கோட்டை பாளையக்காரர்கள் தேவராஜா பால ராஜா. அவர்கள் திப்புவின் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தாலும், ராணிக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்கள். இறுதியில் ராணி ஆங்கிலேயர்களின் உதவியால் திப்புவை கொன்று மீண்டும் தன் பேரனை மைசூரில் அமரவைக்கின்றார். திப்பு தோல்வியடைய முக்கிய காரணம் திவான் மீர்சடக். 

கதையின் முக்கிய அம்சம், தேவையில்லாத ஹீரோயிசம் என்பதில்லை. அரண்மனை சதி போன்ற வழக்கமானவை இருந்தாலும், அவை யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் யதார்த்ததை மீறியதாக இருந்தாலும், கதையோட்டத்தில் அவை கரைந்துவிடுகின்றன. முன்னுரையிலும், அங்கங்கு அடிக்குறிப்புகளிலும் திப்புவை ஒரு நேர்மையான மன்னனாக காட்டுவதில் முயற்சி செய்துள்ளார். ஆனால் கதையோட்டத்தில் அதை அவரே மறுக்கும் படியான சம்பவங்களும் வைத்துள்ளார். திப்புவின் ஹிந்துப் பாசம் என்பது அரசியல் சார்ந்தது. பெரும்பான்மையான ஹிந்துக்களை விரோதிப்பதன் ஆபத்தை உணர்ந்து அதை செய்யாமல் இருப்பதைப் போலவே காட்டியிருக்கின்றார். சிருங்கேரி மடத்திற்கு விக்கிரகத்தை அளித்தது போன்றவை, அவன் மற்ற இடங்களில் நடத்திய ஹிந்துமத விரோத செய்ல்களை மறைக்கவே என்ற எண்ணம் தோன்றுகின்றது.

திப்புவை பற்றி சென்ற ஆண்டு இங்கு கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அவன் எத்தகையவன் என்பதே அக்கேள்வி. இந்து சமய விரோதி என்று ஒரு கட்சியும் இல்லை என்று ஒரு கட்சியும் மோதிக் கொண்டன. எப்படியும் உண்மை இரண்டும் கலந்ததாக இரண்டிற்கும் நடுவில் இருக்கும். 

திப்புவின் ஆட்சியில் நடந்த நல்லவைகளுக்கு அவனை பொறுப்பாகாவும், தீயவை அனைத்திற்கும் அவனது திவான் மீர் சடக்கும், தளபதி யாசின் கானுமே காரணம் என்பது போன்று சித்தரித்துள்ளது மிகப்பெரிய ஓட்டை. ஒரு வேளை தெரிந்தே அமைக்கப்பட்ட ஓட்டையோ என்னவோ.

கொள்ளையடிக்கவே உருவாக்கப்பட்ட ஜூம்ரா பட்டாளம், கைதியாக வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயர்களை கொன்றது, மைசூர் அரச வம்சத்தில் இருந்த அனைவரையும் விஷமிட்டு கொன்றது, டணாயக்கன்  கோட்டை மீது படையெடுத்து சென்றது, அனைத்தும் திவானும், தளபதியும் செய்த சதி என்பதும், திப்புவிற்கு அதைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் காதில் பூ. அப்படியே இருந்தாலும் இது போன்று ஒன்றும் தெரியாத ஒருவனைப் போய் ஒரு பெரிய அரசன் என்று எப்படி சொல்ல முடியும்.

ஹைதர் அலி கடைசி வரை மைசூரின் சர்வாதிகாரியாக மட்டுமே இருந்தான். அரசன் என்பவனுக்கு அதற்கான மரியாதையை தந்து வந்துள்ளான். ஆனால் திப்பு அரச குடும்பத்தை ஏறக்கட்டிவிட்டு தானே அரசன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டதை துரோகம் என்ற கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டான் என்பது ஒரு மிகைப் படுத்தப்பட்ட விஷயமே. அவன் குடகை முழுக்க தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவும் போரிட்டிருக்கின்றான். அதிகாரப் போட்டி அல்லது தன் ஆட்சியை விரிவுபடுத்தும் எண்ணம். ஆங்கிலேயர்களிடம் போரிட்டது அத்தகைய நோக்கமே. அந்நிய ஆட்சி எதிர்ப்பு என்பது மிகை. ஒரு நல்ல நிர்வாகியாக இருந்திருக்கின்றான். ஹிந்துக்களின் பல பழக்க வழக்கங்களையும் பின்பற்றிய அவன் மலையாளத்தில் பல கொடுமைகளை செய்ததாக கூறப்படுகின்றது. மைசூர் சமஸ்தானத்தில் ஹிந்து மத நல்லிணக்கம், வெளியில் ஹிந்து விரோதம் என்பது முரண்படுகின்றது. காரணம் யூகிக்க மட்டுமே முடிவது, மைசூரில் அவனை முழு மன்னனாக ஏற்று கொள்ளாமல் இருந்திருக்கலாம், மன்னர் என்று ஒருவர் இருந்திருக்கின்றார் அல்லது அம்மன்னர் இருக்கைக்கு ஒரு போட்டி, முயற்சி நடந்த வண்ணம் இருக்கின்றது. அதற்கு மக்களிடையே ஆதரவும் இருந்திருக்கலாம். ஹிந்துக்களை பகைத்து கொள்வதென்பது ஆட்சிக்கு ஆபத்து என்று அமைதியாக இருந்திருக்கலாம். ஒரு நல்ல மன்னன். படையெடுத்து  போகும் இடங்களில் அதற்கு தேவையில்லை. இதுதான் எனக்கு தோன்றும் சித்திரம்.

சரித்திரக்கதை என்ற கோணத்தில் இதை ஒரு முழுமையான சரித்திரக்கதை என்று பேசலாம். கற்பனை என்பதை இடங்களை நிரப்ப மட்டுமே பயன்படுத்தியுள்ளார். கற்பனை பாத்திரங்களையும் உண்மையான பாத்திரங்களை வெளிப்படுத்த பயன்படுத்தி கதையை நகர்த்தியுள்ளார். இரும்பு சலாகையா உரசும் குரலும், இரும்பு சலாகை கைகளும் கொண்ட கதாநாயகர்கன் என்று யாரும் கிடையாது, யாரும் நம்புவதற்கரிய செயல்களை செய்வதில்லை. கடைசி சில அந்தியாயங்கள் கொஞ்சம் நாடகத்தனமாக போய்விட்டது மட்டுமே குறை. 

கவனமாக திப்புவின் இறுதிக்காலத்தை தேர்வு செய்திருப்பதால் பல தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்துள்ளார். திப்புவை பெருமையாக பேசுவதைப் போல தெரிந்தாலும், உள்ளே மறைமுகமான விமர்சனமும் தெரிகின்றது. (அல்லது எனக்கு அப்படி தோன்றியது)

கல்கி, சாண்டில்யன் கதைகளோடு இதை ஒப்பிட்டு பேசுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. அவர்கள் எழுதிய கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை. கிடைத்த கொஞ்ச நஞ்ச தரவுகளை வைத்து, தங்கள் கற்பனையை முழுவதும் பயன்படுத்த வேண்டிய நிலை. ஆனால் இது ஆங்கிலேயர்கள் காலத்து கதை. ஏகப்பட்ட தரவுகள். ஆசிரியரின் திறமை என்பது நாவலை ஒரு பாடப்புத்தகம் போல மாற்றாமல், சுவரஸ்யமாகத் தருவது. அந்த வகையில் இது ஒரு தவற விடக்கூடாத சரித்திர நாவல்.

2 கருத்துகள்:

  1. திரு ரங்கசுப்ரமணி அவர்களுக்கு வணக்கம்.. கோம்பையைப் பற்றி தேடுகையில் உங்கள் தளம் கிடைத்தது.. ஈமெயில் முகவரி இன்மையால் இங்கே பதிவிடுகிறேன். உங்கள் கிராமத்தில் திரு ராமராஜ் ஐயாவைப் பற்றி பத்திரிகையில் படித்து அறிந்துகொண்டேன். தடுப்பணைகள் கட்டுவது குறித்து அவரிடம் வழிகாட்டல் பெற வேண்டி அவரது நம்பர தேவைப்படுகிறது. உங்கள் ஊர்க்காரர் பெற்றுத் தர இயலுமா?

    பதிலளிநீக்கு