ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று உப தலைப்புடன் வந்துள்ளது. தமிழ்பேப்பர் இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு
பலருக்கு ஹிந்த்துதுவம் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ள சில தடைகளிருக்கும். காரணம், தங்களுக்கு தாங்களே ஒரு நேர்மையாளன் பட்டம் தந்திருப்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற கவலை வேறு. தான் நம்பும் ஒரு விஷயம் உயர்ந்தது என்பதை நம்ப மறுப்பவர்கள், தான் நம்பும் சில விஷயங்களால் ஒரு தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். இவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல. இன்னொரு வகை, ஹிந்துத்துவம் என்பதை ஒரு அடிப்படைவாத குழு என்ற வகையில் நினைப்பது. தவறான புரிதல். உண்மையில் இத்தகையவர்களே அதிகம். இதற்கு காரணம் கூட நமது பாரம்பர்யம் கற்று தந்திருக்கும் பெருந்தன்மையே. ஒரு வகையில் அவர்களும் இந்துத்துவர்களே.
பலர் நமது பாரம்பர்யம் என்பதை பக்தியோடும், புராணங்களோடும் நிறுத்திக் கொள்கின்றனர். பலருக்கு உண்மையில் நமக்கு இருக்கும் பாரம்பர்யம் எத்தகையது என்பதை பற்றிய் முழு பார்வையும் கிடையாது. இந்த கட்டுரைகள் அதை நமக்கு கற்று தருகின்றன.
அரவிந்தன் நீலகண்டன், பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வரும் சிந்தனையாளர். எந்த ஒரு விஷயத்தையும் போகின்ற போக்கில் அள்ளி விடாமல் அதற்கான தரவுகளை பல இடங்களிலிருந்து தருவது சிறப்பு. அதற்கான உழைப்பு பெரியது. ஆச்சர்யத்தை தருவது.
தலைப்பிலிருந்து வரலாம். நம்பக்கூடாத கடவுள். கடவுளை நம்புகின்றவன் காட்டுமிரண்டி என்றார் ஒரு பெரியவர். சரிதான். கடவுளை நம்புவது என்பது வேறு உணர்வது என்பது வேறு. வெறுமனே கடவுள் இருக்கின்றார் என்று குருட்டுத்தனமாக நம்புவதில் என்ன இருக்கின்றது. யூத மதத்தை சேர்ந்த தத்துவவாதி ஸ்பினோஸோவை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை. மேலைநாட்டு மதங்களுக்கும் நம்முடைய பாரம்பர்யத்திற்கு இருக்கும் வித்தியாசத்தை பேசும் கட்டுரை. "நான் சொல்வதுதான் உண்மை, நம்பாவிடில் உனக்கு நரகம்" என்று அறுதியிட்டு கூறும் ஒரு இடத்தில், மூளையை பயன்படுத்தி ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டால் என்ன நடக்கும். கலிலியோவிற்கு நடந்தது நடக்கும். நமது ஹிந்து மதம் நமக்கு அதைச் சொல்வதில்லையே. கடவுள் இருக்கின்றார். நீ நம்பித்தான் ஆகவேண்டும் என்று அதட்டுவதில்லை. கடவுள் என்பதே எது, யார் என்பதையே அவரவர் சவுகர்யத்திற்கு விட்டுவிட்டு போகின்றது. அனைத்தும் பிரம்மம் என்பதும், அனைத்தும் நாராய்ணன் என்பதும், "சிவமேயாம்" என்பது நமது நம்பிக்கைகளே. ஜயஜ சங்கர என்னும் நாவல், ஜெயகாந்தன் எழுதியது. அதில் வரும் மடாதிபதி, ஒவ்வொரு முறை கடவுளை நினைக்கையில் அவர் மனதில் வைத்து வணங்குவது அவரது நண்பன் ஆதி. மோகமுள் நாவலில் ராஜம் செய்வதும் கிட்டத்திட்ட இதுதான். எனக்கு எந்த கோவில் சென்றாலும் அங்கு இருப்பது எங்கள் கோவில் அரங்கன்தான். //ஸ்பினோஸாவின் கடவுள் ஊன்றுகோல் அல்ல, சிறகு. // வரிகள் மிகவும் யோசிக்க வைக்கும் வரிகள். ஸ்பினோஸாவிற்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்.
பல ஆண்டுகளாக பல பத்திரிக்கைகளில், இணையத்தில் வெளிவரும் விஷயம், நமது பாரம்பர்ய மருந்துகள் பற்றிய காப்புரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள். பல மருந்துகளை நாம் காப்பாற்றியுள்ளோம் என்றாலும் அதன் பின்னர் இருக்கும் பலரின் உழைப்பு தெரிவதில்லை. அதை தெரியப்படுத்துகின்றது. அதே போல் முந்தைய அரசு தாரைவார்த்த நமது பாரம்பர்ய தான்யங்கள் பற்றிய விஷயங்களும் வெளியே தெரிவதில்லை. இந்த நாட்டு, காட்டு, கூட்டு களவாணிகள் பற்றிய கட்டுரை பல புதிய விஷயங்களை காட்டுகின்றது.
இடதுசாரி எதிர்ப்புக் கட்டுரைகள். இடதுசாரிகள் ஒரு வியாதி போன்றவர்கள் என்பதே எண் எண்ணம். அடிப்படை கொள்கைகள், மக்களுக்கு நன்மை செய்வது என்ற எண்ணம் கொண்டவை என்றாலும், அதன் வழிமுறைகள், அதை கையாள்பவர்களின் நேர்மையின்மை அதை ஒரு அழிவு சக்தியாகவே மாற்றியிருக்கின்றது. பாபர் கட்டிட இடிப்பை நியாயப்படுத்துவது போன்ற கட்டுரை (கட்டிடமே என்றாலும் இடித்தது சரியல்ல என்பதே என் எண்ணம், பள்ளிவாசலை அல்லா கோயில் என்றே சொல்லி பழகியவனுக்கு, அது ஒரு வருத்தமான விஷயமே) இடதுசாரிகள் எப்படி ராமர் கோவில் விஷயத்தை தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை காட்டுகின்றது. இடதுசாரிகளுக்கு இருக்கும் ஊடகத்தொடர்பும், ஆதிக்கமும் பயமுறுத்தும் விஷயமே. ஊடகங்களில் இருப்பவர்களுக்கு உண்மையில் இடதுசாரி தத்துவங்களின் மீது நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ, முற்போக்கு வேடம் போல அதை பற்றி கொண்டு திரிகின்றனர்.
மாற்றுமத நம்பிக்கைகளை பல இடங்களில் விமர்சனம் செய்தாலும் அவை எதுவும் புண்படுத்தும் வகையில் "ஏ பாவிகளே" என்ற ரேஞ்சில் இல்லை. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் ஒரு கட்டுரை, டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றிய கட்டுரை. ஒரே இரவில் உலகை படைத்தான் கடவுள் என்ற நம்பிக்கையில் மண்ணை போட்ட டார்வின் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு அதை நம் பாரம்பர்யத்துடன் இணைக்கின்றார். நமக்கு படைத்தவன் என்பவனை பற்றி கவலையே கிடையாதே. பிரம்மதேவன் பாவம் வரம் தந்துவிட்டு, மற்ற இருவராலும் குட்டு பட்டு அமர்ந்திருக்கின்றார். காப்பவனுக்கு இணையாக அழிப்பவனையும் வணங்கும் நாடு. நாயையும் நாயை உண்பவனையும் ஒன்றாக பார்ப்பதே தர்மம் என்பதை கற்று தரும் நமக்கு, படைப்பிலே உயர்ந்தது மனித இனம் என்ற தத்துவம் கொஞ்சம் அந்நியமானதே.
ஹிந்த்துத்துவ சிறுகதைகள் என்று பெயர் சூட்டியதை போன்றே, இதற்கும் ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். என்ன காரணமோ. பதிப்பாளர்களுக்கே வெளிச்சம். ஒரு வேளை, உண்மையான பகுத்தறிவிற்கு மற்ற பெயர் ஹிந்துத்துவம் என்று நினைக்கின்றார்களோ என்னவோ. சில விஷயங்களை சரியாக வரையறை செய்ய இயலாது. ஹிந்துமதம் என்பது எது என்பதை வரையறை செய்ய முடிந்தால், ஹிந்துத்துவம் என்பதையும் சரியாக வரையறை செய்ய முடியும். பலர் ஹிந்துத்துவம் என்பதை ஒரு கெட்ட வார்த்தை போல பார்பதற்கு காரணம், சில உதிரிகள் செய்யும் சேட்டைகள். ஸ்ரீராம் சேனா, வானர சேனா என்ற பல ரவுடி கும்பல்கள், தங்களை வளர்த்துக் கொள்ள செய்யும் வேலைகள் எல்லாம் ஹிந்துத்துவம் என்ற கூடையில் போட்டால் என்ன செய்வது?
ஹிந்துத்துவம் என்று பயந்து ஓடாமல் படித்தால் பல புதிய திறப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் பின்னிணைப்பாக பல ரெபரென்ஸ்களை (தமிழ் வார்த்தை என்ன, தரவா??) தந்துள்ளார்.
மறுபடியும் ஒரு இந்துத்துவா புத்தகமா? என்ற கேட்பவர்களுக்கு; தொடர்ச்சியாக ஒரே எழுத்தாளர், ஒரே வகையிலான புத்தகங்களை வாங்குவது என் வழக்கம், எனவே இன்னும் பல வரலாம்.
தமிழ் ஹிந்து தளத்தில் ஒரு விரிவான அறிமுகம்
கிழக்கு பதிப்பகம். வாங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக