27 டிசம்பர் 2016

Siva Triology - Amish Thiripathi

ஆங்கிலப் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை. முதல் காரணம், அந்தளவிற்கு ஆங்கில அறிவு கிடையாது. 12 வரை தமிழ் மீடியம் என்பதால், ஆங்கிலத்தை மூளைக்குள் மொழி பெயர்க்காமல் படிக்க முடியாது. பொறுமை தேவை. ஆங்கில அகராதியை வைத்து கொண்டு படிக்கும் பொறுமையெல்லாம் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் நடை கொஞ்சம் படிக்கின்றபடி இருக்கும். சேத்தன் பகத்தின் முதல் மூன்று, நான்கு நாவல்களை படித்திருக்கின்றேன்ன். ஆர்வக்கோளாறு என்ன செய்ய. குப்பை நாவல்கள் என்பதை தவிற வேறு எதுவும் கூற இல்லை. மூன்றாம்தர சினிமா கூட பரவாயில்லாமல் இருக்கும். மட்டமான மசாலா. குழந்தைகள் பிறந்தபிறகு அப்புத்தகங்களுக்கு பயன் இருந்தன. 

சேத்தன் பகத் தந்த நம்பிக்கையில் வேறு எதையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பவில்லை. சிவா டிரையாலஜி, விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டிருந்து. இந்தியாவின் டோல் கின் என்ற அடைமொழி வேறு. (டோல் கின்னின் கதைகள் பாதி படித்து அந்தரத்தில் நிற்கின்றது). பல மில்லியன் விற்ற நாவல் என்பதாலும், சும்மா ஒரு மாறுதலுக்காகவும் வாங்கினேன். தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும், ஆங்கில நூலை வாங்கியதன் முக்கிய காரணம் விலை குறைவு. மூன்று புத்தகங்களும் சேர்ந்து 500க்குள் வந்ததுதான். இரண்டாவது, மொழி பெயர்ப்பாளர்கள் மீது இருக்கும் அதீத நம்பிக்கை. 

புராணங்களை மீண்டும் எழுதுவது என்பது வழக்கமான ஒன்று. மகாபாரதம் அப்படி பல முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் புராண பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையை பின்னுவது என்பதை இப்போதுதான் படிக்கடிகின்றேன். முழுக்க முழுக்க கற்பனையான ஒரு மசாலா நாவல். ஆனால் அமீஷ் திரிபாதி, புத்திசாலித்தனத்துடன் எழுதியுள்ளார். புராண பாத்திரங்ளை மனிதர்களாக கற்பனை செய்து, சில நிகழ்ச்சிகளை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளார். சிவன் அழிக்கும் கடவுள். தீயவற்றை அழிப்பது அவர் வேலை. அதுவே இதன் அடிப்படையும். நாம் படிக்கும் போது சிந்து சமவெளி நாகரீகம் என்று இருந்தது இன்று சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகமாக மாறியுள்ளது. அதை ஒரு அடிப்படையாக வைத்து கொண்டு, அன்றைய பாரதத்தை காட்ட ஒரு முயற்சி செய்திருக்கின்றார். 



பல நாவல்கள், திரைப்படங்களின் பாதிப்பை பார்க்கமுடிகின்றது. குறிப்பாக லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ். அதில் வரும் நீண்ட பயணம் போன்றதே இதில் வரும் சிவாவின் பயணம். மானசரோவரில் ஆரம்பித்து, தேவகிரி, ஹரப்பா, கராச்சி, அயோந்தி, இன்றைய பங்களா தேஷ், இரான் என்று பயணம் போய்க்கொண்டே இருக்கின்றான். சோம் பானம் என்பது பண்டைய வேத காலத்தில் பல சடங்குகளி பயன்படுத்தப்பட்ட ஒரு பானம். சோமலதை என்னும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒன்று. (மதுவல்ல) அரவிந்தன் நீலகண்டனின் ஆழி பெரிது நூலில் இதைப்பற்றி தெளிவாக விளக்கியிருக்கின்றார். அந்த சோமரசமே இந்நூலிற்கு ஒரு அடித்தளம். மானசரோவரில் இருக்கும் ஒரு இளைஞன் சிவா, மெலுகாவிற்கு நந்தியால் அழைத்துவரப்படும் சிவாவிற்கு சோம ரசம் தரப்படுகின்றது. தொண்டை நீலமாக மாறுகின்றது. நீலகண்டன் கடவுளாக பார்க்கப்படுகின்றான். 

மூன்று தொகுதிகள். The immortals of meluha (மெலுகாவின் அமரர்கள்), The secrets of Nagas (நாகர்களின் ரகசியம்), The outh of Vayuputhraas (வாயுபுத்ரர் வாக்கு). மெலுகாவை ஆள்பவர்கள் சூரியவம்சர்கள், அயோந்தியை ஆள்பவர்கள் சந்திர வம்சர்கள். இருவருக்கிடையிலுருக்கும் பகையை தீர்க்க வரும் சிவாவிற்கு பல புதிய செய்திகள் கிடைக்க அவன் பயணம் பல இடங்களுக்கு செல்கின்றது. மெலுகா ராமனின் ராஜ்ஜியம். அயோந்தியிலிருந்து ராம ராஜ்ஜியம் மேற்கே சென்றுவிட்டது.

இக்கதையை எந்த புராணக்கதையுடனும் குழப்பி கொள்ள தேவையே இல்லை. வரும் பாத்திரங்கள் அனைத்து புராண பாத்திரங்கள் அந்தே. சிவா, சதி, தக்ஷன், வீர பத்ரன், நந்தி, கணேஷ், கார்த்திக், கலி, தீலிபன், பகீர்தன், ப்ருகு. பல புராண சம்பவங்களை மிக புத்திசாலித்தனத்துடன் கதையில் இணைத்துகொண்டுள்ளார். சோமரசம், நீல கண்டம், சிவாவின் புத்திரர்கள், சிவாவின் நெற்றிக்கண், பகீரதன் கங்கையை கொண்டுவருவது, பரசுராமரின் ஷத்ரியவதம், நாகர்களின் ரகசிய வாழ்க்கை.

ஒரளவிற்கு விறுவிறுப்பான சுவாரஸ்யமான நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்து புராணங்களை இழிவு படுத்திவிட்டார், இல்லை அதை உயர்த்தி பிடிக்கின்றார் என்றெல்லா ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு ஒர்த்தில்லை. சில திருப்பங்கள் உண்மையில் சுவாரஸ்யமானவை. 

குறைகள், நவீன வழக்குகள் பல சர்வ சாதரணமாக வருகின்றன ஆக்ஸிஜன், ரேடியோ ஆக்டிவ், மேக்னெடிக் சிக்னல், வாய்ஸ் சிக்னல்ஸ், கார்பன் டை ஆக்ஸைட், இந்தியா, இது போன்ற பதங்கள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால் இந்தியாவின் டோல்கின் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

சுவாரஸ்மான பொழுதுபோக்கு நாவல். பொழுது போவதற்கு உத்திரவாதம். 

2 கருத்துகள்:

  1. தமிழ் மொழிபெயர்ப்பில் வாங்கி வைத்து இரண்டு வருடங்களாகிறது. கொஞ்சம்தான் படித்தேன். இன்னும் தொடர்ந்து படிக்க ஓடவில்லை! நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் அடுத்ததாக அதை மீண்டும் கையில் எடுக்க முயற்சிக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாகம் கொஞ்சம் இழுவை. அடுத்த இரண்டு பாகங்கள்தான் விறுவிறுப்பாக உள்ளது.

      நீக்கு