09 ஜனவரி 2017

வெக்கை - பூமணி

கரிசல் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அஞ்ஞாடி நாவலுக்கு விருது பெற்றவர். அஞ்ஞாடி வாங்க ஆசைதான், முதலில் ஒரு சாம்பிள் பார்ப்போம் என்று வெக்கை நாவலை வாங்கினேன். ஜெயமோகன் எழுதிய ஒரு கதையை நினைவு படுத்தியது. தன் நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்த ஒருவனை வெட்டிவிட்டு சிறைக்கு செல்லும் ஒருவரை பற்றிய கதை. அதே மாதிரியான ஒரு கதை. நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்து அது முடியாமல், தன் அண்ணனை கொன்ற வடக்கூரானை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் செலம்பரத்தின் நினைவுகளாக, அவனுக்கும் அவன் தந்தைக்குமான உரையாடல்களாக செல்கின்றது.

முதல் பாராவிலேயே கதை ஆரம்பித்து விடுகின்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும், வர்ணனைகளும் இல்லாத ஆரம்பம். கரிசல் மண் சார்ந்த கதை என்று சொல்வதற்கில்லை. எங்கும் நடந்திருக்க கூடிய கதை. 

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கொஞ்சம் யூகிக்க முடிகின்றது. அவ்வளவே, எங்கும் ஜாதி பற்றிய குறிப்புகள் இல்லை. வடக்கூரானை சிதம்பரம் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை அவர்கள் காவல்துறையில் சரணடைய செல்வதில் முடிகின்றது. பெரும்பாலும் உரையாடல்களாகவே கதை நகர்கின்றது. சிதம்பரத்தின் தந்தையும் இதே காரணத்திற்காக ஒருவனை கொன்ற கதை, தலைமுறைகள் மாறினாலும் பிரச்சினைகள் மாறுவதில்லை என்பதை சிறிய கோடாக காட்டிவிட்டு போகின்றது.அப்பா மகனுக்கான உரையாடல்கள். தந்தைக்கும் மகனுக்கும் எப்போது ஒரு சிறிய இடைவெளி வந்து நிற்கும். பெரும்பாலானவர்களுக்கு இருப்பதே. தந்தை மகனை இன்னும் கைபற்றி நடக்க வேண்டியவனில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். இதிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சின்ன சின்ன உரையடல்கள், கேலிகள் அதன் பின் இருக்கும் பரிவு எல்லாம் வெகு இயல்பாக இருக்கின்றது. 

ஒவ்வொருநாளு ஓரிடம். கிடைப்பதை வைத்து உண்டு வாழும் வாழ்க்கை. பசியில் வாடும் போது கூட விவசாயின் உழைப்பை திருடக்கூடாது என்ற எண்ணம் என்று பல நுணுக்கமான விஷயங்களை, சின்ன சின்ன உரையாடல்களின் நகர்த்தி செல்கின்றார்.

கதையில் வரும் அனைவரும் கத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டே அலைகின்றனர். சிதம்பரத்தின் அப்பா, மாமா, அம்மா, சித்தப்பா என்று அனைவரிடமும் ஒரு ஆவேசம் இருந்து கொண்டே இருக்கின்றது. 

ஆவேசத்தில் பழிவாங்க செய்த செயலின் தாக்கம் மெதுவாக குறைந்து சரண்டைதல் என்ற யதார்த்தமான ஒன்றில் முடிவடைகின்றது. பழிவாங்தலின் வெறி அடங்கியபின் மிஞ்சியிருப்பது வெறுமை

ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பூமணியின் எழுத்துக்களை இலக்கியம், ஆனால் சுவாரஸ்யமற்ற இலக்கியம் என்ற மாதிரி கூறியிருந்தார். உண்மைதான். வெயில் கூட ஊருக்கு ஊருக்கு ஊர் வேறு படுவது போல தெரியும். பெங்களூரில் வெயில் ஒருவிதமானது. கொஞ்சம் குளுமை கலந்த வெயில். எங்களூர் மாதிரி. சென்னை வெயில் வியர்வையை ஊற்றிவிடும். கோவில்பட்டி, சங்கரன் கோவில் வெயில் ஒரு வித வெறுமையை உணரச்செய்யும் எனக்கு. மனதையும் சோர்வடைய செய்துவிடும். அது போன்ற ஒரு வெயிலில் அலைந்த உணர்வை தந்துவிடுகின்றார் பூமணி.

இதை நாவல் என்று கூற முடியாது. குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய கதை. படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக