12 ஜனவரி 2017

Scion of Ikshvaku - Amish Tiripathi

அமிஷ் திரிபாதியின் அடுத்த நாவல். ராம் சந்திரா சீரீஸ் என்ற தலைப்பில் ஆரம்பமாகியுள்ளது. 

ராமாயணத்தை முந்தயை நாவல் பாணியில் எழுத ஆரம்பித்துள்ளார். ராமாயணத்தை மாற்றி எழுதுவது கொஞ்சம் சுலபமானதுதான். ஏனென்றால் ஏற்கனவே பல ராமாயணங்கள் வழக்கில் இருக்கின்றன. புத்திசாலியான எழுத்தாளர் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு புதிய ராமாயணத்தை உண்டாக்கிவிடலாம். ராவணன் சீதையை கடத்துவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ஏன்? அப்பொழுதுதானே வாசகன் முதல் அந்தியாத்திலேயே எழுந்து உட்காருவான். பிறகு மெதுவாக முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் கதை செல்கின்றது.

தசரதனுக்கும் ராவணனுக்குமான் போரில் கதை ஆரம்பிக்கின்றது. சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன். தசரதன் தோற்கின்றான். ராமன் பிறக்கின்றான். ராமனை தோல்விக்கு காரணமானவாக கருதி தசரதன் வெறுக்கின்றான். நான்கு சகோதரர்களுக்கான குணங்களை சமைப்பதில் மகாபாரதத்தை கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார். ராமன் சத்தியசீலன், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுபவன் தர்மபுத்திரனின் சாயலை அதிகமாக புகட்டியுள்ளார். பரதன் ஜாலியான் ஆள், பெண்கள் விஷயத்தில் அர்ஜ்ஜுனன். லக்ஷ்மணன், பீமன் சாயல் நல்ல உணவு, பலசாலி. சத்ருக்கணன் - சகாதேவன். படிப்பாளி.  தசரதனின் ஆட்சியில் அயோந்தியின் நிலை பரிதாபமாக இருக்கின்ற நிலையில், ராமன் நாட்டின் பாதுகாப்பை பொறுபேற்று கொண்டு சிறப்பாக செயல்படுகின்றான். மந்திரை ஒரு பணக்கார வியாபாரியாக வருகின்றாள். ராமனின் மீதான அவள் வன்மத்திற்கு வேறு ஒரு காரணத்தை காட்டுகின்றார். இருபுறமும் தவறில்லாமல் பேலன்ஸ் செய்யும் வகையில் அமைத்து தன் ஐஐடி புத்திசாலித்தனத்தை காட்டுகின்றார்.



புராண சம்பவங்களை சுவாரஸ்யமான சம்பவங்களுக்காக கொஞ்சம் மாற்றிவிடுகின்றார். சில இடங்களில் அதீதமாக. ராமனை விட சீதைக்கு வயது அதிகம் என்று வருகின்றது. எங்கிருந்து கிடைத்த தகவலோ. சீதை போர்க்கலையில் வல்லவளாகவும் காட்டப்படுகின்றாள்.

விஸ்வாமித்திரர் - வசிஷ்டர் உரசல், ஜனகரின் தத்துவ தேடல் எல்லாம் அமிஷ் மேலோட்டமாக எதையும் படித்துவிட்டு ஜல்லியடிக்கவில்லை என்பதை தெளிவாகவே காட்டுகின்றது. கோடிட்ட இடங்களை சில கற்பனைகள் மூலம் நிரப்புவதும், சுவாரஸ்யத்திற்காக சின்ன சின்ன மாறுதல்களை செய்வதும், தற்காலத்தில் நம்பமுடியாத விஷயங்களுக்கு தர்க்க ரீதியான் விளக்கத்தை தருவது என்பதுதான் அவரது நாவல்களின் அடிப்படை. ராவணனின் புஷ்பகவிமானம் இன்றைய ஹெலிகாப்டர் போலவே சித்தரிக்கப்படுகின்றது. தெய்வீக அஸ்திரங்கள் கிட்டத்திட்ட இன்றைய ஏவுகணைகளை போன்றவை என்று வர்ணிக்கின்றார்.

ராமனுக்கும் ராவணனுக்குமான பகைக்கு பின்புலமாக சீதையின் சுயம்வரம் காரணமாகின்றது. தெய்வீக அஸ்திரத்தை பயன்படுத்துவதால் ராமன் நாடுகடத்தப்படுகின்றான். துணையாக வருவது ஜடாயு என்னும் நாகா. நாகர்கள் என்பவர்கள் பிறக்கும் போதே வித்தியாசமாக பிறப்பவர்கள். ஹனுமானும் ஒரு நாகாவாகின்றார். ஜடாயு மலையபுத்திரர் என்னும் கூட்டத்தை சேர்ந்தவர். ஹனுமான் வாயுபுத்திர கூட்டத்தை சேர்ந்தவர். அதுவும் ஈரானில் இருக்கும் ஒரு குழு (பெர்ஷியா / பரிகா) 

சின்ன சின்ன முடிச்சுகளை அங்கங்கு வைத்திருக்கின்றார். 

அடுத்தடுதத பாகங்களை பார்க்கலாம். என்னவாகின்றது என்று.

சேத்தன் பகத்தின் மொக்கைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக