09 ஜூன் 2017

அரசூர் வம்சம் - இரா. முருகன்

நம் காலத்திற்கு  முற்பட்ட காலத்தைப் பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை.  சரித்திரக்கதைகள் காலத்தால் முந்தையவை, மற்றொருவகை சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கையை பற்றிய கதைகள், கொற்கை, ஆழி சூல் உலகு, தூர்வை, கோபல்ல கிராமம் போன்றவை. இவையெல்லாம் சமூகத்தை மையமாக கொண்டு எழுதப்படுபவை. ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு சில கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அசோகமித்திரனின் யுந்தங்களுக்கு இடையில், பி.கே.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை. இவையிரண்டும் ஒரு பெரிய குடும்பத்தின் தலைமுறைகளைப் பற்றி பேசுபவை. 

அரசூர் வம்சமும் அது போன்ற ஒரு நாவல். ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு தலைமுறையில் நடந்த கதை. சிறு சிறு குறிப்புகளை வைத்து கற்பனையால் விரித்தெழுதியுள்ள நாவல். ஆங்கிலேயர்களின் காலம், அவர்கள் தங்களை மேதுவாக இங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம் என்று வைத்துக் கொள்ளலாம். கதை 1800 களின் மத்தியில் என்று எனக்கு தோன்றுகின்றது. 

இரண்டு புவியியல் பகுதிகளில் நடக்கும் கதை ஒன்று கேரளம், மற்றொரு பகுதி தமிழகம். பிராமணக் குடும்பங்கள்.

அரசூர் ஒரு காலாவதியாகிக் கொண்டிருக்கும் ஜமீன். ஆங்கிலேயர்களின் தயவில் வாழும் ஒரு ஜமீன்தார். புகையிலை விற்று வாழும் பிராமணர் குடும்பம். அந்த பிராமணரின் மகன் திருமணம் செய்து கொள்ளும் குடும்பம் இருப்பது கேரளத்தில். சமையல் செய்யும் குடும்பம்.

சாதரணக் கதைதான், ஆனால் சொன்ன விதத்தில்தான் அவரின் அபாரத்திறமை வெளிப்படுகின்றது. கொஞ்சம் மாயஜாலம் கலந்த கதை. மாய யதார்த்தவாதம் என்ற பதார்த்ததை இதில் பயன்படுத்தியிருப்பதாக இலக்கிய சமையல் வல்லுனர்கள் கூறியிருப்பதாக அறிந்தேன். நமக்கு என்ன வந்தது, நம் கையில் இருப்பது நன்றாக இருந்தால் சரி.

கதையை கலைத்து போட்டு விளையாடுகின்றார் ஆசிரியர். குழந்தை விளையாட்டு போல, என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று செல்கின்றது. வயதான கிழவன் மாடியிலிருந்து பறந்து சென்ற படி சிறுநீர் கழிக்கலாம். பெட்டியில் வைக்கப்பட்ட விரல் முளைக்கலாம். கதை முழுவதும் குடும்ப முன்னோர்கள் அடிக்கடி வந்து குடும்பத்தவர்களுடன் பேசிச் செல்கின்றனர். வேதங்கள் படித்த ஒருவன் தன் குடும்பத்தில் எப்போதே இறந்து போன மூத்தகுடிப் பெண்ணை மந்திரத்தால் மயக்கி கூடுகின்றான். இறந்தவர்கள் சோழிகளில் வந்து பேசுகின்றனர். ஒரு பாட்டி மீது மூத்தகுடி பெண்களுக்கும், தேவதைகளின் ஆட்டகாசத்திற்கு பயந்து யந்திரத்தை வண்டியில் வைத்து இழுத்து செல்கின்றாள். 

இது ஒரு பக்கமிருக்க, மற்றொரு பக்கம் அந்தகாலத்தில் நடந்த பிராமணர்களின் மாற்றத்தை நுணுக்கமாக சொல்கின்றது. புரோகிதம் செய்து வந்தவர்கள் வியாபாரத்தில் இறங்குவதும், அரசு வேலையில் இறங்குவதும், உணவகங்கள் நடத்துவம் சகஜமாகிக் கொண்டுவந்த காலம். கூட்டு குடும்பத்தின் தொந்தரவுகள். இரவில் சத்தமின்றி மனைவியை எழுப்பி கூடி மீண்டும் மறைவது, அதற்கு முன்பே சகோதரர்கள் யாராவது இடத்தை கர்ச்சீப் போட்டு விட்டார்களா என்று பார்த்து கொள்வது அக்கால அபத்தங்கள். 

பல இடங்களில் புன்னகைக்க வைக்கின்றார். ஒரு வித கேலியும் தெரிகின்றது. பட்டிணத்தில் வேலைபார்க்கும் ஒருவன் தான் தான் ஆங்கிலேய ஆட்சியையே தாங்குகின்றேன் என்ற அளவில் அடித்து விடுவதும், மூக்குப் பொடி பாய், ஐயரை வேலைக்காரனாக்கி விளையாடுவதும் புன்னகைக்க வைக்கின்றன.

மற்றொரு முக்கிய அம்சம், மத மாற்றம். மதம் மாறுவதிலும் பிராமணர்கள் கொஞ்சம் முன்னோடியாக இருந்திருப்பார்கள் போல. பணத்திற்காக மதம் மாறுவது, மதம் மாறிய பின்னும் அந்த பிராமண பெருமையை விடாது திரிவது என்று செல்கின்றது அவர்களின் வாழ்க்கை. பணத்தை கடனாக தந்து கிறிஸ்துவனாக மாற்றுவது என்பது இன்றும் நடக்கும் ஒன்று, ஆனால் இதுதான் உண்மையான வேதம் என்று இந்து மதத்தை திரித்து இந்து மத நம்பிக்கையை வைத்தே மதம் மாற்றும் அக்கால வழக்கத்தையும் காட்டியிருக்கின்றார். ஐந்தாம் வேதம், வேதக்காரன், உண்மையான வேதம் என்ற கிறிஸ்துவ மதமாற்ற பித்தலாட்டங்கள் பற்றி அழுத்தமான பார்வையையும் தருகின்றது.

இரா. முருகனை சுஜாதா தன் எழுத்துலக வாரிசு என்று சொன்னதாக ஒரு கர்ணப்பரம்பரை கதை உண்டு, இதைப் படித்தால் அப்படி சொல்ல முடியாது. முழுவதும் வேறுபட்ட ஒரு நடை.  சாதாரணக்கதையை ஒரு நல்ல நாவலாக்கியிருப்பது அவரின் வித்தியாசமான நடையும் சித்தரிப்புகளும்தான். ஒரு புதிய வகை கதை சொல்லல். சில சித்திரங்களை நமக்குள் உருவாக்குகின்றார், கேப்பைகளிக்கு காத்திருக்கும் ஜமீன்தார், புஸ்தி மீசைக் கிழவன், பனியன் சகோதரர்கள், பழுங்காத்தட்டு, பைராகிகள் என்று நாமறியா உலகை நம் கண்ணில் காட்டுவதில் முழு வெற்றியடைந்திருக்கின்றார்.

புத்தகமாக மட்டுமே படிக்க முடிவது இதன் மற்றுமொரு வெற்றி, இதை திண்ணையில் படித்திருக்கின்றேன், ஆனால் இதை அலுவலகத்திலோ பயணத்திலோ போகின்ற போக்கில் படிக்க முடியாது. காரணம், இது காட்டும் உலகைக் காண கவனம் செலுத்தி படிக்க வேண்டும். அப்படி படிக்கும் போதுதான் அந்த சித்திரம் நமக்குள் முழுவதும் அமையும், இல்லையென்றால் கலைந்த சித்திரமே கிடைக்கும். பயனில்லை.

ஆன்லைனிலும் கிடைக்கின்றது. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக