அலை உறங்கும் கடல், கல்கியில் தொடராக வந்தது. அனேகமாக பொன்னியின் செல்வன் வந்து கொண்டிருந்த சமயமாக இருக்கும். 1999 - 2002 வாக்கிலிருக்கலாம். பொன்னியின் செல்வன் தொடருக்காக எனது மாமா எனக்காக கல்கி வாங்கி வந்தார். ஆனால் அவர் ரெகுலராக படிக்க மாட்டார், இந்த தொடரை அவரை படிக்க சொன்னேன். படித்துவிட்டு கடுப்பாகி விட்டார். "எப்பப் பாரு பிராமணன வச்சி ஏதாவது எழுதறதே இவனுங்க வேலையா போச்சி" என்று திட்டிவிட்டு போய்விட்டார். அவருக்கு இந்த காரணத்திற்காகவே ஜெயகாந்தனையும் பிடிக்காது. எனக்கு புத்தகங்களுக்கு அவர்தான் வழிகாட்டி. இருந்தும் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.
அதுவரை ராஜேஷ்குமார் போன்று துப்பறியும் கதைகளையும், விகடனில் வரும் சிறுகதைகளையும், தொடர்களையும் படித்து வந்த எனக்கு, இது ஒரு புதிய வகை தொடராக இருந்தது. சேகரித்து, தைத்து வைத்திருந்தேன். வேலைக்காக சென்னை வந்த பின் அது எங்கோ சென்று விட்டது. பரணில் தேடினால் கிடைக்கலாம்.
பிறகு இந்த நூலை தேடிப்பார்த்தேன், அச்சில் இல்லையென்று விட்டு விட்டேன். போன வாரம், பாரா கிண்டிலில் கிடைக்கின்றது என்று ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருந்தார். இரவோடு இரவாக உடனே வாங்கிவிட்டேன்.
இந்தக்கதை பசுமையாக மனதில் நிற்க இரண்டு காரணம். ஒன்று கதை நடக்கும் சூழல், ராமேஸ்வரம். இரண்டு நீலுப்பாட்டியும் அவள் கனவுகளும். பாரா நீலுப்பாட்டியை அவள் இவள் என்று சொன்னதற்கு ஃபேஸ்புக்கில் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். "அவள்"தான், அந்தப்பாட்டியை அப்படித்தான் அழைக்க முடியும். பாராவிற்கு மட்டுமல்ல படிப்பவர்களுக்கும் நெருக்கமாகிவிடுவாள். ஒரு எளிதான காதல் கதை. ராமேஸ்வர கிறிஸ்துவ மீனவன் ஒருவனுக்கும் அங்கு வரும் யாத்திரீகர்களுக்கு பரிகாரம் செய்துவைக்கும் புரோகிதர் பெண்ணிற்குமான காதல். இது ஒரு சிறிய திரிதான். முக்கியமான ஆள் அந்தப் பாட்டி, கனவுகளில் வாழும் பாட்டி.
அந்தப் பாட்டிக்கு வந்த ஒரு கனவு அப்படியே மனதில் பதிந்துவிட்டது, "உங்கம்மா கடல்ல சங்குக்குள்ள வீடு கட்டி போறா, அவளுக்கு சத்ருக்கனன் பண்ணி வைக்கறான்" நல்ல கற்பனை. யதார்த்தத்தை வெகு எளிதாக புரிந்து கொள்ளும் ஒரு பாட்டி. பேத்தி மீனவனை காதலிப்பதையும் ஹூம் சரி என்று ஏற்று கொள்ளும் பாட்டி.
இதில் எனக்கு பிடித்த ஒரு அம்சம், இறுதியில் வரும் சில விமர்சனங்கள். புரோகிதம் செய்யும் சாஸ்திரிகளின் பிரச்சினை. காசிற்கு அலைய வேண்டிய நிலை. எக்காரணம் கொண்டு அதுமாதிரியான நிலைக்கு சென்று விடக்கூடாது என்று ஒரு வைராக்கியம் வந்ததற்கு இந்த தொடரும் ஒரு காரணம். கோவில் வேலையோ, புரோகிதர் வேலையோ கேவலம் அல்ல, ஆனால் அதை செய்யும் போது ஒரு கம்பீரம் இருக்க வேண்டும். சமரசம் செய்து கொள்ளாநிலை இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் எந்தளவிற்கு அது சாத்தியம்? ஓரளவிற்கு சுயமரியாதையை காப்பாற்றி கொண்டாலே பெரிய விஷயம். ஆனால் இன்று புரோகிதர்கள் நிலை மாறி இருக்கின்றது. பலர் விரும்பி இதற்குள் நுழைகின்றார்கள். என்ன பெண்தான் கிடைப்பதில்லை.
ராமேஸ்வர மீனவ வாழ்க்கையையும் லேசாக தொட்டு செல்கின்றது. ராமேஸ்வரத்திற்கு நான் சென்ற போது இந்நாவலையே நினைத்து கொண்டேன். அடுத்தவாரம் செல்லும் போதும் மீண்டும் நினைவில் வரும்.
இது ஒரு வித வாழ்க்கையை உங்கள் முன் காட்டுகின்றது. வேண்டியதை எடுத்து கொள்ளலாம். காட்டும் வாழ்க்கை, பலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் சொன்ன விதத்தில் இது ஒரு முக்கிய நாவல்.
அகதிகளின் நிலை. தங்கள் வாழ்வை விட்டு வந்தும், நீத்தார் கடனை செலுத்தவும் போராடும் அவர்களின் துன்பத்தை துயரக் காவியமாக இல்லாமல் நுணுக்கமாக கூறுவது ஆழமாக பதிகின்றது. சங்குக்கடை ராஜு, அருள்மேரி, சாஸ்திரிகள், தானியேல் நாடார் என்று சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் அமர்கின்றார்கள்.
நாவலைப் பற்றி ராகவனின் வார்த்தைகளில்
//இன்று வரை என்னைச் சந்திக்கும் வாசக நண்பர்களுள் பத்துக்கு நாலு பேராவது இதைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. உமாவையும் அருள்தாஸையும் அற்புத மேரியையும் நீலுப்பாட்டியையும் சங்குக்கடை ராஜுவையும் தமது மனத்துக்கு நெருக்கமாக வைத்துப் பரவசத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மூச்சு விடாமல் பேசுகிற போதெல்லாம் எனக்குக் கண்ணீர் மல்கும். என்னுடைய வேறெந்த எழுத்தும் என்னை அப்படி உணர்ச்சி வசப்பட வைத்ததில்லை.
காரணம் இருக்கிறது.
இந்நாவலின் ருசியே கண்ணீரின் ருசிதான். அதுதான் கடலாக உருவகித்துக் கதையெங்கும் விரிந்து கிடப்பது. அலைகளற்ற ராமேஸ்வரத்தின் கடல் பரப்பு எனக்கு அங்கு போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கும். எட்டு மணி நேரம், பத்து மணி நேரமெல்லாம் தனுஷ்கோடிக் கரையில் மல்லாக்கக் கிடந்திருக்கிறேன். கடலுக்குள் இறங்கி நாலைந்து அடி நடந்து சென்று அப்படியே அமர்ந்துவிடுவேன். அலை அடித்துப் போய்விடாது என்ற நம்பிக்கை. ஒரு குளத்துக்குள் இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால் குளிராது; கொதிக்கும். அந்தச் சூடு தண்ணீரில் இருந்து வருவதல்ல; அது அம்மண்ணின் தகிப்பு என்பதை மனம் சொற்களற்று உணரும்.
என் பிரயத்தனமே இன்றித் தன்னை எழுதிக்கொண்ட நாவல் இது. காரணம், இதன் கதாபாத்திரங்கள் அனைவரையும் எனக்கு வெகு நன்றாகத் தெரியும். நீலுப் பாட்டியைத் தவிர மற்ற அத்தனை பேரும் இன்னும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம். பாட்டி காலமாகிவிட்டாள். இருந்திருந்தால் இன்றைக்கு அவளுக்கு 104 வயது!
உண்மையில் இந்தக் கதையே அவள் சொல்லி ஆரம்பித்ததுதான். கமலஹாசன் படம் மாதிரி கதை, திரைக்கதை, வசனமெல்லாம் தானே எழுதிக் கொடுத்து, நடித்தும் கொடுத்து இன்னொருத்தரை இயக்கவைக்கிற காரியத்தையே அவள் செய்தாள். எப்பேர்ப்பட்ட ஆகிருதி! இப்போது நினைத்தாலும் பிரமிப்பில் பேச்சற்றுப் போய்விடுகிறேன்.
துணிந்து ஒரு கிழவியைக் கதாநாயகியாக வைத்தேன். இறுதி அத்தியாயத்தில் இறக்கும்வரை அவள் நிகழ்த்தும் பேயாட்டம்தான் இக்கதையின் ஆதார சக்தி. ஊன்றி வாசித்தால் ஒரு காதல் கதை, ஒரு சிறு தீவின் சமகால சரித்திரம் என்பதைத் தாண்டி இந்நாவலுக்குள் ஒரு பெரும் ரகசியத்தை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அச்சமும் ஆசையும் உரசுகிற கணத்தில் எழுகிற தீப்பொறிக்குள் புதைந்த ரகசியம் அது.
“என் கனவுகளில் மிக மேலானதும் மிக சத்தியமானதுமான ஒன்றையே நீ எனக்கு இறுதியாக அருளியிருக்கிறாய். நீ முற்றும் உணர்ந்தவள். நீ தீ. நீ நீர். நீ காற்று. நீ புவி. நீ ஆகாயம். நீ பூதங்களில் உறைந்திருப்பதோடு பூதங்களாகவும் நீயே இருக்கிறாய். உன் பரவசம் தென்றலாகிறது. உன் முகச் சுளிப்பு தீயாகிறது. உன் கனிவே புவி. உன் புன்னகையே ஜலம். உன் மனம் ஆகாயம். நீ நித்தியம். நீ சத்தியம். வா. வந்தென்னை ஆலிங்கனம் செய்துகொள்.”//
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக