26 ஆகஸ்ட் 2017

சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி

டெல்லி வாழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இ.பா. அவரது நாவல்கள் எனக்கு ஒரு வித சலிப்பையே தந்திருந்தன. காரணம் ஒரே அறிவுஜீவித்தனமான பாத்திரங்கள். அனைத்து பாத்திரங்களும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. குறிப்பாக வெந்து தணிந்தன காடுகள், மாயமான் வேட்டை. அதீத பேச்சுக்கள். 

ஆனால் இந்த நாவல் அந்தளவிற்கு இல்லை. ஓரளவிற்கு அறிவுஜீவித்தனமான பேச்சுகள் இல்லை. நாவலின் களம், பாத்திரங்கள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அரசியல்வாதிகள் - அறிவுஜீவித்தனம். சேருவது கடினம்தான்.

அரசியல் என்பது எந்த காலகட்டத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. முகுந்தன் என்னும் ஒரு தமிழன் ஏதோ ஒரு மிஸ்ராவிடம் சமையல்க்காரனாக சேர்ந்து மந்திரியாவதுதான் கதை. 

கதை வழியே பல விஷயங்களை விமர்சனம் செய்கின்றார். நாவல் நடக்கும் காலகட்டம் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலம் என்று யூகிக்கமுடிகின்றது. இன்றுவரை அந்த நிலையை மாறாமல் வைத்திருப்பதில் காங்கிரஸ்ஸின் பங்கு பெரியது.



கற்பனை நாவல் என்றாலும் கலைஞர், அண்ணா, பெரியார் என்று பலரின் பெயர்களை பயன்படுத்தியிருக்கின்றார். நாவல் வெளிவந்த காலத்தில் எவ்வித எதிர்வினைகள் வந்திருக்கும் என்று தெரியவில்லை.

நாவலில் வரும் சில வரிகள் நாவலைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்

"மை காட்! அண்ணா ஒரு பகுத்தறிவுவாதி என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். “அண்ணாவும் தம்மை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார், மரணம் நெருங்கும்வரை. கடைசிக் காலத்தில், தெய்வம் என்று ஒன்றிருந்தால் என்ன செய்வது என்ற பயம் அவருக்கும் வந்துவிட்டது."

"நம் நாட்டு இக்கால நாஸ்திகர்கள், கோமாளிகள். விஞ்ஞானத்தையும், தர்க்கத்தையும் அரைகுறையாகப் புரிந்து கொண்ட முட்டாள்கள்” என்றார்"

"அவர் தமிழ்நாட்டின் டான் க்விக்ஸாட் என்று எனக்குத் தெரியும். அவர்தான் உங்கள் பெரியார் என்றால் நீங்கள் வெட்கப்பட வேண்டும்.”"

"அண்ணாவை எனக்கு நன்றாகத் தெரியும். ரம்மி விளையாடுவதில் நல்ல கெட்டிக்காரர். அவர் ராஜ்ய சபா அங்கத்தினராக இருந்தபோது ஓர் இரவு முழுவதும் விளையாடியிருக்கிறோம்."

"டான் க்விக்ஸாட், வின்ட் மில்களோடு சண்டையிட்டது போல, ஒரு மானஸிகத்தோடு போராடும் கோமாளியைக் கடவுளாக்கி, இந்தப் புது மூடத்தனமே பகுத்தறிவு என்று மகிழ்கிறார்கள்."

"இந்நாட்டில் பதவிக்கு ஒரு கட்சி வந்துவிட்டால் அதை மீண்டும் அகற்றுவது என்பது சுலபமான காரியமல்ல. ஒரு புதிய இளைஞர் சமுதாயம் ஓட்டுரிமையைப் பெருவாரியாகப் பெறும் வரையில் அக்கட்சியே பதவியிலிருக்கும்."

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெயரளவில், முடியாட்சி இல்லாவிட்டாலும், முதல்வரை மன்னராகப் போற்றி மண்டியிடும் மனப்பான்மை இன்னும் இருக்கிறது...”"

"தமிழ்நாட்டு முதல்வருக்கு இரண்டாம் கரிகாலனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்... அதற்கும்"

ஒருவன் சர்வசாதரணமாக மந்திரியாக முடியும் என்பதுதான் நமது அரசியல் விளையாட்டின் அபத்தம் என்றாலும், அதைச் சொல்வதில் ஒரு நம்பகத்தன்மை வேண்டும். நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு விஷயம், இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்றபடி வைத்து கவர் செய்துதுவிட்டார்.

இத்தனை இருந்து நாவல் மிகப் பிரமாதம் என்று கூற முடியவில்லை. கூர்மையான விமர்சனங்கள் எதுவும் கிடையாது. ஓரளவிற்கு கிண்டலுடன் எழுதியிருக்கின்றார்.

படிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக