02 ஆகஸ்ட் 2017

குருத்தோலை, கொட்டு மொழக்கு - செல்லமுத்து குப்புசாமி

இரண்டு நாவல்கள். பாத்திரங்கள் அதேதான். ஆனால் இரண்டும் வேறு வேறு களம். 

குருத்தோலை ஒரு சிறுவனனின் பதின் பருவத்தில் ஆரம்பித்து மத்திம வயதில் முடிகின்றது. கிராமத்து மனிதர்களின் கதை. கொங்கு வட்டார கிராமத்தை ஓரளவிற்கு காட்ட முயற்சித்திருக்கின்றது. அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. முதலில் வரும் சில பகுதிகளை படிக்கும் போது வேறு ஒரு எழுத்தாளர் எழுதியதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. 

ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை ஒரு பார்வை பார்த்து செல்லும் கதை. அந்த பகுதி மக்களின் வாழ்வை கொஞ்சம் நுணுக்கமாக சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அழுத்தமான சம்பவங்கள் ஏதுமில்லாமல், முழுமையான பாத்திரங்கள் ஏதுமின்றி ஓடுகின்றது. 

சுமாரான நாவல்.

கொட்டு மொழக்கு - முதல் நாவலில் வரும் ஒரு சிறுவன் தன் தாத்தாவின் சாவிற்கு வருவதுதான் கதை. முந்தைய நாவலுடன் ஒப்பிடுகையில் இதை சிறப்பானது எனலாம். ஒரு சாவு என்பது சாதரண விஷயமல்லவே. நாவல் முழுவதும் அந்த சாவை ஒட்டி நடக்கு விஷயங்கள்தான். எழவு வீட்டிற்கு செல்பவனின் தர்மசங்கடம், அங்கு நடக்கு சில அபத்தங்கள், இரண்டு காலகட்டத்திற்கு நடுவில் நடக்கும் விஷயங்கள் என்று பல விஷயங்களை காட்டுகின்றார். ஒருவன் இறந்து போனால் அதன் பின் நடக்கும் விஷயங்கள் எத்தனை. எவ்வளவு சடங்குகள், அதற்கான வழிமுறைகள். அந்த சடங்குகளில் இருக்கும் சமூகப் பிரச்சினைகள் என அனைத்தையும் காட்டுவதில் வெற்றி பெற்று இருக்கின்றார். கதை எழுதும் போது ஆசிரியருக்கு வந்த ஏதோ ஒரு தொலைபேசி உரையாடலையும் உள்ளே வைத்துவிட்டார் போலா. சாரு பாணி. ஒட்டாமல் தெரிகின்றது.

குருத்தோலையை விட கொட்டுமுழக்கு சிறப்பாக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக