22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.


பலரும் கூறும் முக்கிய காரணம், காந்தி பாகிஸ்தானுக்கான 55 கோடியை உண்ணாவிரதமிருந்து பெற்று தந்தார் என்பது. ஆனால் அது உண்மையில்லை, காந்தியின் உண்ணாவிரதம் மக்களின் ஒற்றுமைக்காக என்கின்றது புத்தகம். சொல்லப்படாத காரணம் 55 கோடியாக இருக்கலாம். கோட்சேயின் வாக்குமூலத்தில் அவர் கூறுவதும் இக்காரணத்தைதான்.  தனி ஒருவன் தன் வாக்கை காக்காவிட்டால் அது தவறு ஆனால் ஒரு தேசத்தின் நலனை காக்க, வாக்கைத் தவறவிடுவதில் எவ்வித பிழையுமில்லை. ஆனால் காந்தி வழிபட்டது ராமனை, கிருஷ்ணனை பின் தொடர்ந்திருந்தால் பல பிரச்சினைகள் வந்திருக்காது. சரி போகட்டும். அப்படியானால் உண்மையான காரணம்தான் என்ன? அதற்கு பல ஆண்டுகள் பின்னோக்கி போகவேண்டும். அதை இப்புத்தகம் செய்துள்ளது.

கோட்சேவின் ஆரம்பகாலங்கள், அவரது அரசியல் வாழ்க்கை என்று அவர் எப்படி மெதுவாக காந்திக்கு எதிரான மனநிலையை அடைந்தார் என்பதை கோடிட்டு காட்டுகின்றது. இது கோட்சேவை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ள பயன்படுகின்றது. எதற்காக கொலைசெய்யும் அளவிற்கு அவர் சென்றார் என்பதை காட்டவில்லை. இப்புத்தகம் காட்டும் கோட்டையே ப்டமாக கொண்டால், இந்துமகாசபையை சார்ந்தவர்கள் அனைவருக்கும் அந்த எண்ணம் வந்திருக்க வேண்டும். காந்தியின் இஸ்லாமிய பாசம் தாண்டிய வேறு ஏதோ ஒன்று இருக்கவேண்டும். ஏனென்றால் கோட்சேவும் காந்தியின் பக்தராக இருந்தவ்ர்தான். கோட்சேவைப் பற்றிய பல விஷயங்கள் அவரை ஒரு நல்ல மனிதராகவே காட்டுகின்றது. தேசபக்தி, பிறருக்கு உதவி செய்தல், ஒழுக்கமான வாழ்க்கை என்று இருக்கும் ஒருவருக்கு எப்படி ஒரு உயிர்க்கொலை செய்ய தோன்றியது என்பதற்கான வலுவான காரணம் இதில் இல்லை. இந்தியப்பிரிவினையும் அதை தொடர்ந்த நிகழ்வுகளும் அவரை தூண்டியிருக்கலாம் என்ற அளவில் யூகித்து கொள்ளலாம்.  கோட்சே செய்தது பாவச்செயல் என்பதில் சந்தேகமில்லை. இது கொலை வழக்கை பற்றிய் புத்தகம், கோட்சேவை பற்றியதல்ல என்பதால் விட்டு விடலாம்.

கொலைக்கு பல நிலைகள், திட்டமிடல், பல முயற்சிகள், கொலை,வழக்கு, தண்டனை. ஒவ்வொரு நிலையையும் முழுவதுமாக காட்சி தொடர்களாக காட்டியுள்ளார். உரையாடல்கள் யூகத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும், கொஞ்சம் செயற்கைதன்மை வருகின்றது. இயல்பான ஒன்றாக சேரவில்லை. காந்தியை கொல்ல நடந்த மிகப்பெரிய முயற்சி ஜனவரி 20ல் நடந்தது, குண்டு வெடிப்பு. அதன் பின் காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால அது நடக்கவில்லை. சுலபமாக வந்து சுட்டு விட முடிந்திருக்கின்றது. ஆங்கில்ஆட்சி உண்டாக்கி வைத்த ஒரு சோம்பலான கட்டமைப்பின் செயல்பாட்டின் அழகு. இன்று வரை மாற்ற முடியாத ஒன்றாக இருக்கின்றது.

அரசு இயந்திரத்தின் சோம்பல், ஒன்றிணைந்து செயல்படுவதில் இருக்கும் பிரச்சினைகள், அலட்சியம், காந்தியின் பாதுகாப்பிற்கு காந்தியின் எதிர்ப்பு என்று அனைத்துமே ஒரு காரணமாகியிருக்கின்றது. கொலைக்கு பிறகு ஒவ்வொருவரையும் கைது செய்ததில் ஆரம்பித்து முடிவு வரை அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும், அதனால் தகவில் பிழை ஏதுமிருக்காது  என்று நம்பலாம்.

பலர் முன் கொலை செய்திருந்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது வரை அவர் குற்றவாளியல்ல. கோட்சே காந்தியை கொன்றதற்கு ஏகப்பட்ட சாட்சிகள், அவரே ஒத்துகொண்ட விஷயம். ஆனால் மற்ற சதிகாரர்களை தண்டிப்பதும் முக்கியம், அதற்கான சாட்சிகளை கொண்டுவருவது காவல்துறையின் வேலை. அந்த சாட்சிகளின் அடிப்படையிலேயே சதிக்காட்சிகளை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்

சில சில உறுத்தலகள், ஒரு பகுதி முடிவில் கோட்சே தன் முதல் கொலை முயற்சியை செய்தார் என்று முடிகின்றது, பின்வரும் பகுதிகளில் வரும் சம்பவங்கள் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் இருக்கின்றது. கோட்சே கத்தியுடன் சென்ற சம்பவங்கள் அனைத்தும் கொலை முயற்சி என்று உறுதிப்படுத்தாமல் இருக்கும் போது, கொலை முயற்சியை செய்தார் என்பது முரண்பாடாக இருக்கின்றது. கொலையில் சாவர்க்கரின் பங்கு; காந்திகொலைக்கும் சாவர்க்கருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது . ஆனால் இப்புத்தகம் சாவர்க்கருக்கு சம்பந்தமிருக்குமோ என்ற எண்ணைத்தை உண்டாக்கும் வகையில் எழுதப்பட்டுளது. கோட்சேவின் கடைசி வாக்குமூலம் May it please your honour என்ற பெயரில் வெளிவந்து பல முறை தடை செய்யப்பட்டு இன்று இணையத்தில் ஏகப்பட்ட இடத்தில்கிடைக்கின்றது. அதை தயாரித்தவர் சாவர்க்கர் என்ற சந்தேகத்தை விதைக்கின்றது இப்புத்தகம். சாவர்க்கர் எழுதவில்லை என்பதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் என்ற கூற்றே, நான் நம்புகின்றேன், அப்புறம் உங்க பாடு என்கின்ற தொனி வருகின்றது.

காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ், சாவர்க்கர் தொடர்பை இன்னும் சாதிக்கும் பலர் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. கோட்சே ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபாவை விட்டு தனியே வந்து வெகு காலத்திற்கு பின்னரேஎ காந்தி கொலை நடக்கின்றது, காந்தி கொலைக்காகவே அவர் வெளியே வந்தது போல வந்து திட்டமிட்டார் என்பது வேடிக்கையாக இருக்கின்றது. காந்திகொலைக்கான திட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை எண்ண முடியவில்லை, அப்படிப்பட்டவர்கள் இவ்வளவு முன்யோசனையுடன் நடந்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை.

கோட்சேவின் வாக்குமூலம் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு வந்த காரணமும் தெரியவில்லை. கோட்சேவின் வாக்குமூலத்தை கேட்ட பலர் கண்ணீர் விட்டு அழுத்தாகவும், அவர்களை தீர்ப்பு எழுத சொன்னால், உடனே கோட்சேவை விடுதலை செய்துவிடுவார்கள் என்று நீதிபதி கூறியதாக குறிப்பு சொல்கின்றது. நாட்டுமக்களிடம் அந்த வாக்குமூலத்தை சேர்ப்பதன் பாதிப்பை நினைத்து தடை செய்திருக்கலாம்.

இந்த புத்தகத்திற்காக கண்டிப்பாக ஆசிரியர் சொக்கன் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். நாடறிந்த விஷயம் என்பதாலே பல கோணங்கள், பலர் ஒரே சம்பவத்தை அவரவர் யூகத்தில், பார்வையில், அரசியல் நிலையை ஒட்டி எழுதியிருப்பார்கள், பற்றாக்குறைக்கு கற்பனை விஷயங்களை வேறு சேர்த்திருப்பார்கள் (காந்தி ஹேராம் என்று சொன்னது, கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தது) அனைத்தையும் பிரித்து தொகுத்து எழுதுவது பெரிய வேலை. அதை கச்சிதமாக செய்துள்ளார் சொக்கன். முதலில் ஒரு நாவல் ஸ்டைலில் ஆரம்பிப்பது மெதுவாக கட்டுரையாக மாறுகின்றது. நடுநடுவே வரும் உரையாடல்கள் புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி காட்ட முயல்கின்றது. மொத்தத்தில் இரண்டும் கலந்த கலவையாக இருந்தாலும் சோர்வை தராமல படிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றது.

தொடர்புடைய மற்றுமொரு புத்தகம், காந்தி கொலையை அடிப்படையாக வைத்து மாலன் எழுதிய ஒரு நாவல் ஜனகனமன
1 கருத்து:

  1. நல்லதொரு பகிர்வு. இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றி மருதன் எழுதிய புத்தகம் படித்தேன். அதில் இந்தப் பகுதியும் வருகிறது. பிரிவினை பற்றியும், இது போன்ற சில பகுதிகள் பற்றியும் சற்று ஒருதலைப் பட்சமாக இருந்தது போல உணர்ந்தேன். இந்தப் புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு