30 நவம்பர் 2017

6147 - சுதாகர் கஸ்தூரி

ஆங்கிலத்தில் பல சுவாரஸ்யமான நாவல்களை எழுதியவர் டான் ப்ரெளன். பெரும்பாலும் சுவாரஸ்யமானவை, ஆனால் ஒரே சட்டகத்தில் அடங்கும் கதைகள். விடை தெரியாத சில அமானுஷ்ய விஷயங்கள், சில ரகசியங்கள், புதிர்கள், பழைய பாடல்கள், கட்டுமானங்கள் போன்றவற்றை வைத்து பின்னப்படும் கதைகள். புதிர்களை விடுவிக்க அந்த துறை சார்ந்த சிலர் உதவ, சுபம். கதை சொல்லலும் ஒரே முறையில். சினிமாக்களில் டைட்டிலுக்கும் முன்னால் வருவது போன்ற ஒரு காட்சித்துண்டு, அது பின்னால் எங்காவது ஒட்ட வைக்கப்படும். ஒன்றிரண்டு நாட்களில் நடந்து முடியும் கதை. 

கதை நாயகன் ராபர்ட் லாங்க்டன் சுழலில் வந்து சிக்கி கொள்வார் . கூடவே அவருக்கு உதவ ஒரு பெண். வில்லன் கூட்டத்தில் ஒருவன் இவர்களுடனே எங்காவது சுற்றிக் கொண்டிருப்பான், அவனை ஒரு சில்ஹவுட்டில் காட்டுவார்கள். வில்லன் பெரும்பாலும் தலைமறைவாக,தொலைபேசியில் அல்லது ஒரு இருட்டில் முகமறியாமல் இருப்பான்.  நடுநடுவே புதிர் குழப்பமாக இருக்கும் போது ராபர்ட்டின் நினைவுகள் பின்னோக்கி செல்லும், ஏதாவது ஒரு நிகழ்வில் விடை கிட்டும். பரபரப்பான க்ளைமேக்ஸ், சினிமா பாணி. இதுதான் டான் ப்ரெளன் ஸ்டைல்.

ஜெயமோகன் ஒரு முறை "தமிழலும் பல டான் ப்ரெளன்கள் உருவாக வேண்டும்" என்று எழுதியிருந்தார். கதையின் ஆசிரியர் அதை சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார் பொல. அதே பாணி அப்படியே. ஆசிரியர் பல துறைகளில் பல விஷயங்களை படித்திருக்கின்றார். ஆராய்ச்சி துறையில் இருக்கின்றார் என்று அவரைப் பற்றிய தேடல்கள் சொல்கின்றது. அதனால் இயல்பாகவே விஞ்ஞான விஷயங்களில் பல விஷயங்கலை அறிந்துள்ளார், தமிழ்ப்பாடல்கள், பூகோளம், சரித்திரம், எண் கணிதம், வடிவ கணிதம் என்று அவர் அறிந்த பல விஷயங்களை வைத்து கதையை பின்னியிருக்கின்றார். 

லெமூரியாக்கண்டத்தைப் பற்றி பல தகவல்களை படித்திருப்போம், தனித்தமிழர்களுக்கு மிக வசதியான ஒன்று. லெமூரியர் அழைக்கின்றார் என்ற சுவர் விளம்பரத்தை மதுரையில் பார்த்திருக்கின்றேன். லெமூரியாக்கண்டம் இருந்தது என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். லெமூரியன் கிரிஸ்டல் என்பது ஒரு வகையான படிகம் அதையும் 6147 எண்ணும் கருந்துளை எண்ணையும் கொண்டு சுவாரஸ்யமான ஒரு கதையை சொல்ல முயற்சி செய்திருக்கின்றார். நடுநடுவே தழிழ் செய்யுள் வடிவில் எண் புதிர்கள், சித்திரப் புதிர்கள். லோனார், மியான்மர், காஞ்சி, கலிங்கம், ஆம்ஸ்டர்டாம், அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா என்று எங்கெங்கோ சுற்றி வந்து ஐராவதி நதிக்கரையில் கதை முடிகின்றது. 

முதல் நூறு பக்கங்களை யாராவது தெளிவாக படித்திருந்தால் அவரை பாராட்ட வேண்டியதுதான். புத்தகத்தை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தையே கெடுக்கின்றது. துண்டு துண்டான நிகழ்வுகள், படிப்பது நாவலா இல்லை ஏதாவது லீக்கான சினிமா திரைக்கதையா என்று குழம்ப வைக்கும் சம்பவங்கள். சினிமா போன்று பல துண்டுகளை காட்டுவதில் தவறில்லை, ஆனால் நாவல் படிக்கப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டுமல்லவா? நாவல் அதை கண்முன் கொண்டு வரவேண்டும். சுஜாத இதில் விற்பன்னர், சின்ன சின்ன சொற்களில் நம்மை அதில் இழுத்துவிடுவார். உதாரணம் விக்ரம். படத்தை நம் கண்முன் காட்டும். இதில் அது இல்லை. அதோடு காலம் வேறு முன்னும் பின்னும் அலைகின்றது. சில சம்பவங்கள் பின்னால் எங்கு இணைகின்றது என்பதை நினைவில் வைப்பதும் கடினம். சில சம்பவங்கள் எதிலும் சேராமல் அல்லது தொடர்பு இருப்பதையே வாசகனுக்கு காட்டாமல் அம்போவென அலைகின்றது. ஆர்ஃபன் த்ரெட்ஸ்.

கதை லோனார் சென்றபின் கொஞ்சம் சுறுசுறுப்படைகின்றது. இறுதிக் கட்டம் நெருங்கும்போது புஸ்ஸென்று போகின்றது. அடப் போங்கப்பா என்று செல்கின்றது. கதையில் வரும் அந்த எண் புதிரும் மிகத்தெளிவாக விளக்கப்படவில்லை. இது என்ன பாடப்புத்தகமா, மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டு நாமே தெரிந்து கொள்ள. ஒரு பொழுது போக்கு நாவலுக்கு இதற்கு மேல் மூளையை செலவு செய்ய முடியாது. 

அறிவியல் சார்ந்த விஷயங்களை சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் சொல்லவேண்டியதுதான். அதோடு கொஞ்சம் த்ரில்லிங்கை சேர்த்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதை எழுத்தில் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதை உணர்த்தும் மற்றுமொரு முயற்சி. இதே ஆசிரியரின் எழுத்துக்களை முகநூலில் படிக்கும் போது சுவாரஸ்யமாகவே இருக்கின்றது, நகைச்சுவை கலந்து நன்றாக வருகின்றது. அவை பெரும்பாலும் அனுபவம் சார்ந்த குறிப்புகள், முழுக்க முழுக்க கற்பனை என்னும் போது கொஞ்சம் தடுமாறுகின்றது.

எடுத்துக் கொண்ட களம் சுவாரஸ்யமானது சொன்ன விதம் சொதப்பலானது. 

அவரது முந்தைய கதையான டர்மரினும் இதே வகையானதுதான். ஆனால் இது அதைவிட கொஞ்சம் பெட்டர். அதைப்பற்றிய எனது பல விமர்சனங்கள் இதற்கும் பொருந்தும்.

விமர்சனங்களில் யாரோ தமிழ்நாட்டின் டான் ப்ரெளன் என்று பாராட்டியிருந்தார்கள். பாவம்

2 கருத்துகள்:

  1. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களும் இதே பாணியில் கதை சொல்பவர்தான். அவர் படைப்பு எதுவும் படித்திருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  2. காலச்சக்கரம் நரசிம்மா - எங்கோ பார்த்த நினைவு. படித்ததில்லை. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்தால் மட்டுமே படிக்க எண்ணம் :)

    பதிலளிநீக்கு