1991ம் ஆண்டு என்றவுடன் நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்திய சரித்திரத்தை மாற்றியமைத்த சில சம்பவங்களில் அதுவும் ஒன்று. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ராஜீவ்காந்தி படு கொலைக்கு முன்னால் நடந்த வாக்குபதிவுகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் குறைவே. ராஜீவின் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை சேர்த்துவிடவில்லை. ஒரு மைனாரிட்டி அரசாகத்தான் அமரமுடிந்தது. அந்த அரசிற்கு முன்னாலும் பின்னாலும் பல அரசுகள் முழு ஆதரவின்றி நடந்திருக்கின்றன. எதுவும் தன் ஆட்சிகாலத்தை முழுவதும் முடித்ததில்லை. ஆட்சியில் இருந்த போதும் ஏதும் செய்ய முடியாமல் ஆட்சியை காப்பாற்றி கொள்வதை மட்டுமே செய்ய முடிந்தது.
நிலையான ஆட்சியை விட மிகப்பெரிய இக்கட்டாக இருந்தது அன்றை இந்தியாவின் பொருளாதர நிலை. முந்தைய வி.பி.சிங், ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆட்சியின் திறன், இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியிருந்தது. புதிய கடனுதவி ஏதும் கிடைக்காமல், அந்நியச் செலாவணி குறைந்த நிலையில், வெளிநாட்டு இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்திருந்தனர். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என்று உள்நாட்டு கலவரங்கள் வேறு. இவையனைத்தையும் திறம்பட கையாண்டு, நாட்டை மீட்டவர் இன்று பலராலும் மறக்கப்பட்ட, சொந்த கட்சியினராலேயே திட்ட்மிட்டு மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர், பி.வி.நரசிம்மராவ்.

நரசிம்மராவ் ஒரு தேர்ந்த இலக்கியவாதி, பத்து மொழிகளுக்கும் மேலாக தெரிந்தவர். பல இந்தியமொழிகளும், அயல் மொழிகளும் அவருக்கு சரளமாக வரும். ராஜீவ் ஆட்சிகால முடிவில், அவருக்கு தேர்தலில் நிற்க இடம் தராமல், டெல்லியை விட்டு கிளம்பும் போது சுமார் நாற்பது பெட்டிகளுக்கு மேலாக புத்தகங்கள் இருநதிருக்கின்றன. சரியாக பிரிக்கப்பட்டு கட்டப்பட்டவை. ஒவ்வொரு நூலிலும் அவரால் எழுதப்பட்ட குறிப்புகளை காணலாம். அவருக்கு பிடித்த காவியம் ராகவபாண்டவீயம், தெலுங்கில் எழுதப்பட்ட நூல். பதம் பிரிப்பதன் மூலம் ஒரே நூல் ராமாயணமாகவும், மகாபாரதமாகவும் படிக்கப்படும். அவரது ஆளுமை கிட்டத்திட்ட அப்படித்தான். தேவைப்பட்ட நேரத்திற்கு விதவிதமான அவதாரத்தை எடுத்துள்ளார்.
நரசிம்மராவ் மிகத்தேர்ந்த அரசியல்வாதி. பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து காரியங்களை சாதித்து கொண்டவர். நரியை போன்ற தந்திரம் உள்ளவர் என்கின்றது புத்தகம். நேரு குடும்பத்தின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பொருளாதர கொள்கையை அவர்கள் பெயரை வைத்தே முன்னெடுத்தவர், அதை மன்மோகனை வைத்து செய்ய வைத்து தன் பெயரில் எவ்வித பழியும் வராதபடி பார்த்து கொண்டவர். அதுவே பின்னாளில் மறக்கப்படவும் காரணம் என்கின்றார் வினய் சீதாபதி.
நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கையை பற்றிய ஒரு முழுமையான பார்வையை தருகின்றது. நரசிம்மராவ், திடீரென்று ஒரு நாள் காலை பிரதமராகிவிடவில்லை. அவரது அரசியல் வாழ்க்கை நேரு காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. ராமான்ந்த தீர்த்தரிடம் அரசியல் பயின்ற நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கலந்துதான் இருந்திருக்கின்றது. தெலுங்கானாவின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த ராவ், காங்கிரஸ்ஸில் இணைந்து மெதுவாக முன்னேறி ஆந்திராவின் முதல்வரானார். பின் கட்சியில் ஒதுக்கப்பட்டிருந்தவர் மீண்டும் இந்திராகாந்தியின் மந்திய அமைச்சரவையில் அமைச்சர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் முக்கிய இடத்திலிருந்தாலும் வயதின் காரணமாக சற்றி ஒதுக்கி வைக்கப்பட்டே இருந்திருக்கின்றார். ராஜீவ் காந்தியின் கனவுதிட்டமான, நவோதயா பள்ளி திட்ட வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றார். அதன் பின் பிரதமர் பதவி அதன் பின் முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டார்.
சீரழிந்து கிடந்த வெளியுறவு துறையையும் ஓரளவிற்கு மீட்டவர். இஸ்ரேலுடன் தூதரக தொடர்பு, அதே சமயம் யாசர் அராபத்துடன் சந்திப்பு. அமெரிக்க பயணம் முடித்த கையோடு ரஷ்ய பயணம் என்று முடிந்த வரை தராசை நேராக வைக்கவே முயன்றுள்ளார். பல வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து இந்தியாவில் முதலீடுகளை செய்யும் படி அழைத்துள்ளார். சரிந்து கிடந்த பொருளாதாரத்தை ஓரளவிற்கு நிமிர்த்தியது அவரின் சாதனைதான்.
நரசிம்மராவ் செய்த சத்தமில்லாத ஒரு சாதனை, அணுகுண்டு சோதனை. வாஜ்பாய் ஆட்சிகாலத்தில்தான் பொக்ரானில் சோதனை செய்யப்பட்டது என்றாலும், பணிகள் முழுவதும் நடந்தது நரசிம்மராவின் ஆட்சிகாலத்தில்தான் என்பது புதிய செய்தி. புத்தகத்தில் அடிக்குறிப்பில்லாமல் வரும் பகுதி இதுதான், காரணம் ரகசியமான பல விஷயங்களை சொல்பவர்களின் விபரங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சினைதான்.
நரசிம்மராவ் நேருவின் சோஷலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவராகவே ஆரம்பம் முதல் இருந்திருக்கின்றார். நில உச்சவரம்பு சட்டத்தை முழு மூச்சாக செயல்படுத்திவதில் தன் முழு வலிமையையும் பயன் படுத்தியிருக்கின்றார். அப்படியே அவருக்கான குழியையும் தோண்டிக் கொண்டார். முழுவது சிங்கமாக இருந்த நரசிம்மராவ், நரியாகவும், எலியாகவும் சமயங்களில் மாற வேண்டியதை உணர்ந்ததருணம் அது. அந்த அனுபவத்தை தனது பிரதமர் பதவி காலத்தில் பயன்படுத்தி ஒரு மைனாரிட்டி ஆட்சியை ஐந்து வருடம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றார்.
நரசிம்மராவைப் பற்றிய ஒரு முழு சித்திரத்தை தரும் நூலாக இது அமைந்திருக்க காரணம் நரசிம்மராவேதான். அவர் விட்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய ஆவணத்தொகுப்பு. அந்த தொகுப்பின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலான தகவல்களுக்கு ஆதரங்களை அடிக்குறிப்பாக தந்துள்ளார். பல சுவாரஸ்ய தகவல்களை தருகின்றது, புனைப் பெயரில் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அயல்நாட்டவர் நமது நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளார். புத்தக விரும்பி.ஏகப்பட்ட புத்தகங்கள், பல ஆசிரியர்களுடன் கடித தொடர்பில் இருந்திருக்கின்றார். மிக எளிதாக கற்பவர். கணிணி அறிமுகமான காலகட்டத்திலிருந்து அதை பயன்படுத்தி வந்திருக்கின்றார். நிரலிகள் எழுதும் அளவிற்கு அதில் கை தேர்ந்தவராக இருந்த்திருக்கின்றார். அனைத்தையும் விட சுவாரஸ்யமானது, அவர் குற்றாலத்தில் ஒரு ஆன்மீக மடத்தின் தலைவராக பொறுப்பேற்க மனதளவில் தயாராகி இருந்த நேரத்திலேயே பிரதமர் பதவி அவரை தேடி வந்துள்ளது.
நரசிம்மராவை காங்கிரஸ் ஒதுக்கி வைக்க முக்கியகாரணமாக நூலிலிருந்து அறிவது, அவர் நம் பாரம்பர்யம் மீது கொண்ட நம்பிக்கை, தன்னை ஒரு இந்துவாக, நமது கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவராக காட்டிக் கொண்டது. "இந்தியா ஒரு இந்து நாடு என்பதை நாம் என்றும் மறக்க கூடாது" என்று மணி சங்கர அய்யரிடம் கூறும் ராவ், சிறுபான்மை ஓட்டு வேட்டையாடும் காங்கிரஸ் கட்சி இவரை பலிகடா ஆக்கியதில் ஆச்சர்யமில்லை. பாபர் நினைவுக் கட்டிடத்தை இடித்த நிகழ்வின் முழுப் பழியையும் நரசிம்மராவின் தலையில் போட்டார் ராகுல். ஆனால் புத்தகம் அதை வெகு விரிவாக மறுக்கின்றது. அன்றைய அரசியல் நிலை, ஏன் ஆட்சியை கலைக்க முடியவில்லை, ராணுவம் அங்கிருந்தும் ஏன் உள்ளே செல்லவில்லை, கட்டிடத்தைக் காக்க நரசிம்மராவின் ரகசிய முயற்சிகள் என்று அவரின் மீதான் குற்றச்சாட்டை மறுக்கின்றது. அவரது புத்தகத்தை வெளியிட்டவர் அவரது நெருங்கிய நண்பர், வாஜ்பாய்.
நரசிம்மராவின் எதிர்மறை பக்கத்தைம் காட்டுகின்றது. அவருக்கு அவர் குடும்பத்திடம் இருந்த விலக்கம், லக்ஷ்மிகாந்தம்மாவுடனான தொடர்பு, கல்யாணி சங்கருடனான நட்பையும் கூறுகின்றது. அவரது அரசியல்வாழ்வை ஓரளவிற்கு ஆட்டிப்பார்த்தது லக்ஷ்மிகாந்தம்மாவுடனான தொடர்பு. நரசிம்மராவின் மீதான ஊழல் குற்றங்களை மேலோட்டமாக கூறிச்செல்கின்றது. அவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, "பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது", ஓரளவிற்கு அதை ஒத்துக் கொண்டு செல்கின்றது. ராஜீவ் இறந்த பின், தனக்கு வாய்ப்பு இருப்பதை அறிந்து, அந்த சந்தர்ப்பத்தை தெளிவாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அடுத்தவர்களை கைகாட்டி தப்பிப்பது, முடிவுகளை அடுத்தவர்களை எடுக்க வைப்பது என்று பல குறைகள் இருந்தாலும், தனக்கு சரி என்று பட்ட விஷயத்தை முழு முயற்சியுடன் நடத்தியிருக்கின்றார் என்பதை பல சந்தர்ப்பங்களில் காண முடிகின்றது.
அவர் மரணமடைந்த பின் நடந்த நிகழ்வுகள், அவர் மீது சோனியா குடும்பம் எவ்வளவு வெறுப்பை கொண்டிருந்தது என்பதை காட்டுகின்றது.
ஒரு சுவாரஸ்யமான பிரதமரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. நரசிம்மராவின் சுயசரிதம் என்பதைவிட, அவரது அரசியல் சரித்திரம் என்று இந்த நூலை கூறலாம். வெகுவிரிவாக நரசிம்மராவின் ஆளுமையை விவரித்துள்ளார்.
நரசிம்மராவைப் பற்றி ஆங்கிலத்தில் Half-Lion என்ற பெயரில், வினய் சீதாபதியால் எழுதப்பட்ட புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளவர் ஜே.ராம்கி. ரஜினி ராம்கி என்றும் பாடம்.
சரளமான மொழிபெயர்ப்பு, எந்த இடத்திலும் இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்று தோன்றவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக