14 மார்ச் 2018

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி

சுகாவின் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு பாட்டையா, சினிமா விரும்பிகளுக்கு நிரந்தர முதல்வர், பால் ஹனுமான் தள வாசகர்களுக்கு நவீன நளன், பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகங்களை படித்திருப்பவர்களுக்கு நல்ல எழுத்தாளர் என்று பலரால் பலவிதமாக அறியபடும் மணி, பாரதிமணி அவர்களின் புத்தகம். பல நேரங்களில்  பல மனிதர்கள் தொகுப்பில் வந்த கட்டுரைகளுடன் பல புதிய கட்டுரைகளையும் சேர்த்து இதுதான் எனது கடைசி புத்தகம் என்று வெளியிட்டுள்ளார். பலிக்காமல் போகக்கடவது......

ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு வேறுவிதமாக பரிச்சியமான பலரைப் பற்றிய தகவல்களை கூறுவதுடன் பாரதிமணி என்னும் ஒரு மகத்தான மனிதரைப்பற்றியும் நமக்கு கூறுகின்றது. முதலில் அவர் காட்டும் பிரபலமனிதர்களின் சித்திரங்கள் பல புதியவை, சிலரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள உதவும். நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஷேக் ஹசீனா, பிர்லா, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை என்று நீளுகின்றது. ஒவ்வொருவருடன் அவருடைய சந்திப்புகள் அனைத்தும் சுவாரஸ்யங்கள், அதைப்பற்றி எழுதி படிப்பவர்களின் அனுபவத்தை கெடுப்பதாயில்லை, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனிமனிதனாக அவரைப் பற்றி கொஞ்சம் கூறியிருந்தாலும் அவர் மீது ஒரு பெரு மதிப்பு வருகின்றது. ஒரே ஒரு கட்டுரை போதும், அவரது திருமணத்தைப் பற்றிய கட்டுரை. கநாசுவின் மகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார், திருமண செலவு அவருடையது. கடன் வாங்கி திருமணம். அதன் பின் அவருடைய பிரச்சினைகள், அவற்றை எதிர் கொண்டவிதம் அபாரம். அது போன்ற ஒரு துணிவு வரவேணும் என்றால் மனதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அவரது தொழிலைப் பற்றி நிறையவே கூறியிருக்கின்றார். கொஞ்சம் அசந்தால் சுழலில் இழுக்கும் இடத்தில் ஜாலியாக கடந்து வந்திருக்கின்றார்.


இப்புத்தகத்தின் மற்றுமொரு முக்கிய கோணம், நம் நாட்டி ஒரு காலகட்டத்தை பற்றிய சித்திரத்தை அறியலாம். பிர்லாவிடமிருந்து மாதாமாதம் பணம் வாங்கிய மந்திரிகள், கூச்சமின்றி பரிசுகளை கேட்டு வாங்கும் அதிகாரிகள், பணம் செய்யும் வேலைகள், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தும் தொழிலதிபர்கள், புதிய தலைமுறைகளுக்கு இவையெல்லாம் புதிது.

பாசுமதி அரிசியின் பின்னால் இருக்கும் கதை, செம்மீனுக்கு பரிசு கிடைத்த கதை, இந்தியன் ரயில்வேயை பற்றிய சுவாரஸ்யங்கள், சர்வபள்ளி ராதகிருஷ்ணனின் ஜொள்ளு, பல சுவாரஸ்யங்கள்.

மற்றுமொரு முக்கியமாக அவரை எனக்கு மிக நெருக்கமாக உணரச்செய்தது அவரது நாக்கின் நீளம். உணவு மீதான காதல், ருசியான உணவை உண்பதே பாவம் என்பது போன்று பலர் கூறுவார்கள், இல்லை எனக்கு எல்லாம் எப்படி இருந்தாலும் சரி என்று நன்றாக வக்கனையாக சாப்பிடுபவனை குற்ற உணர்வுகொள்ள வைப்பார்கள். பாரதிமணி, எனக்கு நாக்கு நாளு மொழம் என்று தைரியமாக கூறுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. நன்றாக ருசித்து சாப்பிடும் ஆளாள் மிக நன்றாக சமைக்கவும் முடியும், அதுவும் அவருக்கு வருகின்றது. 

புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது, ஒவ்வொரு கட்டுரையும் விறுவிறுப்பு. 

அவர் காட்டியிருக்கும் அந்த அரசியல் உலகம் கடலில் மூழ்கியிருக்கும் மலையின் ஒரு சிறிய நுனிதான் என்று யூகிக்க முடிகின்றது, முழு மலையும் வெளிவந்தால் படிப்பவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அவருக்கு...........

அவரது பல நேர்காணல்களையும் சேர்த்திருக்கின்றார்கள். படிக்க வேண்டிய வரிசையில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக