31 டிசம்பர் 2019

A Century Is Not Enought - Saurav Ganguly

Harsha: "Do you think Sachin will be more popular than you in that Kolkata Test match?"
Ganguly: "Yes, but only for those five days!"

படிக்கும் போதே அவரது குணம் தெரிகின்றது அல்லவா. தன்னம்பிக்கை. தன் மாநில மக்கள் தன்னை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கை. புத்தகம் முழுவதும் விரவிக் கிடப்பது அதுதான். முதல் மாதம் அணியின் கேப்டனாக இருந்தவர், அடுத்த மாதம்  அணியிலிருந்தே விலக்கப்படுவது எல்லாம் கனவில் நினைக்க முடியாத விஷயம், அதைத் தாண்டி எப்படி மீண்டு வந்தார் என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

கங்கூலியின் ஆரம்ப கிரிக்கெட் வாழ்வில் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. பலரை போன்ற நிதானமான முன்னேற்றம், சில பல சிறப்பான ஆட்டங்கள், பல மோசமான ஆட்டங்கள். அணியின் உள்ளே வெளியே என்று சென்று கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அணித்தலைவர் ஆன பின் வரும் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. 

அதுவரை இருந்த இந்திய அணி, மன்மோகன் சிங்கின் அரசாங்கம் மாதிரி. வெளிநாட்டுக்காரன் ரெண்டு கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவது. போராட்ட குணமற்ற ஒன்று.  கபில்தேவ் உண்டாக்கிய அணியின் அணுகுமுறை மாறி, உள்ளூர் குழி பிட்சுகளில் ஸ்பின்னை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது. சச்சினை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலை. சச்சினையும் அணித்தலைவராக ஆக்கி, அவர் ஆட்டத்தையும்  கெடுத்து வைத்திருந்தது. கங்கூலி அணித்தலைவரான பின் அவர் அணியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. அதை அவர் செய்ததன் விளைவுதான் உலகக் கோப்பை. 

தோனி, ஷேவாக், ஜாகிர்கான், ஹர்பஜன், யுவராஜ், கைஃப், பதான் என்று அவர் உருவாக்கியவர்கள் வரிசை பெரிது. தன்னுடைய தொடக்க ஆட்டக்கார இடத்தில் ஷேவாக்கை அனுப்பி, ஷேவாக்கை ஒரு தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக மாற்றியது கங்கூலி. ஜாகிர்க்கானை ஒன்றிரண்டு போட்டிகளிலே கணித்து, அணியில் சேர்த்து இந்திய அணி வேகப்பந்து வீச்சிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார். 

ஆஸ்திரேலியாவை இந்தியாவில் வைத்து புரட்டி எடுத்ததுதான் இந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனை. வெளிநாடுகளில் சென்றும் இந்திய அணி வெற்றி பெற முடியும் என்று ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் காட்டினார். அதுதான் அவரது பின்னாளைய பிரச்சினகளுக்கும் காரணமாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகின்றது. ஆஸ்திரேலியாவை வெல்ல க்ரேக் சாப்பலுடன் ஒரு வாரம் செலவு செய்து, ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு ஆடுகளத்தைப் பார்த்து, நீள, அகலம், வானிலை, காற்று என்று பலமான ஆராய்ச்சி செய்ததன் விளைவுதான், அந்த வெற்றி. சாப்பல் அதில் கடுப்பாகி, பின்னாளில் கங்கூலியை பழி வாங்கிவிட்டாரோ என்னவோ. சாப்பல் வேறு ஒரு புத்தகம் எழுதியுள்ளாராம். அதை எவன் படிப்பது. 

பல ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்கு (நம்புங்கள், விகடனில் நிஜமாகவே சிரிக்கும் படி நகைச்சுவை துணுக்குகள் ஒரு காலத்தில் வந்து கொண்டிருந்தன). பேட்ஸ்மேன் தனது மட்டையை வித்தியாசமாக வைத்துக் கொண்டு நிற்பார், "இது ஏதோ புது பரிசோதனை" என்று ஒருவர் கூறிக் கொண்டிருப்பார். அப்போதைய காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட்டில் நடந்து கொண்டிருந்த பரிசோதனைகளை அறியாதவர்களுக்கு அது புரியாது. பல விஷப்பரிட்சைகளை  செய்து கொண்டிருந்தார்கள், பேட்டிங் ஆர்டரை கண்டபடி கலைத்து போடுவதிலிருந்து குழுவிற்கு ஆட்களை எடுப்பது வரை பல கூத்துகள். காரணகர்த்தா க்ரேக் சேப்பல். கங்கூலிக்கும் இவருக்கும் நடந்த போர் பிரபலமானது.

சாப்பல் வந்தவுடன் செய்த முதல் வேலை கங்கூலியை வெளியே அனுப்பியது. இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, மறுபடியும் உள்ளே வந்து, மீண்டும் வெளியே சென்று, போராடி உள்ளே வருவதுமாக இருந்தவர் நம்பியது முழுக்க முழுக்க தன் திறமையை. வழக்கமாக புத்தகம் எழுதுபவர்கள் தன் சாதனைகளைப் பற்றி கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள், தன்னடக்கம். ஆனால் இதில் கங்கூலி அந்த போலி தன்னடக்கத்தை எல்லாம் காட்டவில்லை. குறிப்பிட்ட ஆட்டத்தில் என்னுடை சதம் வெற்றி பெற்றி வைத்தது, ஆட்ட நாயகன் விருது பெற்றது பற்றி எல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்கின்றார். அந்த அணுகுமுறைதான் அவரை மீண்டு வரச் செய்துள்ளது. 

ஐபிஎல் பற்றி அதிகமாகவே பேசியுள்ளார். ஐபில் எப்படி ஒரு விளையாட்டை வணிகமாக மாற்றுகின்றது. ஆட்டக்காரர்கள் மீது அணியில் உரிமையாளர்கள் தரும் அழுத்தம், கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஆளாக இருந்தாலும், ஐபிஎல் அணியில் அவர் ஒரு வேலைக்காரர் என்ற அளவுதான். சம்பள ஆள். "அன்றைய அணியில் விளையாடுபவர்களை, அணியின் உரிமையாளர்களுடன் பேசி முடிவு செய்தேன். இந்திய அணியில் கூட அதை செய்ததில்லை" என்று கூறுகின்றார். அந்தளவிற்குதான் அனைவருக்கும் மரியாதை.  பேருக்கு ஒருவரை அணியின் தலைவராக்கி, வெளியிலிருந்து அணியை வழிநடத்தும் பயிற்சியாளர், ஏலத்திலிருந்து எதைப் பற்றியும் கவலையின்றி வெளியேரும் உரிமையாளர் என்று ஐபிஎல்லின் மறுபக்கத்தை சொல்கின்றார்.

சாப்பல் பற்றி இவ்வளவு பேசியவர், ஒரு நாள் போட்டி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் காரணங்கள் பற்றியெல்லாம் அதிகம் பேசவில்லை. தோனி தலைமையேற்ற பின் பல வீரர்கள் வெளியேற்றப் பட்டனர். அது பெரிய சர்ச்சையானது, ஆனால் உலகப் கோப்பை வென்றதால் அது அப்படியே போனது. கங்கூலியும் அதைப் பற்றி அதிகம் பேசவில்லை.

படிக்கும் போது பல ஆட்டங்கள் நினைவில் வந்து சென்றன. ட்ராவிட்டும், லக்‌ஷ்மணும் ஒரு நாள் முழுக்க விளையாடி ஆஸ்திரேலியர்களை வெறுப்பேற்றியது, இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம், அங்கு பாலாஜி அடித்த சிக்ஸர்கள், டொராண்டோவில் நடந்த சகாரா கோப்பை, கங்கூலி அதில் எடுத்த விக்கெட்டுகள், ஷேவாக்கின் அதிரடி. 

கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக் கூடாதது.2 கருத்துகள்:

  1. எனக்கு கங்குலியை ரொம்பவும் பிடிக்கும்.  புத்தகம் படிக்கும் ஆவலிருக்கிறது.   ஆனால் சமீபத்தில் சாத்தியமில்லை.  கிண்டிலிலவசமா, காசா?!

    பதிலளிநீக்கு
  2. கிண்டிலில் கிடைக்கின்றது, அன்லிமிட்டடில் இல்லை. நான் வாங்கும் போது 99 ரூபாய், இப்போது 199. கிண்டிலில் படிப்பதே செளகர்யம்.

    பதிலளிநீக்கு