14 ஜனவரி 2020

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்

சீனாவில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.

தலைப்பை பார்த்தவுடன் எவ்வித பிம்பமும் கிடைக்காத நாவல்கள் பல உண்டு. அதில் இதுவு ஒன்று. ஆங்கிலத்தில் Wolf Totem என்ற பெயரில் வெளிவந்த நாவல். Totem என்பதை குலமரபு என்று கூகுள் மொழி பெயர்க்கின்றது. ஓரளவிற்கு அது சரியாக வருகின்றது. நாவலின் உள்ளேயும் அதையே பயன்படுத்தியிருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். குலச்சின்னம் என்றால் ஏதோ ஒருவர் ஒரு பெரிய பதாகையை பிடித்து கொண்டு போவது போல தோன்றுகின்றது. 

முதலில்  சில செய்திகளைப் பார்க்கலாம். 

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை கொல்ல முடிவு. ஒட்டகங்கள் அதிகமாக பெருகி, அங்கிர்ந்த நீர் நிலைகளை அனைத்தையும் காலி செய்வதால் அவற்றைக் கொல்ல முடிவு. ஒட்டகம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு அல்ல. வெளியிலிருந்து வந்தவை, இன்று அவை லட்ச்சக்கணக்கில் பெருகியுள்ளன, ரோகிங்கியாஸ் மாதிரி. 

வயலில் இருக்கும் பாம்புகளை அனைத்தையும் கொன்றதால், எலிகளின் அதிகமாகி பயிர்கள் அழிவு. 

சீனாவில் குருவிகளால் பயிர்களுக்கு சேதம் என்று மாவோ காலத்தில் அனைத்து குருவிகளும் கொல்லப்பட்டன, ஆனால் குருவிகள் பயிர்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் புழுக்களையும் சேர்த்து தின்கின்றன என்பதை அறிய கொஞ்சம் காலம் ஆனது, குருவிகளை விட குருவிகள் இல்லாததால் பிழைத்த  பூச்சிகள் அழித்த பயிர்கள் அதிகம். பின்னால் குருவிகளை மார்க்சியத்தின் பெயரால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.

இவை அனைத்தும் இயல்பான இயற்கை சமநிலையை மனிதன் மாற்ற முயன்றதன் விளைவு. இயற்கை தன் சமநிலையை எப்போது பேணிக் கொண்டிருக்கும். நமது முன்னோர்கள் அதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். அந்த சமநிலையை குலைக்கும் எவையும் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சீனாவின் மங்கோலியப் பகுதிகளில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகின்றது இந்த நாவல்.


இந்தியாவிற்குள் நுழைந்து சூறையாடிய பலரை வரலாறு படித்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். வந்தார்கள் வென்றார்கள், ரத்ததில் முளைத்த என் தேசம் போன்ற நூல்கள் அவர்களைப் பற்றி வெகு விரிவாக பேசுகின்றன. முகம்மது கஜினி, தைமூர் போன்றவர்கள் மிகப் பெரிய கொள்ளையர்கள் நமக்கு, ஆனால் அவர்கள் சொந்த நாட்டில் மாவீரர்களாக இருந்திருப்பார்கள். இவர்களை அனைவரையும் விட பயங்கரமான ஒருவன் , இந்தியாவிற்கு நுழையாமல் இருந்ததே பெரிய விஷயம் என்று பலர் கூறுவார்கள். அவன் ஜெங்கிஸ்கான். மங்கோலிய இனத்தவன், மந்திய ஆசியா முழுவதும் சூறாவளியாக திரிந்தவன், இந்தியாவிற்கு நுழையாமல் இருந்தது அக்கால அரசர்களின் நல்ல காலம்தான். நுழைந்த இடமெல்லாம் வெற்றி. அவனின் வெற்றிக்கு காரணம், அவனின் குல மரபு. நாடோடி வேட்டைக்காரர்கள். 

ஒரு சிறந்த வேட்டைக்காரன் என்பவன் எப்போது பதுங்க வேண்டும், தாக்க வேண்டும், எப்படி வழியை மூட வேண்டும், எங்கு நுழைய வேண்டும் என்று துல்லியமாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதையே அவன் போரில் பயன்படுத்தினால், மிகப் பெரிய வெற்றி பெறுவான். வேட்டைக்காரர்கள் தங்கள் யுக்திகளை மிருகங்களிடமிருந்துதான் கற்றிருப்பார்கள். சிங்கம், புலி போன்றவை தனியாக சென்று வேட்டையாடுபவை. பெரிய போர்களுக்கு அவற்றின் யுக்தி பயன்படுவதில்லை. ஆனால் ஓநாய்கள் அப்படியல்ல, கூட்டமாக சென்று வேட்டையாடுபவை. ஒரு போரை நடத்துபவை. ஜெங்கிஸ்க்கானின் போர் முறைகள் ஓநாய்களிடம் இருந்து பெறப்பட்டவை என்பதாக கூறுகின்றது நாவல். 

மாவோவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல கோமாளித்தனங்கள், கொடூரங்களைப் பற்றி பஞ்சம் படுகொலை பேரழிவு நூலில் காணலாம், அதில் ஒன்று, கலாச்சாரப் புரட்சி. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் பழைய கால பழக்க வழக்கங்களை அழித்தார்கள். பல சடங்குகள், நூல்கள் அழிக்கப்பட்டன. வீடு வீடாக புகுந்து அனைத்தையும் அழித்தார்கள். மக்கள் பந்தாடப்பட்டார்கள். மாணவர்களை வலுக்கட்டாயமாக வேலை முகாமிற்கு அனுப்பினார்கள். அப்படி மேய்ச்சல் நிலத்திற்கு ஆடு மேய்க்க அனுப்பப்பட்ட மாணவர்கள், அங்கிருக்கும் சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக கலக்கின்றனர். 

மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலப்பகுதி நாடோடிகள் ஓநாய் குலமரபை சார்ந்தவர்கள். ஓநாய்க் குலமரபினர்  டெஞ்ஞரை நம்புவர்கள் (டெஞ்ஞர் அவர்களின் கடவுள், வானம்). மேய்ச்சல் நிலப் பகுதியை பாதுகாப்பது டெஞ்ஞர். அங்கிருக்கும் அனைத்து உயிரனங்களும் டெஞ்ஞரின் அன்பை பெற்றவை, புல் முதல் ஓநாய் வரை. இந்த நாடோடி மக்களிடம் வந்து தங்கியிருக்கும் ஜான் சென் என்னும் சீன மாணவனின் அனுபவமே இந்நாவல். என்னும் முதியவர், அந்த நாடோடிகளின் தலைவர், அவரிடம் நெருங்கி பழகும் ஜான் சென், ஓநாய்களைப் பற்றி அறிந்து கொண்டு, அவனும் கிட்டத்திட்ட அந்த நாடோடிகளின் மனநிலையை வந்தடைகின்றான். ஒரு ஓநாயையும் எடுத்து வளர்த்து, அதை அறிந்து கொள்ள முயல்கின்றான்.

ஓநாய்கள் அந்த மேய்ச்சல் நிலத்தின் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேய்ச்சல் நிலத்தில் முக்கிய  உயிர், புல். ஆடு மாடுகளுக்கு ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு மாதிரியான் புற்கள் தேவை. பிரசவிக்கும் காலம், குளிர் காலம், கோடைக்காலம் என்று காலநிலையை பொறுத்து அவர்கள் இடம் மாறுகின்றார்கள். அந்த மாற்றம், ஒரே இடம் விலங்குகளால் முற்றிலும் மேயப்படாமல் தடுக்கின்றது. புற்களை முற்றிலும் மேய்ந்தால், அது அழியும். மீண்டும் துளிர்க்காது, பின்னர் பல காலத்திற்கும் அந்நிலம் பாலை நிலமாகும். மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளை கட்டுப்படுத்த முடியும், ஆனால் ஆயிரக்கணக்கில் வரும் மான்கள், புற்களை பதுக்கும் எலிகள், வளை தோண்டி நாசமாக்கும் முயல்கள், ஏகப்பட்ட குட்டிகளை பெறும் மர்மோடுகள் அனைத்தும் மேய்ச்சல் நிலத்தை அழிக்கக் கூடியவை. ஓநாய்களே அவற்றை உண்டு கட்டுப்படுத்திகின்றன. மனிதர்கள் ஓநாய்கள் அதிகமாகும் போது அவற்றை கொன்று தங்களை காத்து கொள்கின்றனர் ஏனென்றால் ஓநாய்கள், ஆடு மாடுகளையும் கொல்லும்.

ஓநாய்களும் சரி அங்குள்ள நாடோடிகளும் சரி எவற்றையும் முழுவதும் அழிப்பதில்லை. மான்களை கொல்லும் ஓநாய்கள் சிலவற்றை தப்பிக்க விடுகின்றன. நாடோடிகளும் அனைத்தையும் முழுவதும் அழிப்பதில்லை. அடுத்த வருடம் என்ன செய்வது என்ற காரணம். இவை அனைத்தும் சீனாவின் புதிய ஆட்சியாளர்களால் மாறுகின்றது.

அடக்கு முறை ஆட்சி, கண்மூடித்தனமாக உற்பத்தியை உயர்த்த சொல்கின்றது. ஆனால் தரும் ஊதியம் குறைவு. விளைவாக அவர்கள் மான்களை வேட்டையாடத் தொடங்குகின்றார்கள். மான்கள் இல்லாத போது ஓநாய்கள் மனிதர்கள் வளர்க்கும் குதிரைகள் மீதும், ஆடுகள் மீதும் பாய்கின்றன. அதனால் ஓநாய்களையு கொல்கின்றனர். ஓநாய்கள் இல்லாத ராஜ்ஜியத்தில் எலிகள் ஆளத் தொடங்குகின்றன. விரைவில் மேய்ச்சல் நிலம் மறைந்து, விவசாய நிலம் உருவாகி, அரைப்பாலை நிலமாகின்றது.

விதவிதமான வேட்டைக்காட்சிகள், ஓநாய்கள் மான்கூட்டத்தை வேட்டையாடுவது, ஓநாய்களை மனிதர்கள் வேட்டையாடுவது, ஓநாய்கள் குதிரை மந்தை மீது தொடுக்கும் போர், ஓநாய்களின் தந்திரங்கள், அதிலிருந்து கற்கும் மனிதர்கள். 

பில்ஜி, ஜான் சென் இவர்களுக்கு அடுத்து கவர்வது குட்டி ஓநாயும் எர்லாங்க் என்னும் நாயும். குட்டியிலிருந்து வளர்க்கப்பட்டாலும் ஓநாய் ஓநாயாகத்தான் வாழும். அதன் இறுதிப்பகுதி நெருங்கும் போது அதன் மீது ஒரு மரியாதை வருகின்றது.

நாவலில் அக்கால சீன அடக்கு முறை பற்றி மெலிதான கோடு காட்டப்படுகின்றது. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் நடக்கும் அழிவுகள், எவரையும் வர்க்க எதிரி என்று முத்திரை குத்தும் அபாயம், செவ்விலக்கியங்களை மறைத்து வைத்து படிக்க வேண்டிய அளவிற்கான அடக்குமுறை என்று ஊடாக செய்திகள் சொல்லப்படுகின்றன.

குறைகள் என்று பார்த்தால், வேட்டை சமூகத்தை மிக அதிகமாக போற்றுவது போல உள்ளது. விவசாயிகளை இரண்டாம் தரத்தவர்களாக சித்தரிக்கும் காட்சிகள் பல உண்டு. விவசாயிகளை ஆடுகள் போலவும், நாடோடி வேட்டை சமூகத்தவர்களை ஓநாய்கள் போலவும் சித்தரிக்கின்றார் ஆசிரியர். காலமாற்றம் நிகழும் போது இவை தவிர்க்க முடியாதவை என்ற எண்ணமும் வருகின்றது.

மொழி பெயர்ப்பு எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. இயல்பான நடையில் இருக்கின்றது. வேகமாக படிக்கவும் முடிகின்றது. 

கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக