28 பிப்ரவரி 2020

யதி - பா. ராகவன்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு காணொளி பலரால பகிரப்பட்டு வந்தது. இமயமலையில் ஒரு சன்னியாசி, சிறிய கோவணம் மட்டும் அணிந்து கொண்டு உறை பனியில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றார். பனியில் அமர்ந்து அவரது நித்யகர்மாவை முடித்து விட்டு செல்கின்றார். இன்னொரு காணொளியில் அதே இமயச்சாரலில் குளிர்ந்த நீரில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கின்றார் மற்றொரு சன்னியாசி. 

இதைப் பார்க்கும் மேலை நாட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.  நமக்கு நம்ப கடினமான விஷயம் அல்ல, இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் வாழும் நாடு இது. இந்திய வாழ்க்கை முறையில் துறவறம் என்பது மிகவும் இயல்பானது. பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வாழ்க்கை படிநிலைகளை முன்னோர்கள் வகுத்து வாழ்ந்து வந்தனர். சிலருக்கு துறவறமே முழு வாழ்க்கை முறையாகவும் போகலாம்.

துறவிகளைப் பற்றிய கதைகளை ஆதிகாவியத்திலிருந்து நாம் படித்து வருகின்றோம். சித்தர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள். ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், யோக சாதகர்கள், காவிய ஆசிரியர்கள், ஜாபாலி, சார்வாகர் போன்ற நாத்திகர்கள், மருத்துவத்தை அறிந்த சித்தர்கள் என்று பல வகை துறவிகள். துறவறம் என்றாலும் அவர்களாலும் முழுவதும் துறந்து செல்ல முடியாது, அவர்களுக்கும் சில கடமைகள் இருக்கலாம். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், விவேகானந்தர், அரவிந்தர்  போன்ற துறவிகள் அனைத்தையும் துறந்து சென்றுவிடவில்லை. காஞ்சி பெரியவர் ஒரு மடத்தின் தலைவர், அரவிந்தர் அரசியல் தொடர்புடையவர், விவேகானந்தர் அமெரிக்கா வரை சென்று பேசினார். ஏன் துறவிகள் என்ற வார்த்தை என்றால்,  செய்யும் அனைத்தையும் பற்றின்றி ஒரு கடமையாக செய்ததால் அவர்கள் துறவிகள்.





பாரதத்தின் பெருமையே இந்த ஞானிகள், கர்ம பூமி, ஞான பூமி, பக்தியும் குறைவில்லாது இருக்கின்றது. ஆபிரகாமிய மதங்கள் உலகின் பல மதங்களை கபளீகரம் செய்து பரவிய நிலையில், பாரதம் மட்டும் இன்னும் தன் தர்மத்தை காப்பாற்றி கொண்டு வருவதற்கு காரணம் இவர்கள்தான்.  பெளத்தமும், சமணமும் பரவி, அது மக்களின் செயலூக்கத்தை குறைத்த போது ஆதி சங்கரர் வந்தார், தென்னகம் முழுவதும் முகலாயர் ஆட்சி பரவிய பொழுது, வித்யாரண்யர் ஹக்கர், புக்கர் மூலம் இந்து மதத்தை காத்தார், ராமதாசர் சிவாஜி மூலம் வடஇந்தியாவில் இந்து எழுச்சியை உண்டாக்கினார். 

யதி இது போன்று பல துறவிகளைப் பற்றியது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டைத் துறந்து செல்கின்றார்கள். ஒரு சாமியார் பெயர் வினீத் என்றால் கேட்க ஒரு மாதிரியாக இருக்கின்றதல்லவா, இதில் வரும் நால்வரின் பெயர், விஜய், வினீத், வினோத், விமல். நால்வரும் ஒவ்வொரு வழியில் செல்கின்றனர். ஒருவன் யோகத்தின் வழி செல்பவன், மற்றொருவன் தியானம், சடங்குகள் வழி செல்ல முயன்றவன், மற்றொருவன் பக்தி மார்க்கம். மீதமிருப்பவன் நாத்திக ஞானி.   ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சென்று, இறுதியில் தாயின் மரணத்திற்கு வீட்டை வந்தடைகின்றார்கள். கதை சுருக்கம். 

நாத்திக துறவி சொல்வதாக கதை ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு சகோதரனைப் பற்றிய கதைகளாக  மெல்ல விரிந்து செல்கின்றது. பல யோகிகள், சித்தர்களின் சின்ன சின்ன கதைகளை அனைத்தையும் கோர்த்து ஒரு நாவலாக விரித்துள்ளார். வாழைப்பழத்தில் சிலையை எடுக்கும் அப்பரண்டீஸ் சித்தரிலிருந்து, நாய் உடலுக்குள் புகுந்து பேசும் சித்தர் வரை, பல விதமான யதிகளின் கதைகள். 

பாரா, கல்கியில் பணியாற்றி கொண்டிருந்த போது கல்கியில் அவர் எழுதிய தொடர் ஒன்று வந்தது அலை உறங்கும் கடல். எனக்கு ஓரளவிற்கு பிடித்திருந்தது. பின்னாளில் அவர் எழுதிய அரசியல் தொடர்கள் பிரபலமானவை. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம், மாயவலை, புனைவு, அபுனைவு இரண்டிற்கும் இரண்டு விதமான எழுத்து நடையை வைத்துள்ளார். மாயவலை படித்த ஜோரில் இதைப் படித்தால் அதே ஆசிரியர் எழுதியதா என்று தோன்றும். 

மைண்ட் மேப் என்று ஒன்று உண்டு, மூளையின் சிந்தனைகளை படமாக வரைவது. ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்து சென்று கொண்டேயிருக்கு. அது போல, கதையும் செல்கின்றது. சட்டீஸ்கரிலிருந்து, மூணாறு, அங்கிருந்து மடிக்கேரி, திருவிடந்தை, மீண்டும் மடிக்கேரி, தலைக்காவேரி, மீண்டும் சட்டீஸ்கர் என்று கதைகள் கிளைத்துக் கொண்டே இருக்கின்றன. இதவகை கதை சொல்லலுக்கு முதலில் கொஞ்சம் பழக வேண்டும். அதன் பின்னர் பழகிவிடும் சம்பவ கோர்வைகள். துறவிகளை பற்றிய கதை என்பதால் விஷ்ணுபுரம் மாதிரி ஞானசபை விவாதங்களை எல்லாம் எதிர்ப்பார்க்க வேண்டாம். அவையெல்லாம் இல்லை. 

தி.ஜா வின் ஒரு நாவல், அன்பே ஆரமுதே, ஒரு துறவியைப் பற்றிய கதை, இறுதியில் அவர் துறவியா அல்லது அவரை நினைத்து வாழ்ந்து வந்த பெண் துறவியா என்பது போல முடியும். இதுவும் அது போன்ற கேள்வியை இறுதியில் எழுப்புகின்றது. ஆனால் அந்த கேள்வி இயல்பாக எழ வேண்டும், இதில் அதை இலக்காக வைத்தே நாவல் புனைய்ப்பட்டுள்ளது என்ற எண்ணம் வருகின்றது. இறுதிப்பகுதியில் வைத்த திருப்பத்திற்கான தர்க்கம் இல்லை. 

ஸ்பாய்லர்தான் என்றாலும் பரவாயில்லை. நால்வரின் தாயார், அவர்களின் உண்மையான தாயார் இல்லை என்பது போன்ற ஒன்றை கட்டமைக்கின்றார். அது வரை நன்றாக வந்த நாவல், பட்டென்று விழுகின்றது. திருமணமான புதிதில் தன் கணவரை மற்றொரு பெண்ணுடனும் நான்கு குழந்தைகளுடனும் காண்பதாக காட்சி வருகின்றது. பின்னர் அந்த  நால்வரையும் தன் குழந்தைகளாக வளர்ப்பதாகவும், அது யாருக்கும் தெரியாது என்றும் வருவதும் நம்ப முடியவில்லை. குழந்தைகளின் வயது வித்தியாசம் இருக்காதா? முதல் குழந்தைக்கு நான்கு வயதாவது இருக்காது. 

கதையில் காலக்குழப்பம், தர்க்க மீறல்கள் எல்லாம் அங்கங்கு கிடக்கின்றது. ஹைதரபாத் சமஸ்தானம் என்று வருகின்றது, அப்படி என்றால் 50கள், முதல் அண்ணன் ஓடும் போது சஞ்சய் காந்தி இறக்கின்றார் 80கள்.   கதை சொல்லி ஓடிப்போகும் காலம் 90, பத்துவருடம் அலைந்து பின்னால் தன் குருவை காண்கின்றார் 2000. ஆனால் 80களின் இறுதியில் தலைக்காவேரி செல்லும் ஜெயேந்திரரை காண்கின்றார். கதை நடக்கும் காலத்தில் முதலில் ஓடிப் போன அவர் வயது 50க்கும் மேல். ஒரு வேளை பேரலல் யுனிவர்ஸில் கதை நடக்கின்றதோ என்னவோ. குழந்தைகள் பிறந்தது யாருக்கும் தெரியாது என்று ஒரு பக்கத்தில், பிறந்தவுடன் இந்த குழந்தை தங்க மாட்டான் என்று பட்டாச்சார்யார் சொன்னார் என்று ஒரு பக்கத்தில். இறுதியில் அந்த அம்மா ஒரு துறவி என்று காட்ட செய்த திடீர் திருப்பம், உதை உதை என்று உதைக்கின்றது. எதையாவது விட்டு விட்டு படித்துவிட்டேனோ என்ன எழவோ. இறுதி நெருங்க நெருங்க கதை எங்கங்கோ அல்லாடுகின்றது. தினமணியில் தொடராக வந்ததால், இறுதியில் வரும் திடீர் திருப்பங்கள் வேறு. 

இது போன்ற கடந்த காலகட்டத்தில் எழுதும்போது ஒரு வசதி, பாத்திரங்களுக்கு நாம் ஒரு ஞான திருஷ்டியை தந்துவிடலாம். விட்டால் காந்தி மோடி என்று ஒருவர் பிரதமாராவர் என்று சொன்னார் என்று ஒரு வரியை அடித்துவிடலாம். ஆனால் அந்த இடத்தில் நாவலின் ஒழுங்கு அடிபட்டு போகின்றது. இதிலும் அது போன்று பல வந்து எரிச்சலூட்டுகின்றது. காஞ்சி ஜெயேந்திரர் வருகின்றார். அவர் கொலைப்பழியில் மாட்டுவார் என்று ஒரு பாத்திரம் சொல்லும் போது பாத்திரம் தரை தட்டி போகின்றது. பெங்களூரில் இஸ்கானைப் பற்றிய ஆரூடம், தேவகெளடா பற்றிய ஜோசியம் என்று பல ஞான திருஷ்டிகள். 

பல பாத்திரங்கள் பேலியோ டயட்டில் இருக்கின்றன. நல்லவேளை நியாண்டர் செல்வனை ஒரு பாத்திரமாக்கவில்லை என்று மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

பாராவின் பூனைக்கதையை வாங்கி பல முறை முயன்றும் படிக்க முடியவில்லை, நாவல் ஒவ்வொரு முறையும் வெளியே தூக்கி போடுகின்றது, இறவானும் அதை செய்கின்றது. நல்லவேளை யதியில் அது இல்லை, இரண்டு மூன்று பக்கங்களில் கதை ஆரம்பித்துவிடுவதால் தப்பித்தேன். மூன்று நாவல்களும், தன்மை ஒருமையில் ஆரம்பித்து பேசிக் கொண்டே இருப்பதுதான் கதையோடு ஒன்ற விடாமல் தடுக்கின்றது. சும்மா ஒருவன் தனக்குதானே புலம்புவதை எவ்வளவுதான் படிப்பது. பூனைக்கதையும், இறவானும் அதைத்தான் செய்கின்றது. என்றாவது அதைத்தாண்டி படித்தால் எழுதலாம். 

படித்து முடித்துவிட்டு எங்காவது  ஒரு பரட்டைத்தலை பிச்சைக்காரனைப் பார்த்தால் மரியாதையாக இரண்டு இட்லி வாங்கித்தர தோன்றும். அதீதமாக இறங்கிப் படித்திருந்தால், அவர் காலில் விழுந்து எழுந்திருக்க தோன்றலாம், கதையோடு ஒன்றி, இரண்டர கலந்துவிட்டால் அவர் பின்னாலே போகும் அபாயம் இருக்கின்றது. 

நாவல் என்பதை விட  தொகுக்கப்பட்ட தொடர் கதை அல்லது தொடர்கதைகளுக்குரிய பலவீனங்கள் கொண்ட நாவல். 

கிண்டிலில் கிடைக்கின்றது. அன்லிமிட்டடில் எல்லாம் தர முடியாது, என்றாவது சலுகை விலையில் கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார். காத்திருந்து வாங்கி படிக்கவும். தொடரை படித்து பலரை  மதிப்புரை எழுதக் கேட்டிருந்தார், அதில் சிறந்ததை முன்னுரையாக சேர்த்திருக்கின்றார்.  மதிப்புரைகள் அனைத்தும் தனிநூலாக கிடைக்கின்றது. கதை புரியாதவர்கள் அதைப் படித்து இன்னும் தெளிவாக குழம்பிக் கொள்ளலாம்.

2 கருத்துகள்:

  1. கடைசி வரியும், கடைசியிலிருந்து மூன்றாவது பாராவும் = இரண்டையும் ரசித்தேன்.  

    உங்கள் ஆரம்ப பாராக்கள், 'பரவாயில்லை, புத்தகம் கிடைத்தால் படிக்கலாம் போலிருக்கே' என்ற எண்ணம் ஏற்படும்போதே தொடரும் பாராக்கள், 'வேணாண்டா சாமி ரிஸ்க்கு' என்றும் எண்ண வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
  2. படிக்கலாம். நன்றாகத்தான் இருக்கின்றது. காலக்கணக்குதான் பலமாக உதைக்கின்றது.

    பதிலளிநீக்கு