04 ஜனவரி 2020

கரும்புனல் - ராம் சுரேஷ்

தமிழில் வெளி மாநிலங்களை அல்லது வெளி நாட்டை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல்கள் மிகக்குறைவு. துப்பறியும் நாவல்கள், பயணநூல்கள் எல்லாம் கணக்கில் கிடையாது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, ஆதவன் போன்றவர்கள் டெல்லி, பெங்களூரை வைத்து பல கதைகள் எழுதியிருந்தாலும், அந்த கதைகளை மதுரைக்கோ அல்லது சுஜாதா பாணியில் சொல்வதானால் கருத்தாங்குடிக்கோ மாற்றினாலும் ஒன்றும் கெட்டுவிடாது. 

புயலிலே ஒரு தோணி மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனிஷியாவை நமக்கு கண்முன் காட்டினாலும், அங்கு இருக்கும் நம் மக்களின் பிரச்சினைதான் பேசப்பட்டது, இந்தோனேஷிய சுதந்திரப் போராட்டம்,மலேஷிய புரட்சிக்காரர்கள் பற்றி இருந்தாலும் அது ஒப்பீடளவில்  குறைவே. 

முழுக்க முழுக்க ஒரு பகுதியின் பிரச்சினையை மையமாக  கொண்டு வந்த முதல் நாவல் கலங்கிய நதி (இங்கு முதலாமிடம், இரண்டாமிடம் அனைத்தும் நான் படித்த அளவில்தான்) அது அஸ்ஸாம் மக்களின் அடிப்படைப் பிரச்சினையை சிறப்பாக பேசியது. இன்று CAA, NRC க்கு போராடும் கூட்டம் படிக்க வேண்டிய நூல்.

அதன்பின் ஒரு பிராந்தியத்தின் பிரிச்சினையை மிகச்சிறப்பாக பேசுகின்றது இந்த நாவல். அன்றைய பீகார், இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிண்ணனியில் அமைந்த நாவல். ராம் சுரேஷ் எழுதியுள்ளார். பினாத்தல் சுரேஷ் என்று பிரபலமானவர். ஹரன்பிரசன்னா இந்நூலைப் பற்றி பகிர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் பகிர்ந்திருந்ததை நம்பி ஒளிர்நிழல் என்னும் நாவலை வாங்கி நொந்து போயிருந்தேன். மிகச்சிறிய புத்தகம், இன்றுவரை அதை படிக்க என்னால் முடியவில்லை. இதுவேறு, கரும்புனல் என்ற தலைப்பு. பயந்து கொண்டே ஆரம்பித்தேன், ஆனால் முதல் அந்தியாயத்திலிருந்தே புத்தகம் பிடித்து உள்ளே இழுத்து விட்டது. 

கோல் இந்தியா என்னும் நிறுவனத்தின்  வழக்கறிஞர் சந்திரசேகரன், இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஒரு நில ஆர்ஜிதத்திற்கு செல்கின்றார். அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் நாவல். 

கதை முன்னால் பின்னால் போவதில்லை. சீரான நேர்கோடில் சென்று முடிகின்றது. முதல் அத்தியாயத்தில் வரும் பேருந்து நிலைய கூரை மீது இருக்கும் ஒரு பெரிய கல்லைப் பற்றிய வர்ணனை வருகின்றது, அது படிக்கும் போது சாதரணமாக இருந்தாலும் பின்னால் வரும் சம்பவங்கள் அந்த கல் எப்படி அங்கு போயிருக்கும் என்று உணர்த்தும்  போது வரும் மெல்லிய அதிர்ச்சி நாவல் முழுக்க செல்கின்றது. கொலை என்பது எவ்வளவு சர்வசாதரணமான விஷயமாகின்றது. அதிகாரிகள் கொலை, கலவரவங்களை எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்று மெலிதான் அதிர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கின்றது. கோடிட்ட இடங்களை அங்கங்கு நிரப்பிக் கொள்ளவேண்டும்.


வடஇந்தியாவில் ஊறிக்கிடக்கும் ஜாதி உணர்வு. அதுதான் நாவலின் அடிப்படை. மெஷினை கூட வேறு யாராவது தொட்டிருப்பார்களா என்று யோசிக்கும் ஆசாமிகள் இருக்கின்றார்கள் வாழும் உலகில் லாலு பிரசாத் யாதவ் ஜெயிப்பதில் ஆச்சர்யம் என்ன. ஜார்க்கண்ட் பெரும்பான்மை பழங்குடியினர், ஜாதியும் ஊறி போனது. கடந்த மாதம் நடந்த தேர்தலில் பாஜக தன் ஆட்சியை இழந்ததற்கும் காரணம் இதுதான். ஐம்பது வருடங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்த பெரிய சாதனைகளில் ஒன்று. 

1995ல் நடக்கும் கதை. இன்றும் பெரிதாக மாற்றமில்லை, பெரும்பான்மை ஜாதியை சேராத ஆசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதே ஒரு முன்னேற்றம்தான். முன்னுரையில் தமிழர்களுக்கு இந்த ஜாதி வெறி கொஞ்சம் அதிர்ச்சி என்பது போல சொல்லப்பட்டிருந்தது. ஒரு மண்ணுமில்லை. 1990களின் இறுதிவரை வரை தமிழகத்திலும் ஜாதிக்கலவரங்களுக்கு பஞ்சமில்லை. 90களின் இறுதியில் பள்ளியில் படிக்கும் போது பல நாட்கள் ஜாதிக்கலவரத்தில் பஸ்ஸை நிறுத்த, லாரி, வேன் மீது ஏறிச் சென்றிருக்கின்றோம். இன்றும் ஜாதி பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டவர்கள் நாகரீகத்தில் முற்றியவர்கள், அதனால் கொஞ்சம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஜார்க்கண்ட்டில் அது கிடையாது போல, வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றார்கள். தனியாக சிறிய நிறுவனங்களுக்கு மென்பொருள்கள் தயாரித்து தரும் ஒருவர் சொன்னது படி, இன்றும் தென் தமிழகதில் ஜாதி பார்த்துதான் இது போன்ற ஆர்டர்களைத் தருகின்றனர். இந்தியா முழுவதும் ஒரே நிலைதான்

நில ஆர்ஜிதம் என்பது, மக்களிடம் இருந்து நிலத்தை அரசு பெற்று கொண்டு அவர்களுக்கு பணம் தர வேண்டியது. அரசு நினைத்தால் அவர்களுக்கு வேண்டிய பணத்தையும், வேண்டிய நிலத்தையும் தரமுடியும். ஆனால், அதற்கு அதிகாரிகள் மனது வைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் மக்களை குழப்பி, அரசையும் மக்களையும் மோதவிட்டு, நடுவில் அவர்கள் பணத்தை அடித்துக் கொண்டு செல்லலாம். மக்கள் அரசையும், அரசு மக்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க, நடுவில் இவர்கள் கொழுத்துக் கொண்டிருக்கலாம்.  அது மாதிரியான  ஒரு ஊழல் எப்படி நடக்கின்றது, அதன் கண்ணிகள் எப்படி பின்னப்படுகின்றது, எவ்வளவு திட்டமிடலுடன் நடக்கின்றது என்று படிக்கும் போது மோடிக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை என்று தோன்றுகின்றது. இந்நாவல் காட்டியிருப்பது சிறிய நுனிதான். நிறைய எழுதினால் எழுதியவர் உள்ளே செல்ல வேண்டியிருக்கும்.

நிலக்கரி சுரங்கங்கள் பற்றிய் வர்ணனைகள் பிரமாதம். அதோடு அரசு இயந்திரத்தின் அசுர பலத்தையும் உணர வைக்கின்றது.

இறுதிப் பகுதி நெருக்கும் போது கதை விறு விறு வென்று பறக்கின்றது. அச்சுப் புத்தகமாக இருந்தால் கடைசி பக்கத்தை கண்டிப்பாக முதலில் சென்று படித்திருப்பேன், கிண்டிலில் அது கொஞ்சம் நேரம் எடுக்கும், தடவ வேண்டும். அதற்கு படித்தே விடலாம் என்று படித்து முடித்துவிட்டேன்.

வெகுநாட்கள் கழித்து ஒரே மூச்சில் படித்து முடித்த நாவல் இதுதான். சும்மா படித்து பார்ப்போம் என்று மாலையில் ஆரம்பித்து, நடு இரவு வரை படிக்க வைத்துவிட்டது. இயல்பான எழுத்து நடை. சின்ன சின்ன வர்ணனைகள், பெரும்பாலும் உரையாடல்களிலே செல்வதால் படிப்பதற்கு சுலபமாகின்றது. அந்த சின்ன சின்ன வர்ணனைகளே சம்பவங்களை, நடக்கும் இடத்தை கற்பனை செய்ய வைக்கின்றது.

இறுதிப்பகுதியில் கொஞ்சம் குழப்பமாவது போல தோன்றுகின்றது. காரணம், கிராமம், சுரங்கம், ஹாஸ்டல் என்று தனித்தனியாக மனதில் விரிவது ஒன்றாக இணைந்து ஒரு சித்திரத்தை தருவதில்லை. அதுதான் இறுதியில் கதை எல்லா இடங்களுக்கும் செல்லும் போது கொஞ்சம் குழப்புகின்றது. இருந்தாலும் பெரிய குறையல்ல. பெரிய குறை என்று கருதுவது, இதில் வரும் பெண் பாத்திரம்தன். முதல் வரியிலேயே தெரிந்து விடுகின்றது, காதல் ட்ராக் என்று. அதுவும் அந்த பெண் ஜார்க்கண்டிலிருந்து கோயம்பத்தூர் வந்து படித்திருப்பது எல்லாம் கொஞ்சம் யதார்த்ததிலிருந்து காலைப் பிடித்து இழுக்கின்றது. அந்த ட்ராக் இல்லமலே நாவல் பிரமாதமாக இருந்திருக்கும்.

ராம்  சுரேஷ், எலுமிச்சை, அல்வா என்று சில புத்தகங்களை எழுதியுள்ளார். எலுமிச்சை கல்கியில் பரிசு பெற்ற குறு நாவல்.  அல்வா, இப்போது கொஞ்சம் படித்துப் பார்த்தேன், முதலில் அதைப் படிந்திருந்தால் இந்நாவல் பக்கம் வந்திருக்க மட்டேன், நல்லவேளை.

தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. 

கண்டிப்பாக படியுங்கள். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது. 




1 கருத்து:

  1. //முதலில் அதைப் படிந்திருந்தால் இந்நாவல் பக்கம் வந்திருக்க மட்டேன், நல்லவேளை.//

    ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு