09 மார்ச் 2020

இறவான் - பாரா

யதிக்கு பின்னால் எழுதப்பட்ட நாவல். யதியின் ஹேங்க் ஓவர் என்று சொல்லலாம். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று பொதுவாக அனைவராலும் கூறப்படுகின்றது. நூற்றாண்டிற்கு முன்னால் இசைக்கப்பட்ட ஹீப்ரூ மொழி இசை ஒருவனால் வாசிக்க முடிகின்றது, சிம்போனியை ஒரு நாற்பது பக்க நோட்டில் எழுத முடிகின்றது, கஞ்சா அடிக்கின்றான், சம்பந்தமில்லாமல் பேசுகின்றான். யதியில் தப்பிய ஏதோ ஒரு சகோதரன் இங்கு வந்து குதித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும், அந்தளவிற்கு மாயாஜாலம். 

கதை என்ற வஸ்து இருந்தால் அதைப் பற்றி ஏதாவது எழுதலாம், ஒரு க்ராக்கின் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கின்றார். ஒருவனுக்கு திடீரென்று தான் ஒரு இசை மேதை என்றும், யூதன் என்றும் தோன்றுகின்றது. அதன் பின் அவன் என்ன ஆனான் என்று வளவளவென்று பல பக்கங்களில் அடித்து துவைத்திருக்கின்றார் வாசகனை.

கதையுடன் எங்கும் வாசகனை ஒன்ற விடக்கூடாது என்பதில் பாரா மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். 


ஒரு நாவல் வாசகனை அந்த கதைக் களத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும், பாத்திரங்களின் அனுபவங்களை நமக்கும் தரவேண்டும், பல புதிய கதவுகளை திறந்துகொள்ள வாசகனை அனுமதிக்க வேண்டும். இதில் அது சுத்தமாக இல்லை. ஆபிரஹாம் ஹராரி என்பவன் சொல்வதாக ஆரம்பிக்கும் கதை, வேறு ஒருவரின் பார்வைக்கு மாறுகின்றது. பின்னர் யார் பார்வையில் போகின்றது என்பதே கவலையின்று அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கின்றது. நடுநடுவே, பப்பி லஹரி, ஜானகி, இளையராஜா, சுதா ரகுநாதன் எல்லாம் வருகின்றார்கள். சாரு நிவேதிதா கட்டுரை மாதிரி பல வெள்ளைக்கார இசைக் கலைஞர்கள், பாடல்கள். இணைப்பை கொடுத்திருக்கலாம். யார் கண்டார், இதை யாராவது பயங்கர வாசகர்கள் ஒரு இசை நூலாக மாற்றலாம் . . .

தன்மை ஒருமையில் கதை சொல்வது என்பது கொஞ்சம் நசை. பூனைக்கதை, யதி, இறவான் மூன்று நாவல்களிலும் கதை சொல்லி தனக்குதானே பேசுவது அதிகம். அயர்ச்சியாக இருக்கின்றது. இப்போது பாரா இதே மூடில் பொன்னியின் செல்வன் கதையை எழுதினால் கிட்டத்திட்ட இப்படித்தான் ஆரம்பிக்கும்

"கற்பனைக் குதிரையில் ஏறி போய் கொண்டு இருக்கின்றேன் ஆயிரம் ஆண்டுகளாக செல்கிறேன் , நான் யார், தெரியவில்லை. அங்கு போனவுடன் தெரியும். மேக மூட்டம், குளிர். இறங்கிப்பார்த்தால் வீரநாராயணபுரம். உங்களுக்கு என்னை தெரிந்திருக்க நியாயமில்லை. நான் தான். இங்கு நான் எப்படி வந்தேன். குதிரை இருக்கின்றது, குதிரையில்தான் வந்திருக்க வேண்டும். ஆமாம் கரையெல்லாம் மக்கள், ஆகா எவ்வளவு தண்ணீர். எங்காவது கஞ்சா கிடைத்தால் நன்றாக இருக்கும். ".

அடுத்த அந்தியாயம்

"வந்தியத்தேவன் போவதைப் பார்த்து கொண்டிருந்தேன், அந்த பல்லக்கின் பின்னால் போய்க் கொண்டிருக்கின்றான், பல்லக்கை மோதிவிட்டான்"

இப்படித்தான் பக்கம் பக்கமாக போகும்.  

கண்டதும் காதல் என்பது போல புத்தகதலைப்பு ஆசிரியர் என்று வாங்கிப் படிப்பது ஆபத்து என்றுதான், பெரியவர்கள் பார்த்து செய்வது ரிஸ்க் குறைவு என்று விமர்சனம் படித்து வாங்குவது. இறவானை பற்றி பலர் எழுதியிருந்ததை படித்த பின்னர் தான் வாங்கினேன். பிரமாதம் என்று எழுதியவர்களைப் பற்றிய சந்தேகம் இப்போது வலுக்கின்றது. பாராவை சீரியல் எழுத்தாளர் என்று நினைத்து, அவர் இப்படி எழுதியிருப்பதால் இன்ப அதிர்ச்சி அடைந்து புகழ்ந்து தள்ளிவிட்டார்கள் போல.  புதிய புனைவுகள் வாங்க பல முறை யோசிக்க வேண்டியிருக்கும் போல. 

இப்புத்தகத்தைப் பற்றி பாரா, ஹரன் பிரசன்னா, சரவண கார்த்திகேயன் பேசியதை கேட்டேன்.  வாசகர்கள், இந்த கதையின் நாயகனை நிஜ இசையமைப்பாளர்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம் எனபது போல பேசியிருந்தார். அதெல்லாம் சாத்தியமே இல்லை.  ஒரு பாத்திரம் முழுமையாக இருந்தால்தான் நிஜத்தில் யாருடனாவது தொடர்பு படுத்தி பார்க்க தோன்றும். 

தெனாலிராமன் பூனை மாதிரி மாறிவிட்டிருக்கின்றேன்.  இன்னமும் இலக்கிய பயிற்சி வேண்டுமோ என்னவோ . . . என்னுடை வாசிப்பில் கோளாறா என்று கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கின்றது, நண்பர் சிலிக்கான் ஷெல்ப் ஆர்.வியிடம் இந்த  நாவலை படிக்க சொல்லி, கருத்து கேட்கலாம். ஆனால் வெகுநாட்கள் கழித்து அவர் இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கின்றார். அதில மண்ணைப் போடவா என்று யோசனையாக இருக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக