23 ஏப்ரல் 2020

கானகன் - லக்‌ஷ்மி சரவணகுமார்

காடு பற்றிய ஒரு நாவல். 

காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.

கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை. 

ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.

கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும்  பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக  பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.


ஓநாய்க் குலச்சின்னம் வேட்டையையே அடிப்படையாக கொண்டது. காட்டில் உள்ளவன் வேட்டையாடுவதற்கான காரணங்களை விலாவரியாக பேசும். இந்நாவலும் அதை பேசுகின்றது, காட்டில் உள்ளவன் வேட்டையாடுவதற்கும், வெளியிலிருந்து வந்து கேளிக்கைக்கு வேட்டையாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பேசுகின்றது. வேட்டை என்பது எப்படி ஒருவனை கொஞ்ச கொஞ்சமாக உள்ளிழுக்கும், அவன் எங்கு சென்று நிற்பான் என்பதை காட்டுகின்றது. இரண்டு மூன்று வேட்டைக் காட்சிகள் வருகின்றன, இரண்டு புலி வேட்டை, யானை வேட்டை, ஜமின்தாரின் வேட்டை என்று வேட்டை காட்சிகளின் சித்தரிப்பு அபாரம்.

மற்றொரு திரி, வேட்டைக்காரனின் தனிப்பட்ட வாழ்வு. ப்ளேபாய். மூன்று மனைவிகள், அதில் ஒன்று  அடுத்தவன் மனைவி. மூன்றில் ஒன்று மற்றொருவனுடம் வாழப் போகின்றாள். ஆனால் அவர்களுக்கு ஒரிஜினல் கணவன் மீது அன்பு இருக்கின்றது. பெண்களின் சுதந்திரம், எல்லாம் சரிதான்.  ஆனால் இது பூர்வகுடிகளிடம் இது சகஜம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை அது தருகின்றது. இரண்டாவது மனைவியின் முதல் கணவனு சடையனுக்கு பிறந்தவன். சடையன், காட்டை நேசித்து, மிருகங்களை நேசிக்கும் ஒருவன். அது அவன் மகனிடமும் இருக்கின்றது. 

பூர்வகுடிகளுக்கு அரசால் வரும் பிரச்சினைகள் அங்கங்கு வருகின்றது. காட்டில் உள்ளவர்கள் எப்படி வியாபர நோக்கத்தில் பலியாகின்றனர், மரக்கடத்தல், கஞ்சா வியாபரம் எல்லாம் அங்கங்கு வருகின்றது. அது அந்த வேட்டை திரியுடன் ஒட்டாமல் போவதுதான் பிரச்சினை. கதையின் உள்ளோட்டம் தடுமாறுவது அங்குதான்.

முக்கிய ஓட்டை கதை நடக்கும் இடம் நம் மனதில் பதிவதில்லை. அகமலை காடு, கொடுவிலார்ப்பட்டி, குமுளி, பெரியகுளம், தேனி என்று எங்கங்கோ போவது போல தோன்றுகின்றது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் அப்படி தோன்றுகின்றதோ என்னவோ. ஒரு இடத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் கதை, அந்த இடத்தை நம்முள் விதைக்க வேண்டும் முதலில். வர்ணனைகள், சித்தரிப்புகள் எல்லாம் தேவை, அது இல்லை. இருக்கும் விஷயங்களும் வளவளவென்று இருக்கின்றது. நாவலாசிரியர் அங்கு உள்ளே வந்து அமர்ந்து கொள்கின்றார். 

யுவபுரஷ்க்கார் விருது கிடைத்த நாவல் என்று தெரிகின்றது. குறைகள் கொஞ்சம் இருந்தாலும் நல்ல நாவல். படிக்கலாம்.

3 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும் என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 2. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன். வருக வருக. மாதம் ஒன்று என்ற கணக்கில் பதிவுகள் வருகின்றனவே !? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன வருடம் முழுவதும் கிண்டிலில் துப்பறியும் நாவல்களாக படித்து தள்ளிக் கொண்டிருந்தேன், அதோடு ஏற்கனவே படித்த புத்தகங்களை மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது, வீட்டிலிருந்து வேலை செய்வதால், அலுவலகத்தை விட அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

   நீக்கு