22 ஜூன் 2021

எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

டி.கே.எஸ் ப்ரதர்ஸ், நாடக உலகில் மிகவும் பிரலமானவர்கள். டி.கே.எஸ் சண்முகம் , அவ்வை சண்முகம் என்று அழைக்கப்பட்டவர். இவரது தம்பி டி.கே.எஸ்.பகவதி. பல திரைப்படங்களில் நடித்துள்ளவர். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணேஸ்வரனாக நடித்தவர். அவ்வை சண்முகத்தின் நினைவாகத்தான் கமல் தன் படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தார், மற்றொரு முக்கிய நாடக உலக பிரமுகர் பம்மல் சம்பந்தம் பெயரை மற்றொரு படத்திற்கு வைத்தார்.

அக்கால நாடகங்கள் முழுவதும் பாடல்களால் நிறைந்தவை, பாடல்கள் பாட தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எம்.ஆர்.ராதாவே மிகச்சிறந்த பாடகர் என்றால் நம்புவது கடினம்தான். அந்த குரலில் பாடலை கேட்பதை நினைக்கவே முடியவில்லை. சண்முகம், மிகச்சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவரின் நாடக வாழ்க்கை, ஐம்பது வருடங்களுக்கு மேலாக போகின்றது. அவர் நாடகத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது இரண்டு மூத்த சகோதரர்களும் ஏற்கனவே நாடகத்தில் நடித்து கொண்டிருந்திருக்கின்றர். அவரின் தந்தை பாடகராக இருந்துள்ளார். 

நூலின் பெரும்பாலான பக்கங்களில் அவர்களின் நாடக குழு சென்ற ஊர்கள், அங்கு கிடைத்த வசூல், அங்கிருந்து சென்ற ஊர் என்றே போகின்றது, எப்படி சென்றார்கள், என்ன கஷ்டம் வந்தது, யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு நடுவேதான் நாடக உலகை பற்றிய பல தகவல்களை நாம் படிக்க முடிகின்றது. 

நாடக நடிகர்களாக ஆரம்பித்து பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்தி, சினிமாவிற்கு சென்று நடித்து, சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள். முதல் பகுதிகளில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் அவர்களது அனுபவங்களை விவரித்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இரவில் ஒரு நாடகம் முழுவதையும் எழுதும் திறன் படைத்தவராக இருந்திருக்கின்றார். 4 மணிநேரத்திற்கு மேலாக நடக்கும் நாடகம், அதற்கான காட்சிகள், பாடல்கள், வசனங்கள் அனைத்தையும் ஒரே இரவில் எழுதுவது அசாத்திய திறமைதான். பிற்பகுதிகளில் அவர்களது சொந்த நாடக குழுவைப் பற்றி விவரங்கள். அவர்கள் தயாரித்த நாடகங்கள் பற்றிய விவரணைகள்.

அனைத்து வியாபரங்களில் இருப்பது போலவே ஏமாற்றம், துரோகம், பண மோசடி, ஒரு குழுவை விட்டு இன்னொரு குழுவிற்கு ஓடுவது போன்றவை நாடக உலகிலும் மிக சகஜமானதாக இருந்திருக்கின்றது. காமேஸ்வய்யர் என்னும் சுவாரஸ்ய பாத்திரம், புத்தகம் நெடுக வருகின்றது. பண கையாடல், மோசடி என்று இருந்தாலும் அவரை விட முடிவதில்லை. மக்களிடையே ஒரு காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்த நாடக மோகம், சினிமா வந்தவுடன் மங்கலாகின்றது. ஆனால் அதுவே நாடகத்தை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. 

டி.கே.எஸ் சகோதரர்கள் நாடக உலகில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்திருக்கின்றனர்.ஒரே சமயம் வறுமையையும், செல்வத்தையும் கண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். மாத சம்பளம் என்று பார்த்தால் பெரிய பணம், ஆனால் சில சமயம் அது கைக்கு வராது. நஷ்டம் அதிகமாகி, குழுவையே மற்றொருவரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றனர், நாடக காட்சியமைப்பு பொருட்களை கொட்டைகையிலேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இருந்தாலும் நாடகத்தை விடவில்லை, சினிமாவில் கிடைத்த பணத்தையும் நாடகத்திலேயே முதலீடு செய்திருக்கின்றார்கள். அண்ணாத்துரை, ஈ.வெ.ரா, என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா, பாகவதர் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களுடன் நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. 

சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, நாவல்களை உரிமை பெற்று நாடகங்களாக்கி, நாடக ஆசிரியர்களுக்கு ராயல்டியும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். பாவம் இன்றைய நாவலாசிரியர்கள். ஈ.வே.ரா , காசு விஷயத்தில் கறார் என்று பெயர் பெற்றவர், டி.கே.எஸ் குழுவினரிடம் தாரளமாக நடந்து கொண்டிருக்கின்றார், பாரதிதாசன் பாடல்களை பயன்படுத்த அனுமதி வேண்டி பல கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். நடிக்க தெரியாத தியாகராஜ பாகவதர், குழுவை விட்டு ஓடுபவர்கள் மீது போலிஸ் கேஸ் கொடுக்கும் நாடக முதலாளி, நாடக கொட்டைகளில் கலட்டா செய்யும் உள்ளூர் ரவுடிகள், மகரக்கட்டால் பாதிக்கப்படும் நடிகர்கள், பெண் வேடத்தில் பிரமாதப்படுத்திய ஏ.பி.நாகராஜன், சண்முகம் மறுத்த வேடத்தில் நடித்து புகழ் பெற்ற கிட்டப்பா, என்.எஸ்.கே உடன் பல சம்பவங்கள், ராஜா சாண்டோவுடனான சினிமா அனுபவங்கள். 

இது மாதிரியான நூல்களால் என்ன பயன் என்றால், சில புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம், ஒரு காலகட்டத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கின்றது. நம் தாத்தா பாட்டி எல்லாம் எப்படி இருந்தனர் என்று தெரிந்து கொண்டு கொஞ்சம் வயிறெரியலாம் இல்லை சந்தோஷப்படலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக