வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல்.
எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.
இளவயதில் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பலரை வெகு எளிதாக ஈர்ப்பது வன்முறைப் பாதையே. நமது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலேயே நாம் பலரைக் காணலாம். இளமையின் வேகம் வன்முறை எளிதாக அனைத்தையும் முடிக்கும் என்று எண்ண வைக்கும். எதிர் தரப்பின் வலிமை தெரியாமல் ஆயுதம் ஏந்தியவன் கதை அவ்வளவுதான். இந்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஒரு தெளிவான நோக்கம் இருந்தது, நாட்டு விடுதலை. ஆனால் கம்யூனிசத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வன்முறையை கையில் எடுப்பவர்களிடம் எவ்வித நோக்கமும் இல்லை, எதை நோக்கி போவது என்பதே தெரிவதில்லை. புரட்சிக்கு பின் என்ன என்பதே கேள்விக்குறி. பலர் ஆவேசமாக இறங்கி பின்னர் நிலை உணர்ந்து சாதரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர், பலர் வாழ்க்கையை அழித்துக் கொண்டுள்ளனர்.
அதுமாதிரி இரண்டு திசைகளில் சென்றவர்களைப் பற்றிய ஒரு நாவல். கோவைக்கு வரும் சாருமஜூம்தாரை சந்திக்கும் அப்பு அவரை மதுரைக்கு அனுப்பி வைக்கின்றார். அங்கு அவர் இளைஞர்களிடம் தனது கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, ஆள்திரட்டுகின்றார். அவரின் பிராச்சரத்திற்கு ஈர்க்கப்பட்டு பலர் இணைகின்றனர். சாருமஜூம்தார் ஆதரவு தேடி வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தொண்டர், ஆயுதவழி எல்லாம் கதைக்குதவாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவர். அவர் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து, ஒருவன் மனம்திருந்துகின்றான், மற்றொருவன் மாட்டி அழிகின்றான்.
ஒரு சிறுகதையாகவோ, இல்லை மிகப்பெரிய நாவலாகவோ இருந்திருக்க வேண்டும். இரண்டிற்கும் மந்தியில் ஒரு குறுநாவலாக அமைந்துவிட்டது. ஒரு பெரிய நாவலுக்குரிய அளவிற்கான பாத்திரங்களை படைத்து, அனைத்து பாத்திரங்களுக்கும் சில காட்சிகள், சம்பவங்களை வைத்து பின்னி கொண்டே வருகின்றார். ஆனால் அவற்றில் பல நாவலின் முக்கிய கருவிற்கு எவ்விதமும் பயன்படவில்லை. கதையின் மைய முடிச்சை தொடவே வெகுநேரம் ஆகின்றது, தொட்டவுடன் சில பக்கங்களில் நாவல் முடிகின்றது. நாவலின் பல திரிகளில் இதுவும் ஒன்று என்றும் எண்ண முடியவில்லை, ஏனென்றால் மற்ற சம்பவங்கள் எவ்வித மதிப்பையும் பெறவில்லை. எம்.எல் பக்கம் செல்லும் ஒருவனின் வீடு, அவன் மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அத்தை, மாமா என்று அனைவரைப் பற்றியும் பக்கம் பக்கமாக விரிகின்றது. ஒரு சில சம்பவங்கள் அவன் எப்படி கம்யூனசத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டான் என்பதற்காக சொல்லப்பட்டாலும் பல சம்பவங்கள் ஏன் என்றே தெரியவில்லை. அதே போல் கம்யூனிச கட்சி தலைவர் குடும்பமும். ஏகப்பட்ட உப பாத்திரங்கள்.
2018ல் எழுதப்பட்டிருக்கின்றது. இப்போது நாவலின் கருப்பொருளின் தேவை அந்தளவிற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையான வெறு வகை பைத்தியங்கள் உருவாகி வருகின்றார்கள். அவர்களுக்கு ஓரளவிற்கு பித்தம் தெளிய பயன்படலாம்.
நாவல் என்ற வகையில் அந்தளவிற்கு ஓகோ என்று இல்லை. வன்முறையையும், பிரிவினையையும் கையில் எடுக்க தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இன்னும் விளக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வன்முறை பாதையை விட்டு ஒருவன் விலக அவன் சந்திக்கும் சம்பவங்களை காரணமாக்காமல், மற்றொரு தொண்டரின் வார்த்தைகளை காரணமாக்கியது அந்தளவிற்கு தாக்கத்தை உண்டாக்கவில்லை.
சுமாரான நாவல். படிக்கலாம். கிண்டலில் 49ற்கு கிடைக்கின்றது. அவரே வெளியிட்டு இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக