22 ஜூலை 2021

பயம் (அவருக்கு வராதது)

குளிக்க போகலாமா, இல்லை வெயில் வந்த பிறகு குளிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தார் நமச்சிவாயம். எப்படியும் நல்ல வெயில் வர பதினொன்று மணியாகும், அதுவரை எப்படி சாப்பிடாமல் இருப்பது, குளிக்காமல் சாப்பிட மனசு ஒப்பவில்லை. சாப்பிடாவிட்டால் காலை மாத்திரைகள் போட முடியாது, மாத்திரை போடாவிட்டால் கொஞ்சம் கட்டிற்குள் இருக்கும் சர்க்கரை எப்படி ஆகுமோ. ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.

"சகுந்தலா, எனக்கு டிபன் கொடுத்துடு, சாப்பிட்டு மாத்திரைய போட்டுக்கிறேன்"

மாத்திரை டப்பாவை எடுத்து, சாப்பாட்டிற்கு முன் பின் என்று பிரித்து வைத்துக் கொண்டார். சகுந்தலா கொடுத்த தண்ணீரில் சில மாத்திரைகளை விழுங்கினார். இட்லியில் கை வைக்கும் போது "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்று சீர்காழியின் கம்பீர குரல் எழுந்தது. பதறி அடித்து எழுந்தவர், தண்ணீரை தட்டி, தட்டை உருட்டி கைபேசியை எடுத்து பார்த்தார். அவரது அண்ணன் மகன் குமார்.

"சித்தப்பா, சித்தப்பா போய்ட்டாரு"

"என்னடா சொல்ற, யேய் இங்க வா அவன் என்னவோ சொல்றான், எனக்கு புரியல"

"குமாரு, என்னடா என்ன ஆச்சு"

"சித்தி, சித்தப்பா போய்ட்டாரு"

"மூதேவி, இப்ப அவர்கிட்டதான பேசுன, என்ன உளர்ற, எழவு தண்ணி எதுவும் போட்டுட்டு உளர்றியா"

"அவரோட, சித்தப்பா பையன் சிவசங்கரன். கொரானா, காச்ச இருந்துக்கு மூணுநாளு, மனோகரு ஏதோ மாத்திரைய வாங்கி கொடுத்து இருக்கான், குறையல. அப்புறம் ஹோமியோபதி மாத்திரை வாங்கி கொடுத்து இருக்காங்க. ஒன்னும் கேக்கல. அப்புறம் ஆஸ்பத்திரில சேத்து பத்து நாள் இருந்து ஒன்னும் பலனில்ல. போய்ட்டாரு"

"ஏன்டா, பத்து நாளா ஒடம்பு சரியில்ல ஒருவார்த்த சொல்லல"

"தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க, போய் பாக்கவா முடியும். கொரனா"

"இப்ப எப்படிடா போறது"

"போறதா ஒன்னும் போக தேவையில்ல, பேசாம தலைல தண்ணிய ஊத்திட்டு பேசாம இருங்க"

"அது எப்படிடா போகாம இருக்குறது, அண்ணன் முறையில்ல, கொரானா எல்லாம் நமக்கு வராதுடா"

"அவரே கொரானா வந்து போயிருக்காரு,  போனவங்க போய்டாங்க, உள்ளவங்கள பத்திரமா பாத்துக்க வேண்டமா, பேசாம இருங்க, பக்கதுலயும் இல்ல 3 மணி நேரம் பஸ்ல வேற போகனும்"

"கார் பிடிச்சி போய்க்கலாம்"

குமார் வீட்டிற்கே வந்து விளக்கினான், "அவரே யாரோ கொரானா பேஷண்ட பாக்க போய் வாங்கிட்டு வந்தாரு, அவரு பண்ண தப்ப பண்ணாத நீயும்". பல மணி நேரம் பேசிய பின்னரே நமச்சிவாயத்திடம் கொரனா பயத்தை விதைக்க முடிந்தது.

ஒரு வாரம், நமச்சிவாயத்தின் புலம்பலுக்கு பயந்து ஐயப்பனே எட்டிப் பார்க்கவில்லை.இரண்டு முறை டாக்டர்தான் வந்துவிட்டு சென்றார்.

ஒருமாதம் கழித்து, ஐயப்பன் வீட்டிற்கு வரும் போது நமச்சிவாயம் கண் நிறைய நீர். அருகில் குமார்.

"என்னடா அழுதுட்டு இருக்க"

"திவாகர் போன் பண்ணினான், அவன் வீட்டு க்ருகப்ரவேசத்துக்கு கூப்பிட. கூப்பிட்டவன் அதோட இருந்திருக்கலாம், சாவுக்கு வராம இதுக்கு வந்தா எப்படி எங்க மூஞ்சில முழிப்பீங்கன்னு கேட்டுட்டான். உங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு எங்க பெரியப்பா , அப்படி என்ன உங்களுக்கு உசிரு பயம், அப்படி பயந்துகிட்டு இருக்கனுமா, உங்களுக்கு எல்லாம் கொரனா வராதா அப்படி இப்படின்னு. ஏதோ பாரதியார் கவிதை எல்லாம் சொல்லி திட்றாண்டா. நிதம் சோறு திருடி தின்று அப்படி இப்படின்னு. நான் எங்கடா திருடி தின்னேன்"

"யாருடா திவாகர், தப்பு தப்பா பாட்ட சொல்லிட்டு" என்றார் ஐயப்பன். 

"செத்துப் போனாரே சிவசங்கரன் அவரோட தம்பி பையன். மனொகரோட ஒண்ணு விட்ட தம்பி, அவன் பெரியப்பா, பெரியப்பான்னு உருகுவானேடா. பத்துவருஷம் முன்னாடி இவனுங்க குடும்ப சண்டைய தீர்த்து வைக்க நானும் உங்கப்பனும் அந்த பாடு பட்டோம்"

"சித்தப்பா, திவாகர் அவங்க பெரியப்பா  பத்தி பேசினது எல்லாம் இப்ப சொன்னா, அந்தாள் சமாதியில இருந்து வெளிய வந்து தற்கொலை பண்ணிக்குவாரு, அவன் ஒரு ஆளு அவன் பேசுறான்னு அலட்டிக்கிறயே"

"ரொம்ப பேசிட்டான்டா"

"உனக்கு ஒன்னு தெரியுமா, திவாகரோட சம்சாரம் குழந்தைகளே வரல"

"ஆமா, அவன் மட்டும் பெங்களூர்ல இருந்து தனியாத்தான் வந்தான், அவங்க மாமனார் மாமியா பக்கத்து ஊரு அவங்க எட்டி கூட பாக்கல, அவன் தங்கச்சி ஆளு அட்ரசே இல்ல. பெங்களூர்ல கொரானானு கேள்விப்பட்டதுக்கே பயந்து போய் பொண்டாட்டி , பிள்ளைங்கள மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டான். அந்தாள் ஹாஸ்பிட்டல்ல இருந்த பத்து நாளும் எட்டி கூட பாக்கல, செத்தவங்க கிட்ட இருந்து கொரானா பரவாது ன்னு தெரிஞ்ச பின்னாடிதான் தைரியமா வந்திருக்கான்."

"யோவ், நமச்சிவாயம். எல்லாம் தெளிவாத்தான்யா இருக்கானுங்க. அவனவன் வீட்ல இருக்குற எல்லாரையும் பத்திரமா வச்சிட்டு, உன்ன மாதிரி ஆளுங்க கிட்ட இப்படி பேசி குற்ற உணர்ச்சியை தூண்டி விடுறானுங்க. நீ இங்க பொலம்பிட்டு இருக்க அவன் என்னவோ தன் பெரியப்பா மேல அப்படியே பாசம் வழுக்கி விழுகிற அளவு உன்கிட்ட ஊத்திட்டான். அப்படி அவங்க பெரியப்பா மேல பாசம் பொத்துகிட்டு வந்தா, பொண்டாட்டி பிள்ளைங்கள எல்லாம் கூட்டிட்டு வரவேண்டியதுதான. உன்கிட்ட இவ்வளவு பேசினான் இல்ல, உங்கண்ணன் கிட்ட என்ன சொன்னான், ஒன்னும் சொல்லி இருக்க மாட்டான்"

"ஆமா, ஒன்னுமே பேசல" என்றான் குமார்

"நீ ஒரு ஏமாந்த சோணகிரின்னு எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கு" என்றபடி குமாரைப் பார்த்தார்

"ஆமா, மாமா, இவர் அப்படித்தான் எல்லாரையும் நம்பிடுவாரு" என்றபடி ஐயப்பனை கூர்ந்து பார்த்தான். ஐயப்பனுக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது.

நமச்சிவாயம் கொஞ்சம் தெளிந்தார். "ஆனா க்ருகப்பிரவேசத்துக்கு போகனுமில்ல"

"சித்தப்பா இவ்வளவுக்கு அப்புறமும் போகனுமா"

"ஆமாடா, கூப்டிருக்கான் இல்ல"

"வர சொல்லி கூப்டானா என்ன?" என்றார் ஐயப்பன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக