03 செப்டம்பர் 2021

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது. 

சில புத்தகங்களை திரும்ப திரும்ப படிக்க முடியாது. குறிப்பாக துப்பறியும் நாவல்கள், அவற்றின் பலமே அந்த திருப்பங்கள், முடிவுதான். இதுவும் கிட்டத்திட்ட அப்படித்தான் என்றாலும், சுமார் 25 தடவைக்கு மேல் படிக்க முடிகின்றது. ஒன்றிரண்டு தடவை, கடைசி பாகம் முடிந்த கையோடு, முதல் பாகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கின்றேன். இந்த பிரம்மாண்ட நாவலில் சரித்திரம் என்பது சும்மா கையளவுதான். ராஜராஜன் மக்கள் அபிமானம் இருந்தும் தனக்கு கிடைத்த சிம்மாசனத்தை உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்தது, ஆதித்த கரிகாலன் ரவிதாசன் முதலியவர்களால் கொல்லப்பட்டது. 

கல்கி ஒரு காந்தி பக்தர். காந்தி சுதந்திரத்திற்கு பின் நேருவை பிரதரமாக்கியது அவர் பார்வையில் ஒரு மிகப்பெரிய தியாகமாக இருந்திருக்கலாம். நாவலின் உச்சம் என்பதே அந்த தியாக நிகழ்வு என்று கல்கியே குறிப்பிடுகின்றார். காந்தியை மனதில் வைத்தே எழுதியிருப்பார் போல.

வந்தியத்தேவன் சரித்திர பாடங்களில் ஒரு ஓரமாக வந்துசெல்லும் பாத்திரம். அவனின் வாணர் குலம், சில பல பாடல்கள் மூலம் இன்றும் வாழ்ந்து வருகின்றது. வந்தியதேவனின் மனைவி குந்தவை என்று கல்வெட்டுகளில் குந்தவையுடன் அறியப்படும் ஒரு சோட்டா பாத்திரம். கல்கி என்னும் ஒரு எழுத்தாளன் மூலம் இன்று தனக்கென ஒரு குணாதிசயம், தனித்துவம் அனைத்தும் பெற்று ஒரு மிகப்பெரிய சரித்திர புருஷனாகி விட்டான். (ர் என்ன வேண்டியிருக்கின்றது, நமது வந்தியதேவனுக்கு). நேரடியாக வாசகனுடன் பேசும் நடைதான், இலக்கிய தரிசனங்கள், வாழ்வின் சிக்கல்கள் பற்றிய கோணங்கள், அன்றைய வாழ்க்கை முறை போன்றவை ஏதுமில்லை. நேரடியாக சொல்லப்படும் கதை. இருந்தும் இத்தனை ஆண்டுகாலம், பலர் படிப்பதே போதும் தமிழகத்தின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக கொண்டாட.

பலர் பொன்னியின் செல்வன் எல்லாம் போரடிக்கும் என்று சொல்வதை படித்துள்ளேன். அவர்களின் மற்ற கருத்துக்களை படிக்கும் போது தெரிவது அவர்களுக்கு இருப்பது ஒருவித உயர்வுணர்ச்சி (சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ்), அவர்களுக்கு பொன்னியின் செல்வன் மிகவும் வெகுஜன எழுத்து அது பிடிக்கும் என்று சொன்னால் க்ரீடம் விழுந்து விடும். பலர் எம்.ஜி.ஆர், ரஜினி படம் பிடிக்காது என்பார்கள் இதே காரணம்தான்.  

கல்கி ஆராய்ச்சி இல்லாமல் எனோதானோ என்றும் எழுதவில்லை. ஆதாரங்களுடனேதான் எழுதியுள்ளார். அனிருந்தர் சரித்திரத்தில் இருந்தவர், ரவிதாஸன் முதலானோர் உண்மையில் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள். ரவிதாஸன் ஒரு பிராமணன், அதை கல்கி மாற்றி மந்திரவாதியாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு, பிராமணனாக காட்டுவதில் அவருக்கு தர்மசங்கடம் இருந்திருக்கலாம். ராஜராஜன் பல பெண்களை திருமணம் செய்தவன் அதையும் மனதில் வைத்தே எழுதியுள்ளார். (சிவகாமியின் சபதம் நாவலில், நரசிம்மர் ராமர் மாதிரி ஏகபத்தினி விரதர் என்று கூறுவது போன்று வரும், இதில் அது போன்ற புகழ்ச்சிகளை கவனமாக தவிர்த்துள்ளார்). திருவயிறு உதித்தவர் என்று வரும் ஒரு கல்வெட்டு வரிகளை வைத்தே ஒரு மிகப்பெரிய முடிச்சை போட்டிருப்பது எல்லாம் அவரின் கற்பனை வளத்திற்கு சான்று.

கதை நடப்பதே மொத்தம் ஆறு மாதகாலம். ஆடி பதினெட்ட்டில் ஆரம்பித்து, பங்குனியில் முடிவடைகின்றது. இது தொடராக வெளிவந்த காலம் மூன்றரை வருடம். ஆதித்த கரிகாலன் கொலையுண்ட இரவு, அதற்கு முந்தைய இரண்டு நாள் மட்டுமே கிட்டத்திட்ட ஒரு வருடம் வந்திருக்கும். அவரது எழுத்தில் எந்தளவு ஆற்றலிருந்தால் ஜனங்களை அந்தளவிற்கு இழுத்து பிடித்து வைத்திருக்க முடியும். 

இது சினிமாவாக எப்படி வரப்போகின்றது என்ற ஆர்வம் பெரிதாக உள்ளது. ஜெயமோகன், இதன் மூலம் நம் தமிழர் பெருமையை உலகிற்கு கொண்டு செல்ல முடியும் என்கின்றார். (பிரதமர் தனது பல உரைகளில் சோழர்கள் பற்றி, அவர்களின் கடற்படை பற்றி, ராஜேந்திரன் பற்றி பேசியிருப்பதை எல்லாம் கண்டு கொள்ள தேவையில்லை. முதல்வர் ஏதாவது பேசினால் பாரட்டலாம்.) பொன்னியின் செல்வன் அப்படிப்பட்ட நாவல் இல்லை, கதை நடக்கும் கட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் அப்படி ஒன்றும் பெரிதாக இருந்து விடவில்லை. சோழ சாம்ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது, ராஜேந்திர சோழன் காலத்தில், ராஜராஜன் அதற்கு பாதை போட்டிருந்தாலும் பொன்னியின் செல்வனில் அந்த நிகழ்வுகளும் இல்லை. முழுக்க முழுக்க சதி, சஸ்பென்ஸ் என்றே போகும் நாவல். போர்க்கள காட்சிகள் எடுப்பதாக செய்தி வந்தது, பொன்னியின் செல்வனில் நேரடி போர்களே கிடையாது. ராஜாதித்யர் கலந்து கொண்ட தக்கோல போரும், விஜயாலயச் சோழன் கலந்து கொண்ட போரும் சிறு காட்சி துண்டுகளாக வந்து போகும். வீரபாண்டியனை கொன்றதை காட்டும் போதும் பெரும் போரை காட்டுவதில்லை. எந்த போரை மணிரத்னம் காட்ட போகின்றாரோ. 

மருந்தை நினைக்கும் போது குரங்கை நினைக்காத கதையாக, படிக்கும் போது திரைப்படத்தில் இது எப்படி வரும், கார்த்தியின் கேனச்சிரிப்பு எப்படி இருக்கும், ஜெயம்ரவி தன் கீச்சு குரலில் கம்பீரமாக பேசினால் என்னவாகும், அவரின் அக்காவாக திரிஷா. கொஞ்ச பக்கங்களுக்கு இம்சையாக இருந்தது. ஆனால் பத்து அத்தியாயம் தாண்டியவுடன், வழக்கமான வந்தியதேவனும், ஆழ்வார்க்கடியானும் வந்துவிட்டார்கள். கல்கியின் எழுத்து வன்மை அப்படி. 

ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் இந்த இரண்டு பாத்திரங்களுக்கான நடிகர்கள் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிக்கின்றார்கள். பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராம் கஷ்டம். கார்த்தி அந்த கேனச்சிரிப்பை விட்டால் ஓரளவிற்கு தேறலாம். பார்ப்போம்.   

இந்த தொல்லைக்கு நடுவில் ஆர்வக்கோளாறுகள் ஒரு பக்கம், ராவணன் படத்திற்கு வேறு தலைப்பை வைத்து எடுத்திருந்தால் பலருக்கு பிரச்சினை இருந்திருக்காது. ஸ்டால்க்ஹொம் சின்ட்ரோம் பிரச்சினை, அதை ராமன்-ராவணன் என்று குழப்பிக் கொண்டார்கள். அதை வைத்து கொண்டு பொன்னியின் செல்வனை கிறிஸ்துவ படமாக எடுப்பார், தாமஸ் வருவார், சிலுவை இருக்கும், விபூதி இருக்காது என்பது எல்லாம் அதீதம். இந்த ஆர்வக்கோளாறுகள் தங்களின் மேதாவித்தனத்தை காட்ட உளறுவதை தாங்கமுடியவில்லை. அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதை மறந்து விடுகின்றார்கள். சுகாசினி யாருக்கும் குரல் கொடுக்காதவரை நல்லது. சிலபல திரிபு வேலைகளை செய்யலாம் என்பதை மறுக்க முடியாது. பொன்னியின் செல்வனுள் பல ஆழ்வார் பாடல்களும், சைவ பாடல்களும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மூன்று அத்தியாயங்கள் முழுவதும் இந்து மதப் பெருமைகளை பேசுகின்றன. கல்கி எழுதிய சைவ-வைணவ மோதல்களை எல்லாம் இன்று காட்சியாக வைக்க முடியாது. ஆழ்வார்க்கடியான் பேசுவதை அப்படியே வைத்தால் கூட கோர்ட்டுக்கு யாராவது போக வாய்ப்புண்டு. இதில் மணிரத்னம் எப்படி எடுத்தாலும் குறைவாகத்தான் இருக்கும். 

படத்தை எப்படியும் உடனே சென்று பார்க்க போவதில்லை. என்னதான் படத்தை பார்த்தாலும் நமக்குள் இருக்கும் வந்தியதேவனையும், ஆழ்வார்க்கடியானையும் மாற்ற முடியாது. உச்சகட்ட திறனை காட்டி நடித்தால் தவிர. (தில்லானா மோகனாம்பாள் படிக்கும் போது சிவாஜி எல்லாம் மறைந்து வேறு ஒரு சண்முகம் எழுந்து வந்தான், ஆனால் வைத்தி மட்டும் நாகேஷ்தான், அதை மாற்ற முடியவில்லை, அப்படி நடிப்பவர்கள் யாரும் இதில் இல்லை)


4 கருத்துகள்:

  1. தில்லானா மோகனாம்பாள் படித்ததில்லை.  தேடிப்படிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. தில்லானா மோகனாம்பாள் - அச்சில் இல்லை. பழனியப்பா பிரதர்ஸ். எங்கும் கிடைக்கவில்லை. ஸ்டாக் இல்லை. பழைய புத்தகக்கடையில் தேடவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே தேடி PDF இறக்கி விட்டேன். அப்புறம் படிக்க வேண்டும்.

      நீக்கு
  3. சேந்தன் அமுதன் பூங்குழலிக்காக படிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு