28 ஜனவரி 2022

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

பள்ளி, கல்லூரி படிக்கும் போது 90களின் இறுதிப்பகுதியில் அடிக்கடி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்கும். காரணம் ஜாதிக்கலவரங்கள். எங்கள் பகுதிக்கு அருகில் சில சென்சிட்டிவான பகுதிகள் உண்டு. அந்த கலவரங்களைப் பற்றிதான் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தற்காலத்தில் அடித்தக் கொள்ளும் இரண்டு சமூகங்கள் ஒரு காலத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தனர், ஒரு சமூகத்தவனுக்கு பிரச்சினை என்னும் போது இன்னொருவன் ஆயுதம் எடுத்தான், அவன் இன்று எப்படி மாறினான் என்று குமுறுகின்றார். தூர்வை, சூல் நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகளை காணலாம். 

நாவலின் ஆரம்பம் ஆங்கிலேயர்களின் குதிரைப்படை வீரர்களிடமிருந்து தப்பித்து ஒடும் மக்களிடம் ஆரம்பிக்கின்றது. வேயன்னா அக்கூட்டத்தின் தலைவர், அவரது மகன் அக்கூட்டத்திலிருந்து குதிரைக்காரனால் தூக்கி செல்லப்பட்டு, ஒரு ஆங்கிலேய அதிகாரியிடம்  ஒப்படைக்கப்பட்டு அங்கு வளர்கின்றான். மீதமிருக்கும் கூட்டம் பெரும்பச்சேரி என்னும்  ஊரைச் சேர்ந்த வையத்துரை என்னும் சிறுவனால் கொம்பூதி என்னும் கிராமத்தில் குடியமர்த்தப்படுகின்றார்கள். அவர்களின் தொழில் களவு. களவை தடுக்க வரும் ஆங்கிலேயர்களுக்கும் வேயன்னா கூட்டத்திற்குமான போர்தான் நாவல். இறுதியில் வேயன்னாவின் மகனே அவருக்கு எதிரில் நிறுத்தப்படும் போது என்னவாகின்றது என்பதோடு நாவல் முடிகின்றது.

காவல்கோட்டத்தை முதலில் படித்ததால் அந்த நாவலின் நினைவு வராமல் படிப்பது எளிதாக இல்லை. முதல் சில பகுதிகள் தாண்டிய பின்னரே, இந்த நாவல் மனதில் உருக்கொள்ள ஆரம்பிக்கின்றது. ஒரு களவு மிக விரிவாக சித்தரிக்கப்படுகின்றது, தங்க பெட்டியை களவாடுபவர்கள் கடைசியில் அதற்கு ஈடாக பெருவது உணவு தவசங்கள். இவர்கள் களவில் வாழ்பவன் எவனோ ஒருவன்.  திருடுவது என்பது ஒரு வகையான வேட்டையாடுதல் என்பது போலத்தான் நினைக்கின்றார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் அவர்களுக்கு இருப்பது பயம், அது மரியாதை என்று பரவலாக கொள்ளப்படுகின்றது. 

பெரும்பச்சேரி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை யூகித்து கொள்ளும்படி விட்டிருக்கின்றார். பெருநாழி என்னும் ஊரில் இருக்கும் நிலங்களில் அவர்கள் வேலை செய்துவருகின்றார்கள். அவர்களுக்காகவே கொம்பூதி மக்கள் பெருநாழியுடன் சண்டையில் இறங்குகின்றார்கள். இன்று எதிர் எதிராக நிற்பவர்கள் ஒரு காலத்தில் தோளோடு தோள் நின்றவர்கள், ஒரு வேளை அன்று அவர்கள் இருந்த பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ?

கொம்பூதி மக்களும் வேயன்னாவும் திருட்டு என்னும் ஒரு குற்றத்தை தவிர்த்து பார்த்தால், நேர்மையானவர்கள், வெள்ளந்தி மக்கள். கொடுத்த வாக்கை காக்க களவுக்கு செல்லாமல் பட்டினியாக கிடக்கின்றார்கள், கோவில் திருவிழாவிற்கு மாடு அணைய செல்கின்றார்கள் அதில் உயிர் போனாலும் அது கடவுள் காரியம் என்றே அவர்களுக்கு படுகின்றது, வீடு தீ பற்றி எரியும் போது தங்கள் உயிரை மதிக்காமல்  துணிச்சலாக உள்ளே இறங்கி சிக்கியவர்களை காக்கின்றார்கள். ஊருக்கு உள்ளே நுழைந்த காவலர்களை கொடுரமாக கொலையும் செய்கின்றார்கள். 

தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது, எப்படி சூழல் மாறுகின்றது என்பதை உணராமல் இருக்கும் ஒரு சமூகம் எப்படி பட்ட வீழ்ச்சியை சந்திக்கும், கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்றுதான் நினைக்க வைக்கின்றது. தங்களை ஏமாற்றி ஒருவன் பிழைக்கின்றான் என்பதைக் கூட உணராமல் இருப்பது வெள்ளந்திதனமல்ல. ஆனால் அப்படித்தான் இருந்துள்ளார்கள் என்றால் என்ன செய்ய

நாவலில் வரும் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவர்கள் ஒரு வேட்டை சமூகம் என்கின்றார். ஆதியில் அனைவரும் அப்படித்தானே, அதில் இவர்கள் மட்டும் எப்படி களவில் இறங்கினார்கள் என்பது அழுத்தமாக இல்லை. காவல்கோட்டத்தில் இருக்கும் அதே பிரச்சினைதான், அவர்கள் ஏன் கள்வர்களாக ஆனார்கள் என்பதைப் பற்றி சொல்லாமல், அது அவர்களின் தொழில் என்றே சொல்லும் போது களவை தடுக்க ஆங்கிலேயர்கள் எடுக்கும் முயற்சி நேர்மையானது என்றே தோன்றுகின்றது.  

களவை தடுக்க ஆங்கிலேயர்கள் கை கொண்ட முறைகள் மீதுதான் விமர்சனங்களை வைக்க முடியும். இரண்டு கிராமத்தவர்களை மோத விடுவது, வன்முறை மூலம் அடக்க முற்படுவது, இது எல்லாம் ஒரு முரட்டு சமூகத்தை அடக்குவதற்கு பதிலாக தூண்டுவதாகவே இருக்கின்றது. இறுதிப்பகுதியில்தான் அந்த கள்வர்கள் மீது பரிதாபம் தோன்றுகின்றது, அந்த வகையில் ஆசிரியருக்கு வெற்றிதான்.   நாவல் ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக போனாலும் பின்னால் விறுவிறுப்பாக செல்கின்றது, ஆனால் இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்றே இறுதியில் தோன்ற வைக்கின்றது. சம்பவங்கள் எல்லாம் அழுத்தமாக இல்லாமல் மேம்போக்காக இருப்பது போன்றே தோன்றுகின்றது.

இந்த கிராமத்து நாவலில் சம்பந்தமேயில்லாத ஒரு கிளைக்கதை வஜ்ராயினி கதை, நாகமுனி, ஹசார் தினார், புதையல் என்று அது ஒரு பாட்டையில் போகின்றது. ஆசிரியர் எதை நினைத்து அதை எழுதினாரோ, என்னைப் பொறுத்தவரை அவர் நினைத்ததை வாசகனிடம் சேர்க்கவில்லை அல்லது எனக்கு அது சுத்தமாக புரியவில்லை. அது பாயசத்தில் விழுந்த கடுகு மாதிரி கிடக்கின்றது.  

ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல், அது சில இடங்களில் தெரிகின்றது. பாரதிராஜா, பாலா போன்றவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்த நாவல், காரணம் தெரிந்ததுதான். 

தவறவிடக்கூடாத நாவல் என்று இல்லை, ஆனால் என் படித்தோம் என்று நொந்து கொள்ள வைக்காத நாவல். வாங்கியதற்கு வருத்தப்பட வைக்காது. கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக