07 ஜனவரி 2022

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

குடகும் பெரும்பாலும் தனித்தே இருந்து இருக்கின்றது. எந்த மன்னரும் அதை முழுவதும் தன் ஆளுமைக்கு கீழே கொண்டு வர  முடிந்ததில்லை. அவர்களது நிலப்பரப்பே அவர்களை பாதுகாத்து கொண்டு வந்துள்ளது. குடகை சுற்றி பல அரசுகள் இருந்தாலும், குடகர்கள் சுதந்திரமாகவே இருந்து வந்துள்ளனர். அப்படி இருந்த குடகு கடைசியில் ஆங்கிலேயர் கைவசம் சென்றது. குடகின் கடைசி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன். அவனது மோசமான ஆட்சியினால், அதைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து ஆட்சியை கைப்பற்றினர். அந்த சரிவைப் பற்றி பேசுவது இந்த நாவல்.

வழக்கமாக நாம் படிக்கும் சரித்திரக் கதைகள், ஒரு அரசனின் சாதனையை, பொற்கால ஆட்சியை போற்றுவதாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் கற்பனையாகவே இருக்கும். புலிகேசியை நரசிம்மன் வென்றான் என்ற ஒரு வரி ஒரு நாவலை உண்டாக்கலாம். கல்கி, சாண்டில்யன் வகுத்த வழியிலேதான் பெரும்பாலன சரித்திர கதைகள் வந்துள்ளன. விலக்குகள் சில பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், ரத்தம் ஒரே நிறம், டணாய்க்கன் கோட்டை போன்றவை. இந்த நாவல் சரித்திரம் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசலாம் என்று காலத்தாலும், சூழ்நிலையாலும் வீழ்ந்த ஒருவனின் கதையைப் பேசுகின்றது.

குடகின் அரசு என்பது அங்கிருக்கும் குடகு மக்களால் அமைக்கப்படுவது. குடகின் அரசர்கள் லிங்கம் கட்டிக் கொண்ட சைவர்கள். லிங்காயத்துகள். ஆனால் அங்கு பெரும்பாலனவர்கள் குடகர்கள், குடகர்கள் ஆட்சி பொறுப்புக்கு வருவதில்லை. குடகர்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசானாக இருந்தது இல்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம். குடகின் கடைசி சக்தி வாய்ந்த அரசன் தொட்ட வீர ராஜேந்திரன். அவரது காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சிமுறை இருந்து வந்துள்ளது. அவருக்குப் பின்னால் அவரது மகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணம், ஆனால் அதற்கு பதிலாக அவரது சகோதரன் லிங்கராஜன் ஆட்சிக்கு வருகின்றார், அதற்கு பின்னர் அவரது மகன் சிக்க வீர ராஜேந்திரன். பெரும்பாலான சம்பவங்களுக்கு சரித்திர ஆதாரங்கள் உண்டு. கதைக்காக சில  கற்பனை பாத்திரங்களும் உண்டு.

சமீபத்திய சரித்திரம் என்பதாலும், ஆங்கிலேயர்களின் அனைத்தையும் ஆவணப்படுத்தும் நடைமுறையாலும் பல சம்பவங்கள் சரித்திர பூர்வமானவை என்று நம்பலாம். 

ஹைதர் அலி, திப்பு சுல்தான் இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் என்றே கற்று கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் மைசூர் மன்னரின் கீழ் பணியாற்றி, பின்னர் மைசூரை கைப்பற்றினார்கள். குடகின் மீது படையெடுத்து அங்கு பல அட்டூழியங்களை செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மைசூர் மன்னர்கள் சார்பாக நிற்பதாக உள்ளே வந்த ஆங்கிலேயர்கள், மைசூரை தங்கள் வசம் வைத்து கொண்டனர், பின்னர் உடையார் வம்சம் அதை பெற்றது. 

குடகில் நடந்தது கிட்டத்திட்ட அதே. ஆங்கிலேயர் உதவியுடன் தொட்ட வீர ராஜேந்திரன் ராஜ்ஜியத்தைப் பெற்றாலும்,ஆங்கிலேயர்கள் அங்கு அதிகாரம் செலுத்தவில்லை. நட்பாக இருந்து வந்துள்ளனர். சிக்க வீர ராஜேந்திரனின் மைத்துனன் சென்ன பசவன் ஆங்கிலேயர் உதவியை நாட, உள்ளே நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர். இதற்கு மிகவும் உதவியாக இருந்தது சிக்க வீர ராஜேந்திரன்தான். அவனது துர்நடத்தை மக்களிடமும், உறவினர்களிடமும், அதிகாரிகளிடமும், குடகர்களிடமும்  அவனிடமிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தை உண்டாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் குடகை கைப்பற்றி சிக்க வீரனை வேலூருக்கு நாடு கடத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து காசிக்கு அனுப்புகின்றனர். அங்கு அவன் மனைவி காலமாகின்றாள். சிக்க வீர ராஜனின் மகள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறி லண்டன் சென்று ஒரு ஆங்கிலேய கேப்டனை மணந்து கொள்கின்றாள். அந்த கேப்டன் இவர்களின் ராஜ குடும்பத்து நகைகளுடன் செல்லும் போது மாயமாகின்றான்.  புட்டவ்வா என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண்ணின் மகள் எடித் சாது, அவளது அத்தையால் வளர்க்கப்படுகின்றாள்.

நாவலில் வரும் பல கடிதங்கள் ஆவணப்படுத்தப்பட்ட கடிதங்களாக இருக்க வேண்டும், அந்த காலத்தில் ஆங்கிலேயர்களிடம் மக்களுக்கு எப்படி ஒரு மரியாதை வந்தது என்பதை அந்த கடிதங்கள் விளக்குகின்றன. மிக மரியாதையான மொழியில், தேன் தடவி எழுதப்பட்ட கடிதங்கள், அவர்கள் செய்வது எல்லாம் மக்களின் நன்மைக்கே என்று அனைவரையும் நம்ப வைத்திருக்கும். அதிகார கைப்பற்றலுடன், அவர்களின் மதமாற்ற வெறியும் நாவலில் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. விவாதத்திற்கு வரும் பாதிரியார், கேள்விகளை கேட்டுக் கொண்டே வரும் போது, அவரை பதில் கேள்வி கேட்கும் போது தடுமாறுகின்றார், கிறிஸ்துவத்தை கேள்வி கேட்க அவர்களது ஒரு நூலை முழுவதும் படித்தால் போதும், ஆனால் இந்து மதத்தை கேள்வி கேட்க எத்தனை நூல்களை படித்து தேற வேண்டும். ஒன்றுமில்லாமல் அரைகுறையாக உளறுவதும் இன்றும் தொடர்கின்றது.

இந்திய ஆட்சிமுறையில் பெண்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மகாபாரத காலத்திலிருந்து பெண்கள் ஆட்சியில் பங்கு வகித்தே வந்துள்ளனர். சமீபத்திய ஜமின்தார் காலம் வரை, பெண்களுக்கான பங்கு உண்டு. இதிலும் பல பெண்கள். தொட்ட வீரன் தன் மகளுக்கே ஆட்சியை தர எண்ணுகின்றான், லிங்கராஜனின் மகள் தேவம்மாவும் ஆட்சியை அடைய எண்ணுகின்றாள். சிக்க வீரனின் தொல்லை தாங்காமல், மந்திரிகள் அவனது மனைவியை ஆட்சி பொறுப்பை ஏற்க அழைக்கின்றனர், ஆங்கிலேயர்களும் சிக்க வீரனின் மகளை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவதாக கூறியே உள் நுழைகின்றனர். இறுதியில் அதுவும் நடக்காமல் அந்த பெண் லண்டனில் சென்று வாழ்கின்றாள்.

சிக்க வீர ராஜேந்திரம் மீது ஒரு பரிதாபத்தை உண்டாக்கிவிடுகின்றது. ஒரு காலகட்டத்தின் கடைசி திரி. காலம் மாறிக் கொண்டு வருவதை முன்னரே உணர்ந்து மாறுபவனே பிழைக்க முடியும். சிக்க வீரன் அந்த மாற்றத்தை உணராது தவறு மேல் தவறு செய்வதைப் பார்க்கும் போது ஒரு பரிதாபம் வருகின்றது. 

நாவலில் அதீதமான வர்ணனைகள், காடு மலை பற்றிய விவரிப்புகள் எல்லாம் கிடையாது. வெகு இயல்பாக ஒரு கதையை சொல்லும் நடை, இயல்பான உரையாடல்கள், சின்ன சின்ன விஷயங்கள்தான் இது மொழிபெயர்ப்பு என்பதை உணரச்செய்யும். சரித்திர பாத்திரங்களுடன் உண்மை பாத்திரங்களும் கலந்துதான் நாவல் படைக்கப்பட்டிருகின்றது. வழக்கமான சரித்திர கதைகளில் வரும் இரும்பு சலாகை மார்பு கொண்ட நாயகன் கிடையாது, வெகு இயல்பான பாத்திரங்களே. 

நமது கற்பனைப்படி அரசன் நினைத்தால் எதுவும் செய்யலாம், இருண்ட நிலவறைகளில் பொன்னும் மணியும் கொட்டி கிடக்கும், கை தட்டினால் நூறு பேர் வருவார்கள். இந்த நாவலைப் படித்தால் அது எல்லாம் மறையும், அரசனுக்கு கடன் தரவும் செட்டியார்கள் தேவை (கட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஆங்கிலேயர்கலை எதிர்க்க பலரிடம் கடன் வாங்கினார் என்று எங்கோ படித்த நினைவு), அரசாங்கத்தின் செலவு தனி, அரசனின் செலவு தனி. ராணி வாசத்தின் செலவுக்கு அரசு குறிப்பிட்ட அளவே பணம் தரும், அதிகம் போனால் நகையை விற்க வேண்டியதுதான், அரசனாக இருந்தாலும் பெரியவர்கள் பேச்சுக்கு காது கொடுத்து கேட்கத்தான் வேண்டும், மந்திரிகளிடம் முறைத்து கொண்டாலும், அவர்கள் மீது கோவப்பட்டாலும் ஆட்சி நடத்த அவர்களின் தயவு தேவை. இது எல்லாம் சரித்திர நாவகளில் புதிதான விஷயம் இல்லையா?

தமிழில் ஹேமா ஆனந்த தீர்த்தனால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிறப்பான மொழி பெயர்ப்பு. விலை..., விலையை கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 32, சரியாகத்தான் உள்ளது முப்பத்திரண்டு ரூபாய். மிகப்பழைய பதிப்பு, இப்போது எங்காவது கிடைத்தால் உடனே வாங்கி வைத்து கொள்ளுங்கள். 

முன்னுரையில் கன்னட இலக்கியத்தின் வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

நாவலின் பிற்சேர்க்கை சுவாரஸ்யமானது, மாஸ்தி ஐயங்கார் அவரது நண்பருடன் இந்த நாவலைப்பற்றி விவாதித்துள்ளார், அந்த நண்பர் லண்டன் சென்ற போது அவர் மைசூரைப் பற்றி பேசுவதை கேட்ட ஒருவர் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் சிக்க வீர ராஜேந்திரனின் வாரிசு. நண்பரிடம் பல ஆவணங்களை காட்டியிருக்கின்றார் அவர். அவர் கூறியது "அனைத்தும் சரியாக நடந்திருந்தால் குடகு என்னுடையதாக இருந்திருக்கும்". 

ஜெயமோகனின் மதிப்புரை இன்னமும் பல விஷயங்களை விளக்குகின்றது. 

எழுத்தாளர் வா.மணிகண்டனின் மதிப்புரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக