09 பிப்ரவரி 2022

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது. 

சினிமா உலகை சேர்ந்தவர்கள் என்னும் போது இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யம், பிரபலம் என்பதால் மட்டுமல்ல. அங்கு இருக்கும் நிலையற்ற தன்மை வேறு எந்த தொழிலும் இருக்காது. உதாரணம், எம்ஜிஆர், சினிமா உலகை ஆட்டிப்படைத்தவர். அவருக்காக அனைவரும் காத்து கிடந்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவரே ஒரு காலத்தில் தன் சினிமா வாழ்வை தக்க வைக்க போராடினார் என்றும், ஒரே ஒரு வெற்றியை சந்திக்க தடுமாறினார் என்பது நமக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. அதில் புழங்கும் பெரும் பணம், கருப்பு பணம், பலரின் கூட்டு முயற்சியால் நடப்பது, மற்ற தொழில் மாதிரி ஒரு திட்டம் போட்டு வைத்தால் அப்படியே நடக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். அது மாதிரியான துறையில் நடக்கும் சம்பவங்கள் அதிக சுவாரஸ்யமானவையாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் ரஜினி, கமல் காலத்திற்கு முற்பட்ட தகவல்களே அதிகம். சர்ச்சைகளை பெரும்பாலும் தவிர்த்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி கதை எல்லாம் கேள்வி பட்டிராதது. எம்.ஆர். ராதா சினிமாவை விட நாடகமே முக்கியம் என்றிருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா தேவை என்று தன்னுடை நாடகத்தை எல்லாம் விட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தியிருக்கின்றார், அஞ்சலிதேவி ஒரு அழுகாச்சி நடிகை என்றுதான் தெரியும், ஆனால் அவர் நடிகர் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியிருப்பது எல்லாம் ஆச்சர்ய தகவல். அன்றிருந்த கலைஞர்களின் அர்பணிப்பே அவர்களுக்கு அந்த உயரத்தை தந்துள்ளது.  சில கலைஞர்களைப் பற்றிய சித்திரமும் நமக்கு உருவாகின்றது, அவச்சொல் பேசாத தங்கவேலு, அனைவருக்கும் உதவி செய்யும் ஜெய்சங்கர், திரைவாழ்விற்கு எதிரான நிஜ வாழ்க்கை கொண்ட நம்பியார், எப்போது அலுப்புடனே இருக்கும் வி.கே.ராமசாமியின் ஆரம்ப காலங்கள், நாடக உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யங்கள்.  

இந்த கட்டுரைகளுக்கான பல தகவல்களை அவர் வெவ்வேறு புத்தகங்களில் இருந்தே பெற்றிருக்கின்றார். அதை சில இடங்களில் காணமுடிகின்ற்து. எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் என் பெயர் நாகேஷ், அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், என் நாடக உலக சிந்தனைகள், சொன்னால் நம்பமாட்டீர்கள். இவை பெரும்பாலும் சுய சரிதைகள், இதில் இருக்கும் தகவல்களில் சுவாரஸ்யமானவற்றை தொகுத்திருக்கின்றார். இந்த தொடருக்காக சுமார் 500 புத்தகங்களை படித்ததாக கூறியிருக்கின்றார்.  இன்னமும் இரண்டு மூன்று பாகங்கள் எழுதலாம், அந்தளவிற்கு விஷயங்கள் இருக்கும். படித்ததை எழுதுவதை விட அவரது அனுபவங்களை எழுதினாலே அதுவே மிக சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும்.

கிடைத்தால் வாங்கி ஜாலியாக படியுங்கள். தமிழ் திரைப்பட உலகைப் பற்றிய மற்றொரு சித்திரம் கிடைக்கும்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் அவர்களது மூன்றவது ஆண்டு நிறைவை ஒட்டி அளித்த 30% தள்ளுபடி விலையில் வாங்கியது. புத்தகத்தின் தரம் மிக சிறப்பாக உள்ளது. பா.ரா புத்தகங்களை அச்சிட்டது போக நேரம் கிடைக்கும் போது அச்சடித்த சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. அடுத்து விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வாங்கி பார்க்க வேண்டும்.  

2 கருத்துகள்:

  1. அவருடைய யு ட்யூப் பேட்டிகள் பல நானும் பார்த்திருக்கிறேன்.  மற்ற புத்தகங்களிலிருந்து எடுத்து திரட்டியும் சில தகவல்கள் என்பது நெருடுகிறது.  நாம் ஏற்கெனவே படித்தவையாகத்தானே இருக்கும்!  விஷ்ணுபுரம்?  வாங்கி எட்டு ஆண்டுகள் ஆகின்றன.  ஏனோ படிக்கவே ஓடவில்லை.

    பதிலளிநீக்கு
  2. அவர் 500 புத்தகங்கள்லிருந்து திரட்டியதாக சொல்கின்றார். விஷ்ணுபுரம் புத்தகமல்ல, விஷ்ணுபுரம் பதிப்பகம். ஜெயமோகனின் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பதிப்பகம், அவரது புதிய புத்தகங்கள் அனைத்தையும் அப்பதிப்பகம்தான் வெளியிடுகின்றது.

    பதிலளிநீக்கு