08 மார்ச் 2022

பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது. 

ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும். 

கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட்  போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் "உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும் தெரியுமில்ல" என்று அவர் மனைவி சொன்னதாக எழுதியிருந்தார், அது உண்மையோ, புனைவோ தெரியாது, ஆனால் அருண்மொழி நங்கை ஜெயமோகன் போல எழுதவில்லை, அவருக்கென்று ஒரு தனி நடையை உண்டாக்கி கொண்டுள்ளார். பலர் அருண்மொழியை பற்றி கூறும் போது ஜெயமோகனின் பாதிப்பு அவரிடம் இல்லை என்பதை முக்கியமாக கூறியிருந்தனர். அவர் ஜெயமோகனை படிப்பதற்கு முன்பே பல எழுத்தாளர்களை படித்திருக்கின்றார், ஜெயமோகனை சந்திக்கும் முன்பே அவரிடம் ஒரு எழுத்தாளர் உருவாகியிருப்பார் போல. 

காவிரிக்கரையின் இசைப் பற்றி எழுத ஆரம்பித்து அவரது சிறுவயது நினைவுகளைத் தொடர் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அனைத்து கட்டுரைகளும் சிறுகதை வடிவில் கச்சிதமாக அமைந்துள்ளன, ஒரு நாவலின் பகுதியாகவும் கொள்ளலாம். அதற்கு காரணம் அங்கங்கு தோன்றும் சிறுசிறு புனைவு தருணங்கள். இது போன்ற வாழ்க்கை குறிப்புகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானவை. புனைவு கலந்து இருந்தாலும் அதுவும் சுவாரஸ்யமானதுதான். எது புனைவு என்பதை கண்டறிவது கூட சுவாரஸ்யமானது. 

திருச்சியை தாண்டி காவேரி பாயும் ஊர்க்காரர்களுக்கு இசை ரசனை என்பது இயல்பாக இருக்கும் போல. அங்கு வாழ்ந்தால் மட்டுமே வரும் என்று நினைக்கின்றேன். உறவினர்களில் தஞ்சாவூரிலிருந்து வந்தவர்களுக்கு அந்த இசை ரசனை இருக்கும், திருமணமான பின் அல்லது  தொழில் நிமித்தம் வேறு எங்கோ இருக்க வேண்டியிருக்கும். அதில பலருக்கு அவர்களின்  அடுத்த தலைமுறைக்கு அந்த ஞானம் இருப்பதில்லை. மரபணு வழியாக வரும் இசை ரசனை போல, இது மண்ணும், நீரும் வழியாக வருவது போல. கட்டுரையில் ஏழு வயது முதல் பத்து வயது வரை கேட்கும் இசை நம் மனதில் பதிவாகின்றது என்கின்றார். உண்மைதான், என் பக்கத்து வீட்டு பாட்டி தஞ்சாவூர். நன்றாக பாடவும் செய்வார்கள். அவர்கள் வீட்டில் நான் கேட்ட, மகாராஜபுரம் சந்தானமும், பாலமுரளி கிருஷ்ணாவின் ராமதாச கீர்த்தனைகளுமே என்னுடைய இசை ரசனைக்கு அடிப்படை. அருண்மொழியின் இசை ரசனை, ஒரு தஞ்சாவூர் அய்யரிடம் இருந்து ஆரம்பிக்கின்றது. அருண்மொழியின் ரங்கண்ணா. 

ஒவ்வொருவருக்கும் ரசனைகள் என்பது அவர்களது சிறுவயது சூழலில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வளரும். சிலரின் ரசனை மேலே எழுந்து செல்லும் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று. சிலருக்கு தேங்கிவிடும். அருண்மொழியின் இசை, இலக்கியம், சினிமா ரசனைகள் எப்படி ஆரம்பித்து, எப்படி வளர்ந்தது என்பதை அழகாக எழுதியுள்ளார். பலருக்கு இதில் அனைத்திலும் தேங்கிப் போகும் அபாயம் உண்டு. எனக்கு சினிமா இசையில் இளையராஜாவை விட்டு வேறு எதையும் கேட்கப் பிடிப்பதில்லை. இந்துஸ்தானி சுத்தம். கர்நாடக இசையும் ஒரு குறிப்பிட்ட பாடகர்கள் என்றே நின்று விட்டது. இருந்தும் சில சமயம் திடீரென்று புதிதாக யாரையாவது தொடர்ந்து கேட்கத் தோன்றும். பண்டிட் பீம்சேன் ஜோஷியின் கன்னடப்பாடல்கள், வெங்கடேஷ் பண்டிட், ஜஸ்ராஜ் பண்டிட்டின் ஸ்லோகங்கள் என்று ஒரு இரண்டு மாசம் ஓடும். ஆனால் படிப்பதில் தடை ஏதுமில்லை. என்ன சிலரின் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவதில்லை, ஓசியில் கிடைத்தால் படிப்பது இல்லை விடுவது. 

சினிமாவை பற்றி ஒரு கட்டுரையில் ஜாலியான சினிமாவிலிருந்து எப்படி சீரியஸான சினிமாவிற்கு மாறினார் என்பதை பற்றி எழுதியிருக்கின்றார். இலக்கியம். ஜெயமோகனின் ஐயாயிரம் புத்தகம் என்னும் புனைவை நம்பியவர்க்கு 500 புத்தகங்கள் பரவாயில்லை தானே. ரஷ்ய இலக்கியங்களைப் பற்றி வெகுவிரிவாக எழுதியுள்ளார். சிறுவயது புரட்சி நம்பிக்கைகளைப் பற்றி எழுதும் போது ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கின்றார்களே என்று தோன்றியது. அருண்மொழி நங்கை என்னை விட பன்னிரெண்டு வயது மூத்தவர். அவர் குறிப்பிடும் அந்த வயதில் எங்களுடைய ரசனைகள் எல்லாம் மாறியிருந்தன. புரட்சி எல்லாம் பக்கம் ஒதுங்கி கழகங்கள் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என்று மாறிவிட்டது. நான் வளர்ந்தது எல்லாம் துக்ளக் படித்து.  ஒரு பத்தாண்டு பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

அவரின் ரசனைகள் பற்றிய கட்டுரைகள் தவிர்த்த கட்டுரைகள் அவரது குடும்பத்தாரைப் பற்றியும் அவரின் ஊரார் பற்றியும். அவரது குடும்பம் பற்றிய அழகான சித்திரத்தை நமக்குள் உருவாக்குகின்றார். திராவிடர் கழக பற்று கொண்ட அப்பா, அதை கண்டு கொள்ளாமல் கோவிலுக்கு செல்லும் பாட்டி. அந்த பாட்டி ஜாலியான பாட்டி போல, இரவில் தலையணையை செட் செய்து விட்டு பேத்தியோடு திருவிழாவில் படம் பார்க்க செல்லும் பாட்டி எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்பார்க்கும் படலம் கட்டுரை பிரமாதம், ஒரு சிறுகதைக்கான திருப்பங்களை கொண்டது. நிஜவாழ்வில் நடக்கும் பல சம்பவங்கள் கற்பனைக்கும் எட்டாது. அரசி என்னும் தலைப்பில் வரும் கட்டுரையில் வரும் பாட்டியும், மற்ற கட்டுரைகளில் வரும் பாட்டியும் ஒன்றா என்று தெரியவில்லை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு என் பாட்டி நினைவுதான் வந்தது. அந்த தலைப்பு என் பாட்டிகும் பொருந்தும். என்றாவது என் பாட்டியை பற்றி எழுதினால் அதுதான் தலைப்பு. 

இந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர அந்த வயதிற்கு எது தோன்றுமோ அவ்வளவே காட்டப்பட்டுள்ளது. சிறுவயது சம்பவங்களை எழுதும் போது எழுதுபவரின் வயது தரும் கற்பனை புதிய கோணங்களைத் தந்துவிடும். அது பெரும்பாலும் இல்லை. அதுதான் இக்கட்டுரைகளில் அந்த போலியான ஏக்கத்தை இல்லாமல் செய்திருக்கின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற நல்ல நாட்களில் அனுப்புவதற்கு என்றே ஒரு டெம்ப்ளேட் இருக்கும், நாங்க சின்னப்புள்ளையா இருந்தப்ப எப்படி கொண்டாடினோம் இப்ப பாரு என்ற புலம்பல், படிக்கும் போதே ஒரு எரிச்சல்தான் வரும். அதற்கு காரணம் அதில் தொனிக்கும் அந்த போலித்தனமான ஏக்கம். இந்த கட்டுரைகளில் அது சுத்தமாக இல்லை. 

சில சொற்பிரயோகங்கள், வரிகளைப் படிக்கும் போது அவை எழுதப்பட்டவை போல எனக்கு தோன்றவில்லை. வாய்மொழியாக கதை சொல்லும் போது வரும் ஏற்ற இறங்கங்களுடன் படிக்கும் போதுதான் அதுபோன்ற வரிகள் வரும். அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. அந்த வயது பெண் சொல்வது போன்றும் வைத்துக் கொள்ளலாம். பழகிய ஊரை விட்டு செல்வது என்பது மிக கடுப்பான விஷயம், அதையும் வெகு இயல்பாக யார் மீதும் குற்றம் சொல்லாமல், புலம்பாமல் அந்த சோகத்தை சில பாராக்களில் கடத்துகின்றார். 

இது போன்ற கட்டுரைகள் நம்முடைய இளமை பருவத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கும். நம்முடைய அனுபவங்களை இந்தப் பக்கங்களோடு உரசிபார்த்து கொள்ளலாம். சிறுவயதில் நமக்கு புரியாத பல விஷயங்கள் இன்று புரியலாம். 

அருண்மொழி நங்கையைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் முதல் புத்தகம் என்று முன்னுரையில் சொன்னதை வைத்துதான் நம்ப வேண்டியிருக்கும். அனைத்து பாத்திரங்களையும் குறைவான வர்ணனைகள் மூலமே நம்முள் வரைகின்றார். காலை ஐந்து மணிக்கே எழுந்து சமைக்கும் அம்மா, பல் பொடி டப்பாவில் தேதி குறிக்கும் அப்பா, அருண்மொழியின் அடிப்பொடி, மனோகர் வாத்தியார், ராவுத்தர், பட்டாணி, சாமியார். குறைவான வர்ணனைகள், உரையாடல்கள் மூலம் ஓவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டும் திறமை பலருக்கு கிடையாது. 

பெரும்பாலான கட்டுரைகள் சிறுவயது நினைவுகளில் ஆரம்பித்து மெதுவாக வளர்ந்து ஒரு சிறுகதைக்கான முடிவுடன் முடிகின்றது. மொத்த கட்டுரையின் சாரத்தையும் ஒன்றிரண்டு வரிகளில் கொண்டு வந்து முடிக்கின்றார். பனி உருகுவதில்லை என்னும் வரி, ருஷ்ய இலக்கியத்திலிருந்து, புரட்சி வேகம், ரஷ்யாவின் உடைவு என்று பலவற்றை இணைக்கின்றது. அந்த முடிவு வரிகளிலிருந்து, கட்டுரையை ஒரு புதிய கோணத்தில் வாசிக்க முடியும். கண் கவர் பூக்களும், சுவையான கனிகளும் இல்லை என்றாலும் அரச மரம் எழுந்து நின்றால் அதுதான் ஊரின் மையம் என்ற பொருளில் முடியும் கட்டுரை பேசுவது பட்டாணி என்பவரைப் பற்றி, ஒன்றிரண்டு துணி மூட்டைகள், சில பாத்திரங்கள், கண் தெரியாத மனைவி. ஊரில் கூலியாக தரும் உணவாலும், ஒன்றிரண்டு ரூபாய் கூலியாலும் வாழும் பட்டாணியின் கதை.   

அடுத்து ஒரு நாவல் எழுதப்போவதாக படித்தேன். தஞ்சாவூர் கதையாக இருக்கட்டும். இதுவே ஒரு முன்னூறு பக்க புத்தகம். நாவல் அதை விட பெரிதாக இருந்தாலும் துணிந்து வாங்கலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக