26 மார்ச் 2022

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

முன்னுரையில் முன்பு எழுதிய அனைவரையும் வாரிவிட்டாயிற்று, அப்ப என்ன செய்யலாம் 

எல்லார்க்கும்  தெரிந்த ஒரு நாவலை  கொத்து புரோட்டா போடலாம். சாண்டில்யன், அவரின் அனைவருக்கும் தெரிந்த நாவல் கடல்புறா, அது வெறும் சாகசம்தான்.  அதில் கை வைத்தால் ஆபத்து. 

பெஸ்ட் பொன்னியின் செல்வன் தான். 

வித்தியாசமாக எப்படி எழுதுவது. 

யார் எல்லாம் அதில் கெட்டவர்கள் ரவிதாசன், பழுவேட்டரையர்கள், சம்புவரையர்கள். 

யார் யார் எல்லாம் நல்லவர்கள் குந்தவை, வந்தியத்தேவன், அருண் மொழி வர்மன். 

பரோட்டாவின் முதல் படி, கெட்டவர்களை நல்லவர்களாவும், நல்லவர்களையும் கெட்டவர்களாவும் மாற்று. 

குந்தவை வில்லி. சீரியல் யுகம் அல்லவா, அனைத்து சீரியலிலும் பெண்கள்தானே அனைத்து வில்லத்தனத்தையும் செய்கின்றனர், அதனால் குந்தவை எதை செய்தாலும் நம்புவார்கள் பிரச்சினையில்லை. 

அருண்மொழி வர்மனை வில்லனாக்கினால், கெட்ட பெயர் கிடைக்கும். அதனால் அவனை விட்டு விடலாம்.

வந்தியத்தேவனை கொடுர வில்லனாக்கி விட்டால் பிரச்சினையில்லை. என்ன பொ.செ வாசகர்கள் கடுப்பாவார்கள். முன்னுரையில் அந்த வாசகர்கள் கண்ணாடியை கழட்டுங்கள், மனதை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், நாலு முறை நன்றாக மூச்சு விட்டு கொள்ளுங்கள், திறந்த மனதுடன் படியுங்கள், கதவு ஜன்னல் எல்லாம் திறந்து விட்டு படியுங்கள் என்று ஒர் டிஸ்கி போட்டால் போயிற்று.

பொன்னியின் செல்வனிலிருந்து சில சம்பவங்களை எடுத்துக் கொண்டு ரோஷமோன் அல்லது விருமாண்டி பாணியில் இன்னொரு கோணத்தில், கொஞ்சம் கோணலாக இருந்தாலும் பரவாயில்லை பார்த்து எழுதுவோம். 

அருண்மொழி வர்மன் தண்ணீரில் விழுந்து பிழைத்தான் அதனால் அவனுடைய பெயர் பொன்னியின் செல்வன்.

இது கல்கியின் புனைவு ஆச்சே

இருந்தாலும் கல்கி எழுதி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதால், அதையும் ஒரு ஆதாரமாக கொள்ளலாம். தப்பில்லை. சரி.

ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டுமே, சரி தள்ளி விட்டது குந்தவை. 

பயங்கர திருப்பமாக உள்ளதே. 

இன்னொரு திருப்பத்தையும் வைப்போம், விழுந்தது ஒரு குழந்தை, கிடைத்தது இன்னொரு குழந்தை. 

யாரும் கண்டுபிடிக்க மாட்டார்களா, 

அது எப்படி, அரண்மனையில் அரசனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், குழந்தைகள். எல்லார் முகத்தையும் நினைவில் வைக்க முடியுமா, கண்ணாடியை கழட்டி விட்டு படியுங்கள். இன்னொரு பகீர் திருப்பம் உள்ளது.

தண்ணீரில் மாறிய குழந்தை குந்தவையின் குழந்தை. 

வெய்ட். குந்தவை சிறு பெண்ணல்லவா எப்படி குழந்தை. 

குந்தி இல்லையா, குந்திக்கு துர்வாசர் கொடுத்த மந்திரம் ஓலை வழி குந்தவைக்கு கிடைத்தது. 

கரெக்ட் லாஜிக். 

இப்பதான் கண்ணாடி இல்லாமல் கண் தெரிகின்றது. 

அப்பா யாரு, 

குந்தவையின் கணவன்தான், 

யாரு வந்தியத்தேவனா, 

ஆமாம் அது குந்தவைக்கே தெரியாது. குந்தவையை ஆட்கொண்டது அவன்தான். 

ஆட்கொண்டது அப்படின்னா, 

யோவ் இது டீசன்டான சரித்திர கதை, அவ்வளவுதான் சொல்ல முடியும். போய் முன்னுரைய படி. அது மாதிரி கதைன்னு நினைச்சியா. முதல்ல இது உனக்கு எழுதின கதையேஇல்லை. பின்ன, கரிகாலனுக்கு எழுதினது.போனா போகுதுன்னு படிக்க சொன்னா, 

சாரி சாரி

பரோட்டாவின் அடுத்த படி

கரிகாலன கொன்னது ரவிதாசன் இல்லை. குந்தவையும் வந்தியத்தேவனும்

அப்ப ஏன் ரவிதாசனனின் சொத்துக்களைப் பறித்து விரட்டுனாங்க. 

அது வந்து ராஜராஜனுக்கு அவன பிடிக்கல, அண்ணன கொன்னிருந்தா அவன ராஜராஜன் கொன்னிருப்பானில்ல கொல்லலியே, அப்ப அவன் கொலைகாரன் இல்லையே. 

அப்ப குந்தவை கொன்னிருந்தா குந்தவைய கொன்னிருப்பான் அப்ப குந்தவையும் கொலைகாரி இல்லையே. 

ரவிதாசன் கொன்னிருந்தா அவனுக்கு ஏன் சோழ அரசுல பதவி கொடுத்தாங்க, பிரும்மராயர் பட்டம் பிராமணனுக்கு தான கொடுப்பாங்க, 

ஆமாம். 

ரவிதாசன் முதலாம் ஆதித்த சோழனின் வாரிசு அதனாலதான் பதவி கொடுத்தாங்க, 

அப்ப பிராமணன்னு சொன்னது 

அதுவும்தான் பஞ்சவன் பட்டம் இருந்த அரச குடும்பம், பிரம்மராயன் பட்டமிருந்தா பிராமணன். எது சவுகரியமோ அத எடுத்துக்குவோம். 

இது மாதிரி சரித்திர கதைகள்ல ஒற்றர்கள் எல்லாம் உண்டுதானே, 

இது என்ன வழக்கமான சரித்திர கதையா, இது ஒரு சிபிஐ ரிப்போர்ட், ஃஎப்.ஐ.ஆர் மாதிரி. அது எல்லாம் கிடையாது, ஆழ்வார்க்கடியானே ஒரு ஓரத்துல மரதடியில நின்னு துண்ட ஆட்றதோட சரி. டயலாக் எல்லாம் கிடையாது. 

இது என்ன ஒரு பைத்தியம் முருங்கை, முருக்கை எல்லாம் சொல்லுதே. 

இதுதான் கதையோட ஆப்த வாக்கியம்,முருங்கை முருக்கை இல்லாம கதையே இல்ல, முழுசா படி புரியும்

அப்ப ஆதித்த கரிகாலன காப்பத்துற மர்ம உருவம் எல்லாம்.  ,

யார் கண்ணாடிய போட சொன்னது, கண்ணாடிய கழட்டு முதல்ல. 

கண்ணாடிய கழட்டி பத்து பாரா ஆச்சு

அப்படியா சரி சரி, சரித்திரப்படி பாத்தா ஆதித்த கரிகாலன் கடம்பூர்ல சாகனும், அவன் பாட்டுக்கு வைர வியாபாரி வீட்டுல செத்து தொலைஞ்சா என்ன செய்ய, அதுதான் காப்பத்த வேண்டியதா போச்சு. 

இந்த நந்தினி பாத்திரம், 

அப்படியேவா வைக்க முடியும், நந்திபுரகுல விளக்கு. நந்தினி மாதிரி இல்ல. இது யார் தெரியுமா ராஜாதித்தயரோட காந்தர்வ மனைவிக்கு பிறந்த மகள், இவளுக்கு ஒரு மகள் நந்தாவிளக்கு, கடைசில எரியப் போகும் என்பதற்கான குறிப்பு, 

இதுல யார் நந்தினி, 

யாரா வேண்டுமானாலும் இருக்காலாம். கல்கியத்தான் கேக்கனும். 

இது எல்லாம் அந்த மர்ம உருவத்துக்கு எப்படி தெரியும், 

அது எப்படி தெரியாம  போகும், அந்த உருவம் தான் கண்டராதித்தர் இது வழக்கமான சரித்திர கதை இல்லன்னு எத்தன தடவ சொல்றது. 

ஒரே குழப்பமா இருக்கே, கதைய ஒரு தடவை முழுசா சொல்

குந்தவைக்கு பத்து வயசு இருக்கும் போது அவளுடைய வயத்துல சங்கு ரேகை இருப்பதால் அவள் ஆழ்வார்ன்னு அழைக்கபடுறா, தன் அண்ணன அரசனாக்க சூர்ய மந்திரத்தை ஜபிச்சு ஒரு  வருஷம் சண்டி விரதம் எடுத்து மறைவா போய்ட்டு குழந்தைய பெத்துக்குறா. அந்த் குழந்தைக்கு அப்பா ஆதி சோழ வம்ச இளவரசன்னு குந்தவை நினைச்சுக்குறா, 

அப்ப அவளுக்கு என்ன வயசு இருக்கும்? 

வருஷ கணக்கு போட்டா பன்னிரெண்டு, பன்னென்டு வயசுல குழந்தையா? கதை ஓடும் போது அது எல்லாம் பாக்க கூடாது. 

ஓகே. 

நல்லவேளையா அதே சமயம் குந்தவை அம்மாவுக்கும் குழந்தை பிறக்குது. அது மட்டு பிறக்கலன்னா கதையே நடந்திருக்காது. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் கண்டராதித்தர் காணம போறார், ஆனா அவர் காணம போகல, எல்லா இடத்துக்கும் வர்றார், போறார், எல்லாம் அவருக்குதான் தெரியும். அப்படி மாறு வேஷத்துல வர்றது கண்டராதித்தர்ன்னும் எல்லார்க்கும் தெரியும். இருந்தாலும் அவர் காணமல் போனவர்தான்.  அவருக்கு அவருக்கும் ஒரு குழந்தை பிறக்குது மதுராந்தகன். அந்த குழந்தையும் கொஞ்ச நாள்ல காணோம் அதனால் அதைப் பத்தி கவலை இல்ல. சுந்தர சோழர் குடும்பத்தோட  படகுல போகும் போது தம்பிய தண்ணில தள்ளி விட்டுட்டு  தன் பையன தண்ணியில இருந்து எடுத்து இதுதான் தம்பி பொன்னியின் செல்வன்னு சொல்றா குந்தவை. ஆனா யாருக்கும் அது தெரியாது, குழந்தை முகத்தை பாத்த கூட கண்டு பிடிக்க முடியாது. 

எப்படி, 

ஏன்னா குழந்தையை வளர்க்றதே குந்தவைதானே. அப்பா அம்மா பாக்கவே மாட்டாங்க, பாத்தாலும் அடையாளம் தெரியாது. 

கதைதான பரவாயில்லை. 

பன்னிரெண்டு வருஷம் கழிச்சு வீரபாண்டியன் மரணம். சம்புவரையர், மணிமேகலை, கந்தன்மாறன், பார்ந்திபேந்திரன், மலையமான் எல்லாம் துணைநடிகர்கள் மாதிரி ஒரு ஓரமா வந்து போறாங்க. ட்விஸ்ட். வீரபாண்டியனை கொன்னது குந்தவை,அதை  பழுவேட்டரையர் கண்டு பிடிச்சி, அருண்மொழிக்கு பதிலா  கண்டாரதித்தன் பையன அரசனாக்குனா விட்டுறேன்னு சொல்றார். குந்தவை ஒத்துக்குறா. ஆனா கண்டராத்தர் பையன் யார்ன்னு பாத்தா அது கண்டராதித்தர் பையன் இல்லை.  அந்த குழந்தையும் மாறியிருக்கு, யார்ன்னு கேட்டா பழுவேட்டையர் பதில் சொல்லாமல் எங்கயோ போய்ட்றாரு.

உண்மையான மதுராந்தகன் என்ன ஆனான்?

யாருக்கு தெரியும்? இல்ல யாருக்கு தேவை? ஆனா, அந்த  கண்டாராதித்தன் பையன் கண்டாராதித்தன் பையனே இல்லை, அது ஒரு டூப்பு. அது கண்டராதித்தர் குழந்தை இல்லை, செம்பியன் மாதேவி குழந்தையும் இல்லை. கண்டராதித்தருக்கு குழந்தையே இல்லை, செம்பியன் மாதேவி கர்பமே ஆகலை.  டூப்பு குழந்தையா பிறந்து, பின்னாடி காணமல் போகி  மாறி வந்த பையன் யாருன்னா அது சுந்தர சோழனோட பையன், அப்ப அருண்மொழி வர்மன், குந்தவையோட பையன். குந்தவை சுந்தர சோழன் பையனுக்கு பதிலா தன் பையன மாத்தினா, அந்த பையன பழுவேட்டரையர் கண்டுபிடிச்சி மதுராந்தகனுக்கு பதிலா மாத்திட்டாரு.  தெளிவா இருக்கு இல்ல

ஓரளவுக்கு இருக்கு, மேல மேல 

இது எல்லாமே காணமல் போய், எல்லார் கூடயும் பேசிட்டு இருக்குற கண்டராதித்தருக்கு தெரியும். அவர் ஒரு சித்தர் ஆனா எல்லார் கண்ணுக்கும் தெரிவார். கதை அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் ஒன்னு ரெண்டு பக்கம் எல்லாரும் என்ன் ஆனாங்கன்னு ஒரு குட்டி மான்டேஜ். கடைசி ஐம்பது பக்கம், குந்தவையோட வாக்கு மூலம். 

அப்ப இந்த சங்கதரான்னா என்ன, 

அது சங்கு இருக்குற மாளிகை. 

அதுக்கும் புத்தக தலைப்புக்கும் என்ன சம்பந்தம், 

கதைல வருது இல்ல. 

கதைக்கு அதுக்கும் என்ன சம்பந்தம், 

அது சரித்திர உண்மை. எல்லார்க்கும் தெரிய வேண்டாமா, 

சரி சரி.

அடுத்த நாவல் என்ன

ராஜேந்திரன் இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சிகிட்டு அப்பா கட்டுன பெரியகோவிலுக்கு போகாம, தானே ஒரு கோவில் கட்டி கும்புட்டான்னு எழுத வேண்டியதுதான். முடிஞ்சா ராஜேந்திரன் ராஜராஜன் பையனில்ல தம்பி அப்பிடின்னு சேர்த்துக்கலாம். 

படுதிராபையான ஒரு கதையை இதுவரை படித்தது இல்லை. படிக்கும் போது நேர்ந்த கடுப்புதான் மேலே. முன்னுரையில் பல எழுத்தாளர்களை மட்டம் தட்டுவது போல எழுதியிருப்பதே முதல் கடுப்பு, அவ்வளவு மட்டம் தட்டுபவர் எழுதியிருக்க வேண்டியது சிக்கவீர ராஜேந்திரன் மாதிரியான நாவல். இதுவல்ல.  நாவலில் நம்பகத்தன்மை என்பது கடுகளவும் இல்லை, கற்பனை என்றாலும் தர்க்கத்தில் அடங்க வேண்டும்.  சாண்டில்யன் சரித்திர கதைகள் என்பது ஃபேண்டசி டைப். பாகுபலி மாதிரி, அவரை கிண்டலடித்து விட்டு இவர் எழுதியிருப்பது, சுத்த அரைவேக்காட்டு நாவல். பன்னிரெண்டு வயது பெண், யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று கொள்வது எல்லாம் படிக்கும் போது எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் என்றுதான் தோன்றுகின்றது. பன்னிரெண்டு வயதிலேயே ஆள் மாறாட்டம், கொலை. 

கரிகாலன் கொலையில் பல அரச குடும்பத்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம், ஏன் குந்தவை, அருண்மொழியே செய்திருப்பார்கள் என்று கூட கற்பனை செய்யலாம். அவர்கள் செய்தார்கள், செய்யவில்லை என்பதற்கு எவ்வித சான்றுமில்லை. பதவி என்பது எதையும் செய்ய வைக்கும். அதை எழுதுவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இது வரை எழுதியவர்கள் எல்லாம் முட்டாள்கள், தான் எழுதியது தான் 100 லாஜிக்கலான தியரி, நடந்திருக்க கூடும், படித்தவர்கள் எல்லாம் இதுதான் உண்மை, குந்தவையை சிறையில் அடைக்க வேண்டும், முடிந்தால் மரண தண்டனை தர வேண்டும் என்று அவரிடம் வந்து வேதனைப்படுவதாக எழுதுவது எல்லாம் ஓவர். அந்தளவிற்கு ஒர்த் இல்லை. 

மாறுபட்ட கோணம் அவசியம், ஆசிரியரின் உரிமை. ஆனால் இந்த நாவல் அதை சொன்ன விதம் தலைவேதனை. ராஜராஜனை கெட்டவனாக்க முடியாது, குந்தவை - ராஜராஜன், குந்தவை - ராஜேந்திரன் பந்தம் என்பது வாசகர்கள் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. குந்தவையை மட்டும் கெட்டவளாக காட்ட இறங்கி,   இறுதிப் பகுதியில் வாசர்களை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே வளவளவென்று எழுதி தள்ளியிருக்கின்றார். பல புத்தகங்களை படித்திருப்பார் போல, தகவல்களை எல்லாம் எங்காவது கொட்ட வேண்டும் என்று கொட்டி தள்ளிவிட்டார். சோழ குல சடங்குகளி புரசமரத்தின் பங்கு, அவர்கள் பயன்படுத்தும் சங்கு, இன்றைய மலேசியா அன்றைய கடாரத்திற்கும் சோழ தேசத்திற்குமான தொடர்பு, இன்றும் அங்கு கிடைக்கும் சோழ குல மிச்சங்கள், அடிகள், பிரான், ஆழ்வார் என்று பெண்கள் அழைக்கப்படுதல் என்று சில சரித்திர ஜிகினாக்களை தூவி அலங்கரிக்கப்பட்ட பழைய பிரியாணி. 

முருங்கை, முருக்கை என்பதை வைத்து கொண்டு பக்கத்தை கொன்றிருக்கின்றார். அதே போன்று அரச குடும்பத்து கிளைகளும், அவர்கள் கை விடப்படுவது, வேட்டையாடப்படுவதும் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள், அதை எல்லாம் எப்படி கையாண்டிருக்கின்றார் என்று படித்தால் கொட்டாவிதான் வருகின்றது. 

இது போன்ற சஸ்பென்ஸ் டைப் நாவல்களில், வாசகனுக்கு கொஞ்சம் இடம் வேண்டும். அவனின் புத்திசாலித்தனத்திற்கு கொஞ்சம் தீனி வேண்டும். சம்பந்தமேயில்லாமல் சம்பவங்களை கொண்டுவந்து, இறுதிப்பகுதியில் அவனை முட்டாளாக்கினால் எரிச்சல்தான் வரும். இது அப்படித்தான் இருக்கின்றது. நாவலின் முடிச்சுகளை போடுவது ஒரு கலை என்றால், அதை வாசகனுக்கும் கொஞ்ச கொஞ்சமாக அதை அவிழ்த்து இறுதியில் ஒரு சின்ன திருப்பத்துடம் முடிக்க வேண்டும், அப்போதுதான் சுவாரஸ்யம். நாவல் முடிவதற்கு பத்து பக்கம் வரை இழுத்துவிட்டு, கடைசி பத்து பக்கம்  குற்றவாளி  வந்து ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி அனைத்தையும் ஒப்பிப்பது எல்லாம் அமெச்சூர்கள் செய்வது. எப்படி முடிப்பது என்று தெரியாமல், ஆசிரியரே வந்து பேசி சரிசெய்வது, நீ என்ன செய்தாய் தெரியுமா என்று ஒரு  பாத்திரம் வந்து பேசுவது. இது எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக். துப்பறியும் கதைகிளிலாவது ஒன்றிரண்டு பக்கம் இருக்கும்,  இதில் வரிசையாக வந்து பக்கம் பக்கமாக வாக்குமூலம் தருகின்றார்கள், க்ளைமாக்ஸ் முடிந்த பின்னரும் க்ளைமாக்ஸ் சரி முடிந்தது என்று பார்த்தால் மறுபடியும். 

பழுவேட்டையரையர் குந்தைவையிடம்  வந்து நீ என்ன செய்தாய் தெரியுமா என்று முடிக்கின்றார், குந்தவை நான் என்ன செய்தேன் தெரியுமா என்று முடித்து இறக்கின்றாள், குந்தவையின் வேலைக்காரி வந்து குந்தவை என்ன செய்தாள் தெரியுமா என்று ஆரம்பித்து முடிக்கும் முன்னரே, வந்தியத்தேவன், அவள் செய்ததை விடு நான் என்ன செய்தேன் தெரியுமா என்று ஒரு பத்து பக்கம். ஒரு வழியாக முடிந்தது என்றால், அருண்மொழி வர்மன் கடல் கடந்து சென்று கொடுத்த வாக்குமூலத்தை ராஜேந்திரன் பார்க்கின்றார். அடுத்த நாவலில், ராஜேந்திரன் கொளுத்திய ஓலைசுவடிகளை குலோத்துங்க சோழன் படிக்கலாம், இல்லை அவன் தெலுங்கன் இல்லையா, சரி ஆசிரியர் நினைத்தால் அவன் வீரபாண்டியனின் கொள்ளு பேரன் என்று இன்னொரு நாவல் எழுதிவிடலாம்.

முன்னுரையில் முன்முடிவுகளுடன் படிப்பவர்களுக்கு அல்ல என்கின்றார், அப்படி என்றால் பொ.செ நாவலின் சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கவே கூடாது. மணிமேகலைக்கு என்ன சரித்திர ஆதாரம் இருக்கின்றது.

சரித்திர நாவல்களில் எதை கற்பனை செய்யலாம் என்ற தெளிவு வேண்டும். உரையாடல்களை கற்பனைதான் செய்ய முடியும், சில சம்பவங்களை சரித்திர உண்மைகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்து கொள்ளலாம். சில புதிய பாத்திரங்களை சேர்க்கலாம். ஆனால் ஒருவனின் அப்பனை மாற்றுவதற்கு எல்லாம் இந்த நாவலாசிரியர்களுக்கு எவன் உரிமை தந்தது. சுந்தர சோழனின் மகன் ராஜராஜன் அவ்வளவுதான். இதுதான் சரித்திர உண்மை. ராஜராஜன் பிறந்த ஆண்டு, மாதம், நட்சத்திரம் அனைத்தயும் கல்வெட்டுகள் என்று பல சான்றுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுள்ளனர்.  இதை கற்பனை உரிமை என்ற பெயரில் மாற்றுவது என்பது வக்கிரம், ஆபாசம். இதை ஒரு சாதனையாக, பெருமையாக பேசிக் கொள்வது அதைவிட வக்கிரம். உண்மையை கண்டுபிடித்து மக்களுக்கு சொல்வது எல்லாம் சரித்திர பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆதரங்கள் அடிப்படையில் செய்யவேண்டியது, விட்டத்தை பார்த்து கற்பனையில் அடித்துவிட்டு அதைப் பற்றி பெருமிதம் கொள்ளவும் ஒரு அசட்டு துணிச்சல் வேண்டும். இது கற்பனை நாவல் என்ற வகையில் விட்டு விடலாம் என்றாலும், அந்த முன்னுரையில் தென்படும் அசட்டு துணிச்சல்தான் இவ்வளவு எழுத வைத்துவிட்டது. 

முன்னுரையில், "சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் ஆதித்த கரிகாலன் கொலைதான், பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்த பகுதிக்குள் சங்கதாரா என்னும் தோணியில் சென்றுவிட்டு பத்திரமாக திரும்பி வந்துள்ளேன்" என்கின்றர். அவர் வந்துவிட்டார், அதை பிடித்து சென்ற வாசகர்கள்தான் சொற்களின் மழையில் சிக்கி, தர்க்க மீறல்களில் தடுக்கி விழுந்து, பயங்கர திருப்பங்களில் உருண்டு, கடைசி பக்கங்களில் வரும் வாக்குமூல மழையில் நனைந்து சிக்கி, சின்னாபின்னமாகி வரவேண்டியுள்ளது. 

எதற்கு படித்தோம் என்று நொந்து கொண்ட நாவல், நன்மையே, இனி இவரின் மற்ற நாவல் பக்கம் போகமலிருப்பேன். நல்லவேளை காசு கொடுத்து வாங்கவில்லை, வாங்கிய எவருக்கோ  என் ஆழ்ந்த நன்றிகள். 

படிக்கலாமா வேண்டாமா என்பதை இனி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக