02 மார்ச் 2022

கு.ப.ரா கதைகள்

கு.ப.ராஜகோபாலன் நாற்பதுகளில் எழுதிவந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகளை தொகுத்து அழிசி பதிப்பகம் கிண்டில் பதிப்பாக வெளியிட்டது. வெளியிட்டதை சில நாட்கள் இலவசமாகவும் தந்தது. மாதொருபாகன் புத்தகத்தால் உலகப்புகழ் பெற்ற பெருமாள் முருகன் என்னும் பேராசிரியர் ஏற்கனவே கு.ப.ராவின் கதைகளை தொகுத்து, அதை காலச்சுவடு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் தொகுத்த அதே கதைகளை அழிசியும் வெளியிட்டதால் பிரச்சினையாகி அமேசான் அழிசி வெளியிட்டதை நீக்கி விட்டது. ஏற்கனவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சு நூல்களுக்கும் இதே கதிதான். அழிசி குபராவின் கதைகளை ரிவர்ஸ் ஆர்டரில் வெளியிட்டு இருக்கலாம். இலவசமாக கிடைத்த ஒன்றிரண்டு நாட்களில் வாங்கியது. 

குபரா தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கவிஞர் நா. பிச்சமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.சொந்த ஊர் கும்பகோணம், திருச்சியில் படிப்பு, மதுரை மேலுரில் வேலை. பின் பார்வைக் குறைபாடால் அரசு வேலையை விட நேர்ந்தது. பார்வை குறைபாடு இருந்த காலத்தில்  குபரா சொல்ல சொல்ல  அவரது சகோதரி எழுதுவாராம். பின்னர் மணிக்கொடி ஆசிரியர் வேலை, புத்தகக்கடை என்று அலைந்து திரிந்து காங்கரின் நோயால் 42ம் வயதில் மறைந்தார். குபரா, கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் போது தி.ஜா அவருடன் நெருங்கி பழகினார். மோகமுள்ளில் வரும் எழுத்தாளர் பாத்திரம் குபராதான் என்று எங்கோ படித்த நினைவு. தி.ஜாவின் நாவல்களை விட எனக்கு அவரது சிறுகதைகளே அதிகம் பிடிக்கும், அவரே குபரா எழுதுவது போன்று ஒரு வரி எழுதிவிட்டால் போதும் என்கின்றார். அந்தளவு அவர் குபரா மீது மதிப்பு வைத்துள்ளார். 

தமிழின் முதல் சிறுகதை என்று வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் கதையை சொல்வார்கள். நாவல் எழுதுவதை விட சிறுகதை எழுத அதிக திறமை வேண்டும். சிறுகதைகளில் பலர் பலவித பரிசோதனை முயற்சிகளை செய்துள்ளனர். கல்கி, புதுமைபித்தன், குபரா அனைவரும் கிட்டத்திட்ட ஒரே காலகட்டத்தில் எழுதி வந்தனர். கல்கி எழுதிய அனைத்து சிறுகதைகளையும் படித்துள்ளேன். கல்கி எழுதியது அனைத்தையும் பெரும்பாலும் பிரச்சார வகையிலேயே சேர்க்க வேண்டும். ஒன்றிரண்டு கதைகள் தேரலாம். புதிய முயற்சிகள் என்று பெரும்பாலும் இல்லை. குபரா எந்தளவிற்கு அக்காலத்தில் பிரபலமாக இருந்தார் என்று தெரியவில்லை. அவரும் கலைமகள் போன்ற இதழ்களிலும் எழுதியுள்ளார். ஆனால் அவர் பெயர் இன்றுள்ள பலருக்கு தெரியுமா என்று சந்தேகம். 

குபராவின் சரித்திரக் கதைகளையும், சமூகக் கதைகளையும் எழுதியுள்ளார். சரித்திரக்கதைகள் அந்தளவு பெரிதாக கவரவில்லை. புத்தர் கால அரசர்கள், நாயக்கர் காலம், ராஜபுத்திரர்கள் பற்றியவை என்று அனைத்தும் கலந்து உள்ளது. 

சமூகக்கதைகள் என்றாலும் பெரும்பாலும் அவை பேசுவது ஆண் பெண் உறவு. இழந்த காதல் பற்றிய ஏக்கத்தையே பல வித வடிவங்களில் எழுதியுள்ளார். ஆனால் சிறுகதை என்ற வடிவத்தில் மிகக் கச்சிதமாக அமர்கின்றது. ஆண் பெண் உறவு என்றாலும், சித்தரிப்புகளிலோ, உரையாடல்களிலோ எங்கும் வக்கிரமோ, ஆபாசமோ கிடையாது. சிக்கலான இடங்களை லாவகமாக தாவி செல்கின்றது. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றுகின்றது. ஒரு சிக்கலான கட்டத்தை காட்டி நின்று விடுகின்றது. மனித மன ஏக்கங்களை, வக்கிரங்களை ஒரு கோடு காட்டிவிட்டு என் பணி முடிந்தது என்று கதை முடிகின்றது. புதுமைப்பித்தனின் சில கதைகளில் கூட ஆசிரியர் குரல் ஒலிக்கும், குபராவின் கதைகளில் அது கிடையாது. ஆனால் படிக்கும் போது புதுமைப்பித்தனின் நினைவு வந்தது. அவரிடம் இருக்கும் குசும்பு எல்லாம் இல்லை. தேவையில்லாத சொற்களே இல்லை என்பது மாதிரியான கதைகள்தாம். நாற்பதுகளில் இது போன்று எழுதுவது என்பது சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கும், ராஜாஜியே சில விஷயங்களை எழுதுவது சரியானதல்ல என்று குபராவை குறிப்பிட்டு சொன்னதாக செய்தி. இருந்தும் அதை சொன்னவிதத்தில்தான் அவரது மேதமை வெளிப்படுகின்றது. பெரும்பாலும் பிராமண மேல்தட்டு குடும்பங்களை மையமாக கொண்டே எழுதப்பட்ட கதைகள். பல கதைகள் பால்ய விவாக காலத்தவை, சிறுவயதில் திருமணம் செய்து கொண்ட பின் மனைவியை காண காத்திருப்பது, இடைப்பட்ட காலத்து கலகங்கள், முறைப்பையன் , முறைப்பெண் என்று உருவேற்றி பின்னால் வேறு எங்கொ கொடுப்பது இவற்றிற்கெல்லாம் இன்று காலமில்லை. ஆனால் அவை உண்டாக்கும் உணர்வுகள், சிக்கல்கள் வேறு வகையில் வந்து கொண்டிருக்கலாம். 91 சிறுகதைகள் உள்ளன அனைத்தையும் என்னால் மிகச்சிறந்தவை என்று கூற முடியாது. குறைந்தது ஒரு 20 கதைகள் மிகச்சிறப்பானவை என்று கூற முடியும். சிறிது வெளிச்சம், திரை போன்றவை.

ஜெயமோகன் குபராவின் பெண்கள், வங்க இலக்கியத்தின் பாதிப்பு என்கின்றார். கணவன் இல்லாத நேரத்தில், கணவனின் நண்பன் இருக்கும் அறைக்கு வந்து படுக்கையை போடும் பெண்கள் எல்லாம் வங்க இலக்கியத்தில் வருவது போன்ற பெண்க என்கின்றார். வங்க நாவல்கள் பற்றி ஏதும் தெரியாது, இருக்கலாம். இன்றும் அது மாதிரி நடப்பது அரிதுதான். திரும்ப திரும்ப எழுதினாலும் அவருக்கு எழுதத் தீராமல் இருந்திருக்கின்றது. 

சாரு நிவேதிதா அவரது பழுப்பு நிறப் பக்கங்கள் நூலில் அவரைப் பற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளை தொகுத்துள்ளார்.

கிண்டிலில் அழிசி மீண்டும் வெளியிட்டால் வாங்கலாம்.

குபராவின் வாழ்க்கைக் குறிப்பு

ஜெயமோகனின் குறிப்புகள் - பகுதி 1 , பகுதி 2     

அழிசி பதிப்பகம் இலவசமாக வெளியிட்டதன் பின்கதை

குபரா எழுதிய பல கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில்

எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக