29 ஜூன் 2022

பேட்டை - தமிழ்ப்பிரபா

வட்டார வழக்கை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். வட்டார வழக்கில் முக்கிய இடம் வகிப்பது அதன் ராகமும், ஏற்ற இறக்கமும். "ஏய் என்னாப்பா" என்பது மதுரையில் ஒரு வகையிலும், கோம்பையில் வேறு மாதிரியும் ஒலிக்கும். அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே உணர முடியும். இதை எழுத்தில் ஓரளவிற்கே கொண்டுவர முடியும். அதை பலர் வெற்றிகரமாக செய்துள்ளனர். சுகா, ஜெயமோகன், சோ.தர்மன், ஜோ.டி.க்ரூஸ், வைரமுத்து, வெங்கடேசன், கி.ரா போன்றவர்கள்  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோவில், நாஞ்சில் நாடு, கோவை, தஞ்சை,மதுரை, தேனி வட்டர வழக்குகளில் பல நாவல்களை எழுதியுள்ளனர். 

சென்னை வழக்கில் எந்த நாவலும் படித்ததில்லை இதுவே முதல். ஜெயகாந்தன் ஒன்றிரண்டு கதைகளில் எழுதியிருந்தாலும் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. சோ சில அரசியல் நையாண்டிகளில் பயன்படுத்தியிருந்தது எனக்கு கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது. இந்த நாவலில் எங்கும் வட்டார வழக்கு செயற்கையாக தெரியவில்லை. சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயிலில் சென்று வரும்போது கேட்ட அந்த மொழியை படிக்க முடிந்தது.  இயல்பாக அந்த மொழியை பேசினாலும், அதை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

சிந்தாதரிப் பேட்டை எனப்படும் சின்னத்தறிப் பேட்டை, பறக்கும் ரயிலில் செல்லும் போது கண்ணில் படும் ஒரு ஸ்டேஷன். அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹவுசிங்க் போர்ட் மக்களை பாத்திரங்களாக்கி எழுதப்பட்ட நாவல். சின்னதறிப்பேட்டை வரலாற்றை ஒரு சில பக்கங்களில் கூறிவிட்டு, இன்றைய காலத்திற்கு வந்துவிட்டார். 

ஆங்கிலேயர்களால், தறி போடும் நெசவாளர்களுக்காக உண்டாக்கப்பட்ட சிறிய குடியிருப்பு பகுதி, சின்னத்தறி பேட்டை. கூவம் ஆற்று நீரை குடிக்க பயன்படுத்திய காலத்தில் உண்டாக்கப்பட்ட பகுதி.  நெசவாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி, மெதுவாக வளர்ந்து சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக மாறுவதையும், தேங்காய தண்ணீர் போன்ற நீர் ஓடிய கூவம் இன்றைய கூவம் ஆவதையும் சில பக்கங்களில் முடித்துவிட்டார். பலர் கூறுவது போல, சின்னத்தறிப் பேட்டையின் வரலாறு என்று எல்லாம் நினைத்து கொண்டு படிக்க ஆரம்பிக்க வேண்டாம். ஆனாலும் அந்த சிறிய வரலாற்றில் பல சமூக விஷயங்களை தொட்டுவிட்டுதான் போகின்றார், அங்கு குடியேறியவர்களின் ஜாதி படி நிலைகள், அன்றிருந்த சமூக விஷயங்கள், துரோகங்கள் பற்றி ஒரு சின்ன சித்திரம். சென்னையின் பூர்வகுடிகள் பற்றிய நாவல் என்று யாரோ எழுதியிருந்தனர், சென்னைக்கு யார் பூர்வகுடி? பெரும்பாலனவர்கள் ஏதோ ஒரு காலத்தில் வந்த வந்தேறிகள்தான். யார் முன்னே வந்தது பின்னே வந்தது என்று வேண்டுமென்றால் பேசிக் கொள்ளலாம். 

நாவலின் களம் இன்றைய ஃபேஸ்புக் காலம்தான். மனபிளவு நோயை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். கூவம் நதிக்கரைக்கு திருமணமாகி வரும் புதுப்பெண் ரெஜினா, அவரது மாமியாரைப் பற்றி கேட்டு கேட்டு, மாமியாராக மாறி பாஸ்டரால் குணப்படுத்தப்படுகின்றாள். அதன்பின் மாதாவை வணங்கும் கிறிஸ்துவத்திலிருந்து தீவிர கிறிஸ்துவராக மாறும் அவரின் மகன் ரூபன் அதே சிக்கலில் சிக்கி வெளியே வருவதுதான் நாவல். 

நாவலை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம், ரூபன் வளர்ந்து வேலைக்கு போகும் வரை ஒரு க்ளாசிக் போல வளரும் நாவல், ரூபன் வேலைக்கு செல்லும் இரண்டாம் பகுதியில் சராசரியாக மாறுகின்றது. நாவலின் பேச்சு வழக்கு இயல்பாக, அதை நமக்குள் கற்பனை செய்ய வைக்கின்றது. சென்னையில் மின்சார ரயிலில் செல்லும் போதும் காதில் விழும் அந்த தமிழின் இன்னும் ராவான வடிவம். சென்னைக்கே உரிய சில வார்த்தைகள், சென்னைக்காரர்களுக்கு அது சாதாரணம், தெற்கே வந்து பேசினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கலாம். அதுவும் நாவலில் வருகின்றது. ஒரு முறை இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசுவதை சென்னை ரயிலில் கேட்டு கொண்டே வந்தேன், எத்தனை முறை சென்னையில் ப்ரேத்தியேக வார்த்தை வருகின்றது என்று எண்ணிக் கொண்டே வந்தேன். எக்மோரில் ஆரம்பித்து கோடம்பாக்கம் தாண்டுமுன் நூறை தாண்டி, சைதாப்பேட்டை வரும் முன் கணக்கு தவறி விட்டது. ஒரு வார்த்தை கமா, புல்ஸ்டாப் போல பயன்படும் என்பதை அன்றுதான் அறிந்தேன். நாவல் முழுக்க அது போல பல வார்த்தைகள் விரவி கிடக்கின்றன, ஆனால் அது என்னவோ ஆபாசமாக தோன்றவில்லை. திருநெல்வேலி, கோவில்பட்டி வழக்கில் எழுதப்பட்ட நாவலில் தா...ளி என்று வந்தால் அது சாதரணமாக தோன்றும் அது மாதிரி ஆகிவிட்டது. 

முதற்பகுதியில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் ரத்தமும், சதையுமான பாத்திரங்களாக வருகின்றனர். நாவல் ஆரம்பிக்கும் போது கிட்டத்திட்ட அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பது போன்றும், அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்த பாத்திரங்கள் போலவும் உள்ளது. நகோமியம்மாள், மாசிலாமணி, தவுடா சோறு பாலு, குட்டி குட்டி பாத்திரங்களாக வரும் ஜாண்டி, டாடி, மாசிலா, பூபாலன். பாத்திரங்களும், சித்தரிப்புகளும், சம்பவங்களும் இயல்பாக உள்ளன. சிறுவர்கள் மாஞ்சா போட அலைவது, கேரம் போர்ட் விளையாட்டின் முக்கியத்துவம், கிறிஸ்துவம் எப்படி உள்ளே நுழைந்தது என்பது எல்லாம் சுவரஸ்யமாக, ஆசிரியர் இருப்பு ஏதுமின்றி வருகின்றன. ஏழ்மையையும், வியாதியையும் எப்படி மதம்மாற்ற பயன்படுத்தி கொள்கின்றார்கள், கிறிஸ்தவராக இருந்தாலும் அங்குள்ள வேறுபாடுகள், சபைகளின் காணிக்கை வசூல், கிறிஸ்துவத்தின் மீதல்லாது, சபையின் மீதுள்ள விஸ்வாசம் என்பது எல்லாம் சிறுசிறு குறிப்புகளில் வருகின்றது. 

ஆனால் ரூபன் பாத்திரம் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததும், அனைத்தும் செயற்கையாக மாறுகின்றன. நாவலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து கொள்கின்றார். ரூபன் ஃபேஸ்புக்கில் அலைவது, அவனது காதல்கள், நாவல் எழுத நினைப்பது எல்லாம் ஒரு வித கேலித்தனத்துடன் எழுதப்பட்டு, ஆசிரியர் இருப்புடன் வருகின்றது. அலுப்புதட்டும் ஃபேஸ்புக் நடையாகவும் மாறுகின்றது. ரூபனின் அலுவலக நண்பர்கள் பாத்திரங்கள் அனைத்தும் செயற்கையாக, ஐடி துறையினரைப் பற்றி அனைவரிடமும் இருக்கும் ஒரு கற்பனைக்கு தோதாக எழுதப்பட்டுள்ளன. படிக்க ஒரு வித அயற்சியை ஏற்படுத்தி, பக்கங்களை தாண்டினால் போதும் என்று நினைக்க வைக்கின்றது. 

ஜாதி வேறுபாடு என்றால் பிராமணர்களைப் பற்றி பேசாமல் எப்படி, நாவலில் குறிப்பிடப்படும் ஒரே ஜாதி பிராமண ஜாதி மட்டும். நல்ல பிராமணர்கள், சிந்தாதறிப் பேட்டையில் வந்து மாட்டுக்கறி தின்று விட்டு போகின்றனர், மோசமான பிராமணன் அலுவலகத்தில் இம்சை தருகின்றான். இரண்டாம் பகுதி ஃபேஸ்புக் ஸ்டைல் நாவலில்லையா அப்படி இருக்க வேண்டியதுதான்.  ரூபனின் அலுவலகம், அலுவலக நண்பர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் படு செயற்கை. 

ரூபனின் நண்பன் பாத்திரம் வெகு அழகாக வந்துள்ளது, அந்த பகுதி மக்களின் வாழ்க்கைதரத்திலிருந்து ஒரு படி முன்னேறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன், அடுத்த படி முன்னேறவும் ஆசை, அதே சமயம் அவர்கள் வாழ்ந்த அந்த சூழலிலும் வாழ பயம், தயக்கம், இரண்டு பக்கமும் மாறி மாறி அலைந்து வாழ்வை தொலைக்கும் ஒரு பாத்திரம் செளமியன். இளவயதில் நெருங்கிய நண்பனின் மரணம், உறவினர்களின் மரணத்தைவிட  அதிகம் பாதிக்க கூடியது, அது ஓரளவிற்கு நாவலில் காட்டப்படுகின்றது. அது போன்ற உயிரோட்டமான காட்சிகளும், செயற்கை போலி காட்சிகளும் வரும் பகுதி சர்க்கரை பொங்கலுடன் ஊசி போன சாம்பரை சேர்த்தது போல உள்ளது. 

பேட்டை நாவலை சென்னையில் அசல் மனிதர்களை காட்டும் பகுதிகளுக்காக படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக